10 Years Of Pannaiyarum Padminiyum: கார் வைத்து கதை சொன்ன பண்ணையாரும் பத்மினியும் 10ம் ஆண்டில்..!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  10 Years Of Pannaiyarum Padminiyum: கார் வைத்து கதை சொன்ன பண்ணையாரும் பத்மினியும் 10ம் ஆண்டில்..!

10 Years Of Pannaiyarum Padminiyum: கார் வைத்து கதை சொன்ன பண்ணையாரும் பத்மினியும் 10ம் ஆண்டில்..!

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 07, 2024 06:40 AM IST

கார் என்ற பொருளை கதாபாத்திரம் ஆக மாற்றி அதன் மீது காதலாய் திரியும் மனிதர்களுடைய உணர்வுகளை மட்டும் உள்ளடக்கமாய் கொண்டு இரண்டரை மணி நேரம் திரைக்கதை அமைத்து இயக்கியதில் அருண்குமார் வெற்றி கண்டிருக்கிறார்.

கார் வைத்து கதை சொன்ன பண்ணையாரும் பத்மினியும் 10ம் ஆண்டில்..!
கார் வைத்து கதை சொன்ன பண்ணையாரும் பத்மினியும் 10ம் ஆண்டில்..!

இந்த கதையை பொருத்தவரை ஒரு சின்ன முடிச்சு தான். அதையும் திரைக்கதை அமைத்து நம்மையும் பத்மினி காரில் பயணம் செய்ய வைத்ததுதான் இயக்குநர் அருணின் திறமை எனலாம். மனிதர்கள் உனர்வுகளை நிஜமாக இயல்பாக காட்டிய படத்தை பத்தாண்டுகளை கடந்த இன்றும் கூட சுவாரஸ்யமாக பேச வைக்கிறது. ஆம் 2014 பிப்ரவரி 7 ல் வெளிவந்த படம். இந்த படத்தில் சண்டை காட்சிகள், பழிவாங்கும் சூழ்ச்சி, வெட்டும் குத்துமாய் ரனகளம் என்று எதுவும் கிடையாது. படத்தில் வில்லன் கூட இல்லை என்பது ஆச்சரியம் தான்.

கதையின் நாயகன் ஜெயப்பிரகாஷ், நாயகி துளசி என்று சொல்லலாம். விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் செகன்ட் ஹீரோ, ஹீரோயின் மாதிரி தான். கலகலப்பு கூட்ட பாலசரவணன் பண்ணையாரின் வீட்டில் இருக்கும் வேலைக்காரர் "பீடை" என்ற வேடத்தில். இவர்களோடு நீலிமா ராணி, சினேகா, அட்டகத்தி தினைஷ் ஆகியோர் கதையை இன்னும் கொஞ்சம் நகர்த்த உதவுகிறார்கள்.

கிராமத்தின் பண்ணையார் ஜெயபிரகாஷ் அவரின் மனைவி துளசி இருவரும் அந்த ஊரில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆதரவாகவும் அன்பாகவும் இருப்பவர்கள். அவர்கள் வீட்டில் உள்ள தொலைபேசி, தொலைக்காட்சி பெட்டி என்று அனைத்து விஞ்ஞான வளர்ச்சி பொருட்களும் கூட கிராம மக்களின் பயன்பாட்டில் இருக்கும். அந்த நேரம் பண்ணையாரின் நண்பர் வெளியூர் செல்வதால் அவருடைய பிரிமியர் பத்மினி காரை இவர் வீட்டில் விட்டு செல்வார். காரை விடும் போது பண்ணையாரிடம் காரை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு செல்கிறார்.

பத்மினி காரின் மீதான பாசமும் காதலுமாய் நகர்கிறது கதை. கார் டிரைவராக விஜய் சேதுபதி நியமிக்க பாலசரவணன் கிளினராக மாறி விடுகின்றார். ஒரு கட்டத்தில் பச்சை நிற பத்மினி கார் மீது பண்ணையாரையும் தாண்டி துளசியும் டிரைவர் முருகேசன் ஆன விஜய் சேதுபதி ஊர் மக்கள் என எல்லோரும் காதலிக்கும் பொருளாக மாறி விட்டது. பண்ணையார் காரை ஓட்டி சென்று திருமண நாளில் சாமி கும்பிட வேண்டும் என்பது பண்ணையார் மனைவி செல்லம்மாளுக்கு ஆசை. 

அவர் ஓட்ட பழகிவிட்டால் காரை விட்டு பிரிந்து விடுவோமே என்ற கவலை முருகேசனுக்கு. முடிவில் காரை விட்டு பிரிந்தார்களா ? என்ன ஆனது? என்பதை அத்தனை யதார்த்தமான நடிப்பால் அனைவரும் நம்மை படத்தோடு கனெக்ட் செய்து விடுவார்கள். ஐம்பது தாண்டிய வயதில் பண்ணையாரும் அவரது மனைவியும் முறைத்து கொள்வதும் விறைப்பு காட்டுவதும் முட்டி கொள்வதும் ஒட்டி கொள்வதுமாய் காட்சிகள் எல்லாம் அவ்வளவு ரம்மியம்.

இந்த திரைப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்திருக்கிறார். மொத்தத்தில் ஐந்து பாடல்கள். அதிலும் "உனக்காக பொறந்தேனே எனதழகா " பாடல் இப்போதும் கேட்க தோன்றும்.

கார் என்ற பொருளை கதாபாத்திரம் ஆக மாற்றி அதன் மீது காதலாய் திரியும் மனிதர்களுடைய உணர்வுகளை மட்டும் உள்ளடக்கமாய் கொண்டு இரண்டரை மணி நேரம் திரைக்கதை அமைத்து இயக்கியதில் அருண்குமார் வெற்றி கண்டிருக்கிறார். மொத்தத்தில் பத்மினி கார் பயணம் நமக்கு சின்னதாக அங்கங்கே அலுப்பு தட்டினாலும் கூட இனிமையான பயண அனுபவம் எனலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.