Rahul Gandhi: ‘மோடிக்கு தோசை பிடிக்குமா? வடை பிடிக்குமா? என்பது பிரச்னை இல்லை!’ கோவையில் மோடியை விளாசிய ராகுல் காந்தி!
”இந்த அரசு நரேந்திர மோடி அரசு அல்ல; உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது அதானியின் அரசு”

கோயம்புதூரில் நடைபெற்ற இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு பரப்புரை மேற்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, நான் தமிழக மக்களை மிகவும் அன்புடன் நேசிகின்றேன். உங்கள் மொழி, கலாச்சாரம், வரலாறு எனக்கு மிகவும் பிடிக்கும். நரேந்திர மோடி அரசு செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது. இந்த அரசு நரேந்திர மோடி அரசு அல்ல; உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது அதானியின் அரசு.
துறைமுகம், விமான நிலையம் உள்ளிட்டவற்றை அதானி விரும்பினால் அதை மோடி தந்துவிடுகிறார். அவர் மும்பை விமான நிலையத்தை விரும்பினார், சிபிஐ விசாரணைக்கு பிறகு சில நாட்களில் மும்பை விமான நிலையம் அதானி கைக்கு சென்றது. அவர் எது வேண்டும் என நினைக்கிறாரோ அதை பெற்றுக் கொள்கிறார். அதானி குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய உடன் எனது எம்பி பதவி பறிக்கப்பட்டது. நான் குடியிருந்த வீட்டையும் அவர்கள் பறித்தார்கள். எனக்கு இந்தியாவில் லட்சக்கணக்கான வீடுகள் உங்கள் இதயங்களில் உள்ளது.