தமிழ் செய்திகள்  /  Elections  /  Sowmiya Anbumani Will Contest In Dharmapuri Constituency

Sowmiya Anbumani: தருமபுரி பாமக வேட்பாளர் திடீர் மாற்றம்..புது வேட்பாளர் யார் தெரியுமா?- வெளியானது முக்கிய அறிவிப்பு!

Karthikeyan S HT Tamil
Mar 22, 2024 06:48 PM IST

Dharmapuri constituency: தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். தருமபுரியில் பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அரசாங்கத்திற்கு பதில் அன்புமணியின் மனைவி செளமியா அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 செளமியா, அன்புமணி
செளமியா, அன்புமணி

ட்ரெண்டிங் செய்திகள்

பாஜக கூட்டணியில் தருமபுரி தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தருமபுரி தொகுதியில் பாமக சார்பில் வேட்பாளராக அரசாங்கம் என்பவர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பாரதிய ஜனதா கட்சி 19 தொகுதிகளிலும், பாமக 10 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன.

பாஜக-பாமக கூட்டணி

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் 19ஆம் தேதி அன்று பாமக -பாஜக கட்சிகள் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ராஜ்யசபா தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது குறித்து ஒப்பந்தத்தில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

பாமக வேட்பாளர் பட்டியில் வெளியீடு

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருந்தார். அதன்படி, திண்டுக்கலில் கவிஞர் ம.திலகபாமா, அரக்கோணத்தில் வழக்கறிஞர் கே.பாலு, ஆரணியில் முனைவர் அ.கணேஷ் குமார், கடலூரில் தங்கர் பச்சான், மயிலாடுதுறையில் ம.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சியில் இரா. தேவதாஸ் உடையார், தருமபுரியில் அரசாங்கம், சேலத்தில் அண்ணாதுரை, விழுப்புரத்தில் முரளி சங்கர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர். காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் விரைவில் அறிவிக்கப்படுவார் என பாமக அறிவித்திருந்தது.

தருமபுரி வேட்பாளர் மாற்றம்

தருமபுரி தொகுதியில் பாமக சார்பில் வேட்பாளராக அரசாங்கம் என்பவர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.  "2024 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தருமபுரி மக்களவைத் தொகுதியில் அரசாங்கம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்படுகிறது. "என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி நடந்து வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்