PM Modi: ‘ஊழல் மற்றும் குடும்ப ஆட்சியை வளர்ப்பதில் திமுக மும்முரமாக உள்ளது’ - சென்னை ’ரோடு ஷோ’வில் பிரதமர் மோடி தாக்கு!
- PM Modi: சென்னையில் சாலைப்பேரணி நடத்திய பிரதமர் மோடிக்கு, மக்கள் பெரும் ஆதரவு கொடுத்தனர்.

சென்னை: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சென்னை தியாகராய நகர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஏராளமானோர் கலந்து கொண்ட ‘சாலைப் பேரணி’ ஒன்றை நடத்தினார்.
அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணியின் தென் சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தர்ராஜன், மத்திய சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் வினோத் பி.செல்வம் மற்றும் வடசென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஆர்.சி. பால் கனகராஜ் ஆகியோருக்கு ஆதரவாக பிரதமர் மோடி சென்னையில் சாலைப்பேரணி சென்று பிரசாரம் செய்தார்.
பின்னர் தனது'எக்ஸ்' பதிவுகளில், சென்னை நகரின் சாலைப்பேரணி என்றென்றும்; தனது நினைவின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும், சென்னை தன்னை வென்றதாகவும் பிரதமர் கூறினார்.
அதில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது, "சென்னை என் மனதை வென்றது. இந்த ஆற்றல் மிக்க நகரத்தில் இன்றைய சாலைப்பேரணி என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். மக்கள் சேவையில் தொடர்ந்து கடினமாக உழைக்கவும், நமது தேசத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்யவும் மக்களின் ஆசிகள் எனக்கு வலுவைத் தருகின்றன.
சென்னையில் காணப்படும் இந்த உற்சாகம், தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரிய அளவில் ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்பதைக் காட்டுவதாக உள்ளது.
இந்த துடிப்பான நகரத்தின் நலனுக்காக எங்கள் அரசு தொடர்ந்து பணியாற்றும் என்று சென்னையில் உள்ள எனது சகோதர சகோதரிகளுக்கு நான் உறுதியளிக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக, வாழ்க்கையை எளிதாக்குவதை ஊக்குவிக்கும் முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்கும், அடிக்கல் நாட்டுவதற்கும் நான் அடிக்கடி இங்கு வந்துள்ளேன். இதன் ஆணிவேராக இருப்பது இந்த இணைப்பு.
தமிழ் கலாசாரத்திற்கு நமது அரசு மிகுந்த மரியாதை அளிக்கிறது. ஐ.நா.வில் தமிழில் சில வார்த்தைகள் பேசும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பெருமிதம் கொண்டேன். உலக அரங்கில் தமிழ் கலாசாரத்தையும் மொழியையும் தொடர்ந்து பிரபலப்படுத்துவோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் கலாசாரத்தின் அம்சங்களை மேலும் பிரபலப்படுத்தும் நோக்கத்தில் செம்மொழித் தமிழாய்வு செய்ய மத்திய நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், தொலைக்காட்சி அலைவரிசை டிடி தமிழ் தொடங்கப்பட்டது. இது இந்த மாநிலத்தின் சிறப்புமிகு கலாசாரத்தைக் கொண்டாடுவதில் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்.
சாலைகள், துறைமுகங்கள், நகர்ப்புற போக்குவரத்து, கலாசாரம், வர்த்தகம், இணைப்பு, எரிசக்தி மற்றும் பல துறைகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடர்ந்து பணியாற்றும். அதே நேரத்தில், பேரிடர் மேலாண்மை அமைப்பை வலுப்படுத்துவது, வெள்ளம் போன்ற பேரிடர்களின்போது நம்மை சிறப்பாக தயார்படுத்திக் கொள்வது போன்ற முக்கியப் பிரச்சனைகளில் சென்னை எதிர்கொள்ளும் இடர்பாடுகளை களைய நாங்கள் முன்னுரிமை அளிப்போம். பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூணாக விளங்கும் குறு, சிறு, நடுத்தர தொழில் துறையையும் தொடர்ந்து ஆதரிப்போம்’’ என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடம் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. வரும் காலங்களில், எழும்பூர் ரயில் நிலையம் உட்பட இங்குள்ள ரயில் நிலையங்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட உள்ளன.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் திட்டத்தால் சென்னை-கோயம்புத்தூர் மற்றும் சென்னை-மைசூரு இடையேயான போக்குவரத்து வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ நெட்வொர்க் விரிவுபடுத்தப்படுகிறது. இதனால் நகரத்தில் பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கு உதவியாக இருக்கும். சென்னை-பெங்களூரு விரைவுச் சாலை திட்டம் மற்றும் தற்போதுள்ள பிற சாலை திட்டங்களின் விரிவாக்கம் போன்ற முக்கிய சாலைத் திட்டங்கள் வர்த்தகம் மற்றும் இணைப்பை மேம்படுத்தும்" என்று அவர் மேலும் கூறினார்.
