ADMK Mansoor Ali Khan: அதிமுக-மன்சூர் அலிகான் தொகுதி பங்கீட்டில் இழுபறி! வேறு பெரிய கட்சி பேசுவதாக மன்சூர் எச்சரிக்கை!
”ADMK Mansoor Ali Khan Allaiance: அதிமுக துணைப்பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமியின் அழைப்பின் பேரிலேயே கூட்டணி பேச சென்றதாக இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் விளக்கம்”
அதிமுக உடன் நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
மன்சூர் அலிகான் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை!
இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக இன்று காலை தலைவர் மன்சூர் அலிகான் தலைமையில் பொதுச்செயலாளர் கண்ணதாசன், பொருளாளர் சபீர் அகமது, தலைமை நிலைய செயலாளர் சீலன் பிரபாகரன், துணை பொதுச்செயலாளர் வல்லரசு உள்ளிட்டோர் அடங்கிய குழு உடன் சென்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையிலான குழுவின் அழைப்பின் பேரில் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆயினும் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை; பேச்சுவார்த்தை தொடர்கிறது.
வேறு கட்சி பேசுகிறது!
அதிமுக தவிர்த்து வேறொரு பெரிய கட்சி உடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நாங்கள் ஒரு தொகுதியில் போட்டியிட உறுதியாக உள்ளோம். நாடாளுமன்றத்தில் எளியவர்களின் குரலாக தமிழ்நாட்டின் உரிமைகளை பெற்றுத் தருவதில் உறுதியாக இருக்கிறோம். எனவே இந்திய ஜனநாயக புலிகள் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என மன்சூர் அலிகான் கூறி உள்ளார்.
அதிமுக கூட்டணியில் என்ன நடக்கிறது?
பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டு இறுதியில் அதிமுக அறிவித்தது. இதனை தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் உடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புரட்சி பாரதம் கட்சி ஒரு தொகுதியை ஒதுக்கீடு செய்யக்கோரி அதிமுக தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளது.
தேமுதிக உடன் இதுவரை 2 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில் இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினர் முதற்கட்டமாக சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் தேமுதிக அவைத் தலைவர் இளங்கோவன் தலைமையில், தேமுதிக பேச்சுவார்த்தை குழுவினர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் இரண்டு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தங்கள் கட்சிக்கு ராஜ்யசபா உறுப்பினர் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக கூறி இருந்தார்.
பாமகவை பொறுத்தவரை அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் உடன் 2 முறை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இருப்பினும் இந்த பேச்சுவார்த்தை நடந்தது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரண்டு கட்சிகளும் இதுவரை வெளியிடவில்லை. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இதுவரை எந்த கட்சிகளும் அதிகாரப்பூர்வமாக இணையாத நிலையில் மன்சூர் அலிகான் உடன் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேச்சுவார்த்தை நடத்தியது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இதுதான் மெகா கூட்டணியா? - கே.சி.பழனிசாமி கேள்வி
”நாமக்கலில் மெகா கூட்டணி அமைப்போம் என ஈபிஎஸ் பேசி உள்ளார். மன்சூர் அலிகான் உடன் அமைக்கும் கூட்டணியை தான் மெகா கூட்டணி என்கிறாரா என்பது தெரியவில்லை; அண்ணா திமுக என்பது தற்போது எடப்பாடி திமுகவாக ஆகிவிட்டதா” என அதிமுக முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்