DMK Vs BJP 'நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தி' அதிர வைக்கும் ஸ்டாலின்!-dmk vs bjp knife hanging over our heads stalin shocks - HT Tamil ,தேர்தல்கள் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Dmk Vs Bjp 'நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தி' அதிர வைக்கும் ஸ்டாலின்!

DMK Vs BJP 'நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தி' அதிர வைக்கும் ஸ்டாலின்!

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 16, 2024 10:53 AM IST

DMK Vs BJP: மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் - கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்? சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா!?

DMK Vs BJP 'நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தி' அதிர வைக்கும் ஸ்டாலின்!
DMK Vs BJP 'நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தி' அதிர வைக்கும் ஸ்டாலின்!

"பாஜக ஏன் வரவே கூடாது?

தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம்.

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை.

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது.

தமிழ்நாடு உள்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம்.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி.

மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் - கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்? சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா!?

தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக் காசாக்கி விடும்! வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

மோடியின் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டார்கள்.

மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். இத்தனை வெளிப்படையாகத் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அ.தி.மு.க.வையும் புறக்கணிப்போம்!

பாசிசத்தை வீழ்த்த - ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டையும் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மற்றும் வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகையில், "தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நாம் ஏன் “வேண்டாம் மோடி”என்று சொல்கிறோம் என்றால், அவர் இரவுகளில் கொண்டுவரும் சட்டங்களால்! தீடீர் என்று ஒரு இரவில்தான், ஊழலை ஒழிக்க வந்த அவதாரப் புருஷராக டி.வி. முன்பு தோன்றி, பணமதிப்பு இழப்பை அறிவித்தார். இரவில் பல மக்களை ஏ.டி.எம் வாசலில் நிற்க வைத்தார். அதேபோன்று ஒரு இரவில்தான், பெரிய பொருளாதாரப் புலி போன்று, G.S.T. சட்டத்தை அமல்படுத்தி, தொழில் முனைவோரையும் நடுத்தர வர்க்க மக்களையும் கொடுமைப் படுத்தினார். எவ்வளவு பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

கொரோனா வந்தப்போது என்ன செய்தார்? “இரவெல்லாம் எல்லாரும் மணி அடியுங்கள், விளக்கு ஏற்றுங்கள், கொரோனா ஒழிந்துவிடும்”என்று பெரிய ‘சயிண்டிஸ்ட்’ போன்று பேசினார். இன்னும் நிறைய இருக்கிறது! அதனால்தான், நாங்கள் தொடர்ந்து சொல்கிறோம். பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் வீட்டுக்கும் கேடு.. நாட்டுக்கும் கேடு.

பிரதமர் மோடி இரவுகளில் அறிவித்த அறிவிப்புகளை எல்லாம் மாற்றி, இந்தியாவில் விடியலை ஏற்படுத்தத்தான், இந்தியா கூட்டணியை அமைத்திருக்கிறோம்" என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.