Lok Sabha polls: காங்கிரஸ் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது! கமல்நாத், கெலாட் மகன்களுக்கு போட்டியிட வாய்ப்பு
”Lok Sabha polls: மத்திய பிரதேசத்தின் சிந்திவாரா தொகுதியில் கமல்நாத் மகன் நகுநாத் போட்டியிடுகிறார். ராஜஸ்தானில் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது”

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அசாம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் 43 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் அறிவிக்கப்பட்டுள்ள 43 வேட்பாளர்களில் 25 பேர் 50 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கே.சி.வேணுகோபால்
இது தொடர்பாக பேசி உள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ”லோக்சபா தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டுவிட்டோம். இன்று இரண்டாவது பட்டியலை அறிவிக்க உள்ளோம். நேற்று, அசாம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானைச் சேர்ந்த சுமார் 43 பெயர்களின் பட்டியலை தயார் செய்துள்ளோம்” என கூறினார்.
கவனம் பெற்ற வாரிசு வேட்பாளர்கள்!
இந்த வேட்பாளர் பட்டியலில் காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகோய் அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் தொகுதியிலும், காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத்தின் மகன் நகுல் நாத் மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா தொகுதியிலும், ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் ஜலோரி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
"இந்த பட்டியலில் உள்ள 43 வேட்பாளர்களில் 10 பேர் பொது வேட்பாளர்கள், 13 ஓபிசி வேட்பாளர்கள், 10 எஸ்சி வேட்பாளர்கள், 9 எஸ்டி வேட்பாளர்கள் மற்றும் 1 முஸ்லிம் வேட்பாளர்" என காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது.
எந்த வேட்பாளர்கள் எங்கெங்கு போட்டி?
ராஜஸ்தானில் கோவிந்த் ராம் மேக்வால் பிகானேரி தொகுதியிலும், பிரிஜேந்திர ஓலா ஜுன்ஜுனு தொகுதியிலும், லலித் யாதவ் ஆல்வார் தொகுதியிலும். சஞ்சனா ஜாதவ் பரத்பூர் தொகுதியிலும், ஹரிஷ் சந்திர மீனாயி டோங்க்-சவாய் மாதோபூர் தொகுதியிலும், கரண் சிங் உச்சியார்டா ஜோத்பூர் தொகுதியிலும், தாராசந்த் மீனா உதய்பூர் தொகுதியிலும், உதைலால் அஜானா சித்தோர்கர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த கமல்நாத்!
கடந்த ஜனவரி மாதமே, மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக உள்ள கமல்நாத்தின் மகன் நகுல் நாத் தாமாகவே அறிவித்து இருந்தார்.
இதையடுத்து அவரும், அவரது தந்தை கமல்நாத்தும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. அவர்கள் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாக ஊகங்கள் எழுந்தன. கட்சியில் தாங்கள் அவமானப்படுத்தப்பட்டதாக கமல்நாத்தின் நம்பிக்கைக்குரியவர் கூறியிருந்தார். இருப்பினும், கமல்நாத்தும், அவரது மகனும் இது தொடர்பான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து இருந்தனர்.
முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவர் பாஜகவின் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் தோல்வியை தழுவி இருந்தார்.
மறைந்த காங்கிரஸ் தலைவர் தருண் கோகோயின் மகன் கவுரவ் கோகாய். இவர் 2014 முதல் மக்களவையில் கலியபோர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார். இந்த முறை அவர் தனது தொகுதியை மாற்றி உள்ளார்.
ஏற்கெனவே முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
ஏற்கெனவே கடந்த மார்ச் 8ஆம் தேதி அன்று 39 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருந்தது. இதில், கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியும், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராஜ்நந்த்கான் தொகுதியில் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலும், திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூரும் போட்டியிடுவார்கள் என கட்சித் தலைமை கூறி இருந்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
