Parliament Election 2024: ’மோடி மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே ராமரின் விருப்பம்!’ யோகி ஆதித்யநாத் பேச்சு!
பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது ராமரின் விருப்பம்: ஆதித்யநாத்
நரேந்திர மோடி மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் ராமரின் விருப்பம் என்று உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார்.
நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி மக்களவை தொகுதியில்களில் நடைபெற்ற பேரணிகளில் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், ராமரின் துரோகிகள் அல்லது பாகிஸ்தானியர்கள் மட்டுமே மோடியை எதிர்க்கின்றனர். பாகிஸ்தானுடன் ராகுல் காந்தியின் உறவு எப்படி இருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் இந்தியாவில் வசிக்கிறார், ரேபரேலியில் வாக்கு கேட்கிறார், பாகிஸ்தானின் ஆதரவைப் பெறுகிறார்.
பாகிஸ்தானில் இருந்து வரும் குரல்களும் "ராம துரோகிகளின்" குரல்களும் ஒரே மாதிரியாகிவிட்டன என்று குற்றம் சாட்டிய அவர், காங்கிரஸ் அறிவுஜீவிகள் ராமர் கோயில் கட்டுவதை எதிர்க்கிறார்கள் என்று கூறினார்.
ராமர் கோயிலை இந்தியாவில் இல்லாமல் இத்தாலியிலா கட்ட வேண்டும் என கேள்வி எழுப்பிய யோகி ஆதித்யநாத் ராமர் கோயிலை கட்டியது இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மைல்கல் என்று தெரிவித்தார்.
"புல்வாமாவில் வீரர்கள் வீரமரணம் அடைந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் ஆதரவளித்தார். தற்போது ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ராகுல் காந்தி உத்தரப்பிரதேசத்துக்கு வெளியே உள்ள மாநிலத்தையும், இந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட தேசத்தையும் விமர்சிக்கிறார். 2010 ஆம் ஆண்டில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, அவர் ஒரு அமெரிக்க அதிகாரியிடம், இந்தியாவில் உண்மையான அச்சுறுத்தல் ஐ.எஸ்.ஐ, முஸ்லீம் அடிப்படைவாதிகள் அல்லது பயங்கரவாதிகளிடமிருந்து வரவில்லை, ஆனால் இந்துக்களிடமிருந்து வருகிறது என்று கூறினார்.
இந்துக்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து அவர்களின் வாக்குகளை கேட்கிறார். காங்கிரஸ் சாதி அடிப்படையிலான மோதல்களைத் தூண்டுகிறது. பின்னர் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவார்கள் என்றும் யோகி ஆதித்யாநாத் கூறினார்.
நான்காம் கட்ட வாக்குப்பதிவின் மூலம், "மோடி அலை இப்போது சுனாமியாக மாறி உள்ளது" என்று கூறிய அவர், "எங்கள் அன்பான கடவுள் ராமரும் கூட தனது தீவிர பக்தர் மீண்டும் நாட்டின் ஆட்சியை ஏற்க வேண்டும் விரும்புகிறார்" என தெரிவித்தார்.
பசுவதையை எதிர்க்கட்சி ஆதரிப்பதாக குற்றம் சாட்டிய ஆதித்யநாத், இதுபோன்ற கொள்கைகளை ஆதரிப்பது ராம் ஜன்மபூமியின் புனிதத்தை சீரழிக்க வழிவகுக்கும் என்றார். சிறுபான்மையினருக்கு மாட்டிறைச்சி சாப்பிடும் உரிமையை வழங்க காங்கிரஸ் விரும்புகிறது என்று கூறிய அவர், "பசு எங்களுக்கு தாய், நாட்டில் பசுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்று கூறினார்.
இந்தியாவில் 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்படுவதாகவும், பாகிஸ்தானில் மக்கள் ஒரு கிலோ மாவுக்காக சண்டையிடுவதாகவும் கூறிய அவர், "அங்கு கலவரங்கள் நடக்கின்றன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவின் ஒரு பகுதியாக மாற போராடுகிறார்கள்... பாகிஸ்தானின் புகழைப் பாடுபவர்கள் அங்கு சென்று பிச்சை எடுத்து பட்டினியால் சாகவேண்டும். இந்த மக்கள் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக இருக்கிறார்கள் என்று யோகி ஆதித்யநாத் பேசினார்.
பிரதமர் மோடியின் தலைமையில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றத்திற்கு நாம் அனைவரும் சாட்சி. கடந்த நான்கு ஆண்டுகளாக, 80 கோடி மக்கள் இலவச ரேஷன் பெறுகிறார்கள், 12 கோடி விவசாயிகள் கிசான் சம்மன் நிதியின் பலனைப் பெற்றுள்ளனர், "என்று யோகி ஆதித்யநாத் கூறினார்.
பாரபங்கி, ரேபரேலி, பண்டா ஆகிய தொகுதிகளில் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு வரும் மே 20-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.