தமிழ்நாட்டில் ஆளும் திமுகவைத் தாக்கிப் பேசிய அவர், ’’திமுக சென்னைக்குப் பெரிதாக எதுவும் செய்யவில்லை. பல ஆண்டுகளாக சென்னை மக்களிடம் வாக்கு வாங்கிய திமுக, நகருக்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை. ஊழல் மற்றும் குடும்ப ஆட்சியை வளர்ப்பதில் திமுக மும்முரமாக உள்ளது. குறிப்பாக சவாலான நேரங்களில், அவர்களின் எம்.பி.க்கள் மக்களுக்கு அணுக முடியாத தூரத்தில் இருக்கின்றனர்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்
மேலும்,"கச்சத்தீவினை மீட்பது குறித்த சமீபத்திய தகவல்கள், நமது மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களின் நல்வாழ்வுக்கும் தீங்கு விளைவிப்பதில் காங்கிரசும் திமுகவும் எவ்வாறு உடந்தையாக இருந்தன என்பதை சுட்டிக்காட்டுகின்றன. இம்முறை திமுகவையும், காங்கிரஸையும் நிராகரிக்க சென்னை தயாராக இருப்பதில் ஆச்சரியமில்லை’’எனத் தெரிவித்துள்ளார்.
வீட்டுவசதித் துறையைப் பற்றி பிரதமர் மோடி தெரிவிக்கையில், ’’குறிப்பிடத்தக்க பணிகள் நடந்து வருகின்றன. பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. சில காலத்திற்கு முன்பு, கலங்கரை விளக்க திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்ட பல வீடுகள் திறந்து வைக்கப்பட்டன. இதனால் பல எதிர்பார்ப்புகளுக்கு சிறகுகள் கிடைத்தன.
ஐ.ஐ.டி-மெட்ராஸில் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்கா மற்றும் டிஸ்கவரி வளாகம் போன்ற திட்டங்களிலும் எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது. இது வணிகம் மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும்" என்று பிரதமர் மோடி மேலும் கூறியிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பாஜகவின் வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
தென் சென்னையில் இருந்து தமிழிசை சவுந்தரராஜனும், மத்திய சென்னையில் வினோஜ் பி.செல்வமும், வட சென்னையில் ஆர்.சி.பால் கனகராஜும் போட்டியிடுகின்றனர்.
வெள்ளை சட்டை மற்றும் பாரம்பரிய 'வேஷ்டி' (வேட்டி) மற்றும் 'அங்கவஸ்திரம்' (சால்வை) அணிந்து, பிரதமர் மோடி அலங்கரிக்கப்பட்ட காரின் மேல் நின்று சாலையின் இருபுறமும் வரிசையாக நின்ற தனது ஆதரவாளர்களை நோக்கி கையசைத்தார். பாஜகவின் சின்னமான தாமரையின் சிறிய கட்அவுட்டையும் பிரதமர் மோடி எடுத்துக்காட்டினார்.
சென்னையிலுள்ள பனகல் பூங்காவிலிருந்து தேனாம்பேட்டை வரை 2 கி.மீ. தூரம் ’ரோட்ஷோ’ எனப்படும் சாலைப்பேரணி, சுமார் 45 நிமிடங்கள் நடந்தது. மேலும் பிரதமர் தொடர்ந்து சிரித்தபடி மக்களை நோக்கி கையசைப்பதைக் காண முடிந்தது. சாலையில் கூடியிருந்தவர்களில் பலர் "பாரத் மாதா கி ஜெய்" மற்றும் "மோடி, மோடி" என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பரித்தனர். பலர் பாஜகவுக்கும், பிரதமருக்கும் ஆதரவாக பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
ஆர்வமுள்ள ஆதரவாளர்களும் பிரதமர் மீது மலர் தூவி மரியாதை செலுத்தினர். நாதஸ்வர கச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களான அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாமகவின் சவுமியா அன்புமணி ஆகியோரை ஆதரித்து, கோவை மாவட்டத்தின், மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் புதன்கிழமை தேர்தல் பிரசாரங்களில் உரையாற்றுகிறார்.
ஒரே ஒரு புதுச்சேரி தொகுதியைத் தவிர, தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறயிருக்கிறது.
திமுக, அதிமுக அல்லாத ஒரு அணியை பாஜக வழிநடத்துகிறது. அதன் கூறுகளில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் அணி ஆகியவை அங்கம் வகிக்கிறது.
முன்னதாக அண்ணாமலை கூற்றுப்படி, ஏப்ரல் 12-க்குப் பிறகு பிரதமர் மோடி மீண்டும் தேர்தல் பிரசாரத்திற்காக தமிழ்நாட்டிற்கு வர வாய்ப்புள்ளது.

டாபிக்ஸ்