தமிழ் செய்திகள்  /  Elections  /  Madras High Court Allowed The Prime Minister Modi's Road Show In Coimbatore On March 18

Modi's Road show: கோவையில் பிரதமரின் வாகன பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி! போலீசுக்கு நீதிபதி சரமாரி கேள்வி!

Kathiravan V HT Tamil
Mar 15, 2024 05:40 PM IST

”Modi's road show: இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில், இது போன்ற பேரணிகளை எந்த கட்சி கேட்டாலும் அனுமதி தரப்படுவதில்லை என காவல்துறை சார்பில் வாதிடப்பட்டது”

பிரதமர் நரேந்திர மோடியின் வாகன பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி - கோப்புப்படம்
பிரதமர் நரேந்திர மோடியின் வாகன பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி - கோப்புப்படம் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

வரும் மார்ச் 18ஆம் தேதி திங்கள் அன்று கோவையில் உள்ள கவுண்டம் பாளையம் முதல் ஆர்.எஸ்.புரம் வரை 3 கிமீ தூர ரோட் ஷோவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார். இது தொடர்பான அனுமதி கடிதம் கோவை மாவட்ட பாஜக சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் நேற்று இரவு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. 

பிரதமர் மோடியின் ரோட் ஷோவுக்கு அனுமதி மறுத்தது குறித்து மூன்று காரணங்களை காவல்துறை கூறி உள்ளது. கோவையை பொறுத்தவரை இதுவரை எந்த ரோட் ஷோ நிகழ்ச்சிக்கும் காவல்துறை அனுமதி கொடுத்தது கிடையாது. ஏற்கெனவே கோவையில் கார் குண்டுவெடிப்பு நடந்துள்ளதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. மேலும் பொதுத் தேர்வுகள் நடைபெறுவதால் தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் பாதிக்க வாய்ப்புள்ளது ஆகிய மூன்று காரணங்களை காவல்துறை கூறி இருந்தது.

கோவையில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் வாகன பேரணிக்கு கோவை மாநகர காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அனுமதி தரக்கோரி மாவட்ட பாஜக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில், இது போன்ற பேரணிகளை எந்த கட்சி கேட்டாலும் அனுமதி தரப்படுவதில்லை என காவல்துறை சார்பில் வாதிடப்பட்டது. 

பிரதமரின் பாதுகாப்பு குறித்து அவரது எஸ்பிஜி பாதுகாப்பு குழு அதனை கவனித்துக் கொள்ளும், பாதுகாப்பு குறைபாடுகள் பிரதமருக்கு பாதுகாப்பு எச்சரிக்கை ஏதெனும் இருந்தால் எஸ்பிஜி குழு இந்த பேரணியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து இருப்பார்களே என நீதிபதி கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதில் அளித்த காவல்துறை தரப்பு, பிரதமரின் பேரணிக்காக தங்களிடம் தடையில்லா சான்று கேட்கபட்டது. பிரதமர் பாதுகாப்பில் மாநில காவல்துறைக்கும் பொறுப்பு உள்ளது என வாதிட்டது. 

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, கோவையில் பிரதமர் பங்கேற்க இருக்கும் வாகன பேரணிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். 

பிரதமர் மோடியின் தெற்கு வியூகம்!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தென்மாநிலங்களில் பிரதமர் மோடி தொடர் சுற்றுப்பயணங்களை செய்து வருகிறார்.

வரும் மார்ச் 17 ஆம் தேதி ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி-பாஜக-ஜனசேனா ஆகிய கட்சிகள் இணைந்து நடத்தும் கூட்டு சாலை பேரணியில் பிரதமர் மோடி பேசுகிறார்.

நாளைய (மார்ச் 16) தினம் தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மற்றும் கர்நாடகாவின் குல்பர்கா ஆகிய இடங்களில் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொள்ள உள்ளார். குல்பர்கா தொகுதி காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கோட்டையாக இருந்து வருகிறது. இருப்பினும், 2019 மக்களவைத் தேர்தலில் தனது பாஜக போட்டியாளரிடம் தோல்வியை சந்தித்து இருந்தார்.

மார்ச் 18 ஆம் தேதி தெலுங்கானாவின் ஜக்தியால் மற்றும் கர்நாடகாவின் சிவமோகா ஆகிய இடங்களில் பேரணிகளில் அவர் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கோயம்புத்தூரில் ரோட்ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.

மார்ச் 19ஆம் தேதி அன்று கேரளாவின் பாலக்காட்டிலும், சேலத்திலும் ரோட்ஷோவில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 130 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகள் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

WhatsApp channel