தமிழ் செய்திகள்  /  Elections  /  Sources Say That Bjp State President Annamalai Is Going To Contest The Parliamentary Elections

Loksabha election 2024: ’நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணாமலை போட்டியா?’ பிரதமர் விடிய விடிய ஆலோசனை!

Kathiravan V HT Tamil
Mar 01, 2024 02:21 PM IST

”பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வதற்காக நேற்றிரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பிரதமர் நரேந்திர மோடி கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்”

பிரதமர் நரேந்திர மோடி உடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
பிரதமர் நரேந்திர மோடி உடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

ட்ரெண்டிங் செய்திகள்

வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தேர்தல் தேதியை இந்த மாதத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வதற்காக நேற்றிரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பிரதமர் நரேந்திர மோடி கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

இந்தக் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமைப்பின் பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், மாநிலத் தலைவர்கள், இணை பொறுப்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், அசாம், உத்தராகண்ட், கோவா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

சத்தீஸ்கர், ராஜஸ்தான், கேரளா, குஜராத், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், டெல்லி, தெலுங்கானா, அசாம், கோவா உள்ளிட்ட 17 மாநிலங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. நேற்றிரவு நடந்த கூட்டத்தில் கிட்டத்தட்ட 155 இடங்களுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உத்தரப் பிரதேசத்தில் 50 தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், ஆனால், முதல் பட்டியலில் உள்ள பெயர்களில் பாதியை வெளியிட பாஜக முடிவு செய்துள்ளதாகவும் பாஜகவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் 6 இடங்கள் உத்தரபிரதேசத்தில் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அப்னா தளம் (சோனேலால் படேல்) 2 இடங்களிலும், ராஷ்டிரிய லோக் தளம் 2 இடங்களிலும், ஓம் பிரகாஷ் ராஜ்பர் கட்சி 1 இடத்திலும், சஞ்சய் நிஷாத் கட்சி 1 இடத்திலும் போட்டியிட வாய்ப்புள்ளது.

உத்தரகண்டில் உள்ள ஐந்து இடங்களும் சி.இ.சி.யில் விவாதிக்கப்பட்டன, மேலும் கட்சியின் முதல் பட்டியலில் பெயர்கள் அறிவிக்கப்படலாம்.

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பாஜக தலைவர் பிரஹலாத் படேல் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் வி.டி.சர்மா ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அங்கு மத்திய பிரதேசத்தில் உள்ள 29 இடங்களுக்கும் வேட்பாளர்களின் பெயர்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன.

தெலுங்கானாவில் உள்ள 17 இடங்களில், 4-5 இடங்களுக்கான வேட்பாளர்கள் விவாதிக்கப்பட்டனர். முதல் பட்டியலில் இடம் பெறுவார்கள். ஜி.கிஷன் ரெட்டி, பண்டி சஞ்சய் குமார், அரவிந்த் ஆகிய மூன்று தற்போதைய எம்.பி.க்களும் மீண்டும் வாய்ப்பு தரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசாமின் மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. அசாமில் உள்ள 11 தொகுதிகளில் மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் திப்ருகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளது. அசாமில் பாஜக கூட்டணிக் கட்சிகளான ஏஜிபி மற்றும் யுபிபிஎல் ஆகியவற்றுக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும், நீங்களும் தேர்தலில் போட்டியிடுவீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, கட்சித் தலைமை உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிட தயார் என கூறி உள்ளார். 

WhatsApp channel