Loksabha Election 2024: மதுரையில் சு.வெங்கடேசன்! திண்டுக்கலில் சச்சிதானந்தம்! சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு!
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Loksabha Election 2024: மதுரையில் சு.வெங்கடேசன்! திண்டுக்கலில் சச்சிதானந்தம்! சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு!

Loksabha Election 2024: மதுரையில் சு.வெங்கடேசன்! திண்டுக்கலில் சச்சிதானந்தம்! சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு!

Kathiravan V HT Tamil
Mar 15, 2024 09:51 PM IST

”இந்தியா கூட்டணியில் உள்ள சிபிஎம் கட்சி மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடுகிறது. ”

மதுரை தொகுதி வேட்பாளராக மீண்டும் சு.வெங்கடேசன் அறிவிப்பு - திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தம் வேட்பாளராக அறிவிப்பு
மதுரை தொகுதி வேட்பாளராக மீண்டும் சு.வெங்கடேசன் அறிவிப்பு - திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தம் வேட்பாளராக அறிவிப்பு

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட நிலையில் தற்போது மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய தொகுதிகள் கூட்டணியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் இன்று (15.03.2024) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ. சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு கீழே தரப்பட்டுள்ளது.

2024 மக்களவைத் தேர்தலில் மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடும் சிபிஐ (எம்) – வேட்பாளர்கள் 18வது மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தற்போதைய மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் சாகித்ய அகாதெமி விருது பெற்றவருமான தோழர் சு.வெங்கடேசன் எம்.பி., அவர்களையும்,

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், திண்டுக்கல் மாவட்டச் செயலாளருமான தோழர் ஆர்.சச்சிதானந்தம் அவர்களையும் வேட்பாளர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதி நிலவரம் 2019

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட எழுத்தாளர் சு.வெங்கடேசன் 4,47,075 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார்.

சு.வெங்கடேசனை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் 3,07,680 வாக்குகளை பெற்றார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை 85,747 வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட அழகர் 85,048 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாண்டியம்மாள் 42,901 வாக்குகளையும் பெற்றனர்.

திண்டுக்கல் தொகுதி நிலவரம் 2019

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட பி.வேலுச்சாமி 7,46,523 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஜோதி முத்து 2,07,551 வாக்குகளையும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்ட ஜோதி முருகன் 62,875 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டமன்சூர் அலி கான் 54,957 வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட சுதாகரன் 38,784 வாக்குகளையும் பெற்று இருந்தனர்.

இந்த நிலையில் இந்த முறை கோவை தொகுதிக்கு பதிலாக திண்டுக்கல் தொகுதியை சிபிஎம் கட்சிக்கு திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.