PM Modi Speech: கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்காக வேகமாக செயல்படுவோம் - பிரதமர் மோடி பேச்சு
மூன்றாவது முறை ஆட்சியின் போது கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்காக வேகமாக செயல்படுவோம் என்று பிரதமர் மோடி மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வந்தார். அங்கு அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நீலகிரி, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் பரப்புரை மேற்கொண்டார். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர், "கோவை கோணியம்மன், மருதமலை முருகனுக்கு என் வணக்கம் என்று கூறி, அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்" என பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "தமிழ்நாடு முழுவதும் பாஜக அலை வீசுகிறது. மீண்டும் ஒருமுறை மோடியின் ஆட்சி வர வேண்டும். மூன்றாவது முறை ஆட்சியின் போது கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்காக வேகமாக செயல்படுவோம்.
திமுக, காங்கிரஸ் ஆகிய வாரிசு கட்சிகள் பொய் சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர். இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அவர்களால், வறுமையை ஒழிக்க முடியவில்லை. நாட்டில் இருந்து வறுமை நீங்கவில்லை.
நமது தேசிய ஜனநாயகக் கூட்டனி ஆட்சிக்கு வந்ததும், 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம். பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததும் கோடிக்கணக்கான மக்களுக்கு வீடுகளை வழங்கியுள்ளது. ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்சாரம் வழங்கியுள்ளது. இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன
கொரோனாவுக்கு இந்தியாவில் மருந்து தயாரிப்போம் என்றபோது, எதிர்க்கட்சிகள் கிண்டலடித்தன. ஆனால், அதனை சாதித்துக் காட்டி உலக நாடுகளுக்கும் கொரோனா மருந்து கொடுத்தோம்
திமுக எப்போதும் வெறுப்பு அரசியலை செய்து கொண்டிருக்கிறது. அக்கட்சியின் கவனம் தமிழகத்தின் வளர்ச்சி மீது இருந்ததில்லை. கோவை தவிர தமிழகத்தில் 2 இடங்களில் மல்டிமோடல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க இருக்கிறோம். பாஜக வேட்பாளர்களின் வெற்றி தமிழக வெற்றிப் பாதைக்கான அச்சாரம்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
முன்னதாக, வேலூரில் நடந்த பிரசார கூட்டத்தை முடித்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி மேட்டுப்பாளையம் சென்றார். அங்கு தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன், கோவை வேட்பாளர் அண்ணாமலை, பொள்ளாச்சி வேட்பாளர் கே.வசந்தராஜன், திருப்பூர் வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், நாமக்கல் வேட்பாளர் கே.பி.ராமலிங்கம், ஈரோடு தொகுதியும், பாஜக கூட்டணியை சேர்ந்த தமாகா வேட்பாளருமான பி.விஜயகுமார், சேலம் தொகுதி பாஜக கூட்டணியை சேர்ந்த பாமக வேட்பாளர் ந.அண்ணாதுரை ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
முன்னதாக, இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழ்நாடு வந்திருக்கும் பிரதமர் மோடி, ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் ரோட் ஷோ நிகழ்த்தினார். தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம், வட சென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் ஆகியோரை ஆதரித்து தியாகராய நகர் பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரையிலான பாண்டி பஜார் சாலையில் சுமார் 2 கிமீ தூரத்துக்கு ரோடு ஷோ மூலம் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று வேலூர், கோவை, மேட்டுப்பாளையம் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்