BJP Vs DMK: தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.. ஸ்டாலினுக்குதான் தோல்வி பயம்!வானதி சீனிவாசன் விளாசல்-the people of tamil nadu will not believe vanathi srinivasan says stalin is afraid of failure - HT Tamil ,தேர்தல்கள் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Bjp Vs Dmk: தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.. ஸ்டாலினுக்குதான் தோல்வி பயம்!வானதி சீனிவாசன் விளாசல்

BJP Vs DMK: தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.. ஸ்டாலினுக்குதான் தோல்வி பயம்!வானதி சீனிவாசன் விளாசல்

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 24, 2024 10:26 AM IST

BJP Vs DMK: சி.ஏ.ஜி., அறிக்கையில் உள்ள சிலவற்றை சுட்டிக்காட்டி பாஜக ஆட்சியில் ரூ. 7 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாக, கடந்த 6 மாதங்களுக்கு பேசியதை, திருச்சி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் பேசியிருக்கிறார். ஸ்டாலின் கூறுவது உண்மையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள்.

 வானதி சீனிவாசன் - முதல்வர் ஸ்டாலின்
வானதி சீனிவாசன் - முதல்வர் ஸ்டாலின்

மார்ச் 22-ம் தேதி திருச்சியில் நடைபெற்ற திமுக தேர்தல் பிரசார தொடக்க பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தன்னுடைய ஆட்சி முடியப் போகிறது என்று பிரதமர் மோடிக்கு தூக்கம் வரவில்லை. தோல்வி பயம் பிரதமரின் மோடியின் முகத்திலும், கண்களிலும் நன்றாகத் தெரிகிறது" என்ற போகிற போக்கில் வார்த்தைகளை அள்ளித் தெளித்திருக்கிறார்.

இந்திய வரலாற்றில், ஏன் உலக வரலாற்றிலேயே பிரதமர் மோடி அளவுக்கு மக்கள் ஆதரவைப் பெற்ற தலைவர்கள் யாரும் இருக்க முடியாது. குஜராத் சட்டமன்றத் தேர்தலில் மூன்று முறை, இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் இரு முறை என தொடர்ந்து ஐந்து முறை மோடியின் தலைமையை பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலிலும் வென்று மூன்றாவது முறையாக பிரதமராகி ஹாட்ரிக் சாதனை படைக்கவிருக்கிறார்.

இதை பாஜக சொல்லவில்லை. "400 தொகுதிகளைத் தாண்டி பாஜக வெற்றிபெறும்" என திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களே மாநிலங்களவையில் தெரிவித்தார். இதை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். 23 ஆண்டுகளாக தோல்வியையே காணாத தலைவர் பிரதமர் மோடிக்கு எப்போதும் வெற்றிதான். தனது உயிரைப் பற்றியே கவலைப்படாமல் மக்களைச் சந்திக்க திறந்த வாகனத்தில் வரும் பிரதமர் மோடிக்கு தோல்வி பயம் எனக் கூறுபவர்களைக் கண்டு மக்கள் நகைக்கவே செய்வார்கள். தோல்வி பயம் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட 'இண்டி' கூட்டணி தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மழை, வெள்ள பாதிப்புகளின்போது வராத பிரதமர் மோடி, தேர்தலுக்காக வருவதாக திருச்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார். தென் மாவட்டங்கள் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, மாநில முதலமைச்சரான ஸ்டாலின், சில நிமிடங்கள் வந்து சென்றார். ஆனால், ஆயிரக்கணக்கான பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மக்களோடு மக்களாக இருந்து நிவாரண உதவிகளை வழங்கினார். யார் தங்களுக்கு உதவியது என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். முரசொலியை மட்டும் படிப்பவர்கள் வேண்டுமானால் ஸ்டாலினின் சொல்வதை நம்பலாம். தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.

