தமிழ் செய்திகள