Loksabha Election 2024: ’7 தொகுதியா? 10 தொகுதியா?’ பாஜக உடன் கூட்டணி பேசும் பாமக?
“தேசிய அளவில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படும் நிலையில், மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என திட்டத்துடன் பாஜக உடன் கூட்டணி அமைக்க அன்புமணி ராமதாஸ் விரும்புவதாக கூறப்படுகிறது”

பாஜக கூட்டணியில் இடம்பெற்று தேர்தலை சந்திப்பது தொடர்பாக பாமக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர அதிமுக, பாஜக கட்சிகள் இடையே கடும் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7 இடங்களும், பாஜகவுக்கு 5 இடங்களும், தேமுதிகவுக்கு 4 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்த நிலையில் தற்போது பாஜக தலைமையிலான கூட்டணியில் ஐஜேகே, புதியநீதிக்கட்சி, தமிழ்மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.
இந்த நிலையில் பாஜக உடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றால் 7 நாடாளுமன்ற தொகுதிகள் வரை பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பாஜக கூட்டணியில் 7 முதல் 10 தொகுதிகளை பாமக கேட்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
விரைவில் அன்புமணி ராமதாஸ் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற விரும்புவதாக ராமதாஸ் விரும்புவதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இணைவது தொடர்பாக பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஏற்கெனவே இரண்டு முறை நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
இந்த நிலையில், தேசிய அளவில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படும் நிலையில், மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என திட்டத்துடன் பாஜக உடன் கூட்டணி அமைக்க அன்புமணி ராமதாஸ் விரும்புவதாக கூறப்படுகிறது.