21 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் திமுக தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 1,000 கோடி வரை நிதி பெற்றுள்ளது. அதுவும் லாட்டரி விற்கும் ஒரு நிறுவனத்திடம் இருந்து ரூ. 500 கோடி பெற்றுள்ளது. ஆனா், 450க்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிடும் பாஜக நிதி பெற்றது பற்றி முதலமைச்சர் திருச்சி கூட்டத்தில் குறை கூறியிருக்கிறார். தேர்தலில் கருப்பு பணம் புழங்குவதை தவிர்க்கவே, தேர்தல் பத்திர திட்டத்தை பாஜக கொண்டு வந்தது. முறைப்படி வங்கிகள் மூலம் நிதி பெற்றால் அதையும் குறை கூறுகிறார்கள்.

சி.ஏ.ஜி., அறிக்கையில் உள்ள சிலவற்றை சுட்டிக்காட்டி பாஜக ஆட்சியில் ரூ. 7 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாக, கடந்த 6 மாதங்களுக்கு பேசியதை, திருச்சி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் பேசியிருக்கிறார். ஸ்டாலின் கூறுவது உண்மையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள். அதைவிடுத்து வெற்றுக் கூச்சல் போட்டு பலனில்லை. மோடி ஊழல்வாதி என்று கூறினால் அவர்களுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக, அவர்களின் பண்டிகைகளுக்கு கூட வாழ்த்துச் சொல்ல முடியாத அளவுக்கு வெறுப்பை கக்கும் ஒருவர், பாஜகவை நோக்கி பாசிச கட்சி என்கிறார். 'தந்தை - மகன் - பேரன்' என கட்சித் தலைவர், முதலமைச்சர் பதவியை அபகரிக்கும் ஒரு கட்சிக்கு, மற்ற கட்சிகளை பாசிச கட்சி என்று கூற எந்த உரிமையும் இல்லை. ஜூன் 4ம் தேதி பிரதமர் மோடி தூக்கத்தை தொலைக்கப் போகிறார் என்று ஸ்டாலின் பேசியிருக்கிறார். ஜூன் 4ம் தேதிக்குப் பிறகு ஸ்டாலின் மட்டுமல்ல இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களும் தங்களது தூக்கத்தை தொலைக்கப் போகிறார்கள்.

தமிழகத்தில், தமிழர்கள் இருக்கும் இடத்தில் மட்டுமல்லாது, செல்லும் இடங்களில் எல்லாம் தமிழ் மொழியின், தமிழர்களின் கலாசார சிறப்பை பற்றி பேசி வரும் ஒரே பிரதமர் மோடி மட்டுமே. அவரை நோக்கி தமிழ் மீதும், தமிழ்நாட்டின் மீதும், தமிழர்களின் மீதும் இவ்வளவு வெறுப்பு ஏன்? என கேட்கிறார் ஸ்டாலின

தமிழகத்தில் மோடிக்கு ஆதரவு பெருகி விட்டதே என்ற பதற்றத்தின் வெளிப்பாடுதான் இந்த பேச்சு. கட்சியின் பெயரில் கூட தமிழ், தமிழ்நாடு, தமிழர்களை புறக்கணித்தவர்கள், பெயரைக் கூட தமிழில் வைக்க முடியாதவர்கள் தமிழைப் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் திமுக ஆட்சியில் தமிழ் எவ்வாறெல்லாம் அழிக்கப்பட்டது, திராவிடம் என்ற பெயரில் நடந்த, நடந்து வரும் தமிழ், தமிழ்நாடு, தமிழர் அடையாள அழிப்பு பற்றி தனி புத்தகம் தான் எழுத வேண்டும்.

1972ல் அதிமுக தொடங்கப்பட்ட பிறகு, 'திமுக எதிர் அதிமுக' என்றிருந்த தமிழக அரசியல் களம், இப்போது 'திமுக எதிர் பாஜக' என மாறியுள்ளது. திருச்சி கூட்டத்தில் முதமைச்சர் ஸ்டாலின் தனது பேச்சு மூலம் அதை உறுதிப்படுத்தியிருக்கிறார். பொய்யும், புரட்டுகளும் அடங்கிய முதலைச்சரின் உரைக்கு ஏப்ரல் 19ம் தேதி தமிழக மக்கள் பதில் சொல்வார்கள்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.