Amit Shah's Election Campaign: அமித் ஷாவின் தமிழக சுற்றுப் பயணம் திடீர் ரத்து..என்ன காரணம்?
Lok sabha Election 2024: மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் பாஜக 19 தொகுதிகளிலும், பாமக 10 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும், தமாகா 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன.
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தில் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. தமிழக அரசியல் தலைவர்களின் பிரசாரத்துக்கு மத்தியில் தேசிய தலைவர்களும் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களையும், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரத்தில் போட்டியிடும் பாஜக கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை (ஏப்ரல் 04) மதுரை வருவதாகவும், தேனி, ராமநாதபுரம், சிவகங்கைக்கு சாலை மார்க்கமாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க உள்ளதாகவும், மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் அவர் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், உடல்நலக்குறவு காரணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், நாளையும், நாளை மறுநாளும் அமித் ஷா கலந்துகொள்ள இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அமித் ஷாவின் தமிழக தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் எப்போது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் 2024
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 அன்று முடிந்துவிட்டது . வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிவடைந்த நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9