தமிழ் செய்திகள்  /  Elections  /  Ttv Dinakaran, Ops Will Participate In The Public Meeting Where Prime Minister Modi Will Address Tomorrow In Salem

OPS TTV Dinakaran: முழுமை பெற்றது பாஜக கூட்டணி! பிரதமரின் நாளைய சேலம் பொதுக் கூட்டத்தில் டிடிவி-ஓபிஎஸ் பங்கேற்பு!

Kathiravan V HT Tamil
Mar 18, 2024 10:44 AM IST

”இன்று மாலை கோவையில் நடைபெறும் வாகன பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இன்றிரவு கோவையில் தங்கும் பிரதமர் மோடி நாளை காலை பாலக்காட்டிலும் பின்னர் சேலத்திலும் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்”

சேலத்தில் நாளை பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பங்கேற்பு
சேலத்தில் நாளை பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பங்கேற்பு

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதியான நாளை மறுநாள் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும்.மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இன்று மாலை 5.30 மணி அளவில் கோயம்புத்தூர் வரும் பிரதமர் நரேந்திர மோடி சாய்பாபா காலனி முதல் ஆர்.எஸ்.புரம் வரை நடக்கும் ரோட்ஷோவில் பங்கேற்கிறார். பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி ரோட்ஷோ நடைபெறும் இடங்கள், இன்று இரவு மோடி தங்கும் ரேஸ்கோர்ஸ் சர்க்கியூட் ஹவுஸ் பகுதியில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை 11 மணி முதல் நாளை காலை 11 மணி வரை நகருக்குள் கனரக வாகனங்கள் வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் பிரதமர் பின்னர் அங்கிருந்து சேலம் வருகிறார். சேலம் கெஜநாயகன்பட்டியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகிறார். தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் நடைபெறும் பொதுக்கூட்டமாக சேலம் பொதுக்கூட்டம் உள்ளதால் எதிர்பார்ப்புகள் எகிறி உள்ளது. 

பாஜக கூட்டணி

தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியை பொறுத்தவரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக் கட்சி, தமமுக, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.  

தாமரை சின்னத்தில் போட்டியிடக் கோரி டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தை பாஜக நிர்பந்திப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் பாஜக கூட்டணியில் இணைவதாக அறிவித்த டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனி சின்னத்தில் போட்டியிடும் என்று கூறி இருந்தார். 

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நடத்தி வரும் நிலையில் இவரை அவர் பாஜக கூட்டணியை உறுதி செய்யவில்லை. 

இந்த நிலையில் சேலத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் முதன் முறையாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பிரதமரின் தொடர் தென்னிந்திய பயணம்

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக இருந்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் தென் மாநிலங்களில் பிரதமர் மோடி தொடர் சுற்றுப்பயணங்களை செய்து வருகிறார்.

கடந்த ஜனவரி மாதம் திருச்சி விமான நிலையத்தின் விரிவாக்கம் திறப்பு நிகழ்ச்சி, ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நிகழ்வு ஆகியவைகளின் போது பிரதமர் மோடி தமிழகம் வந்தார். மேலும் தூத்துக்குடியில் குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். 

மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 130 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகள் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp channel

டாபிக்ஸ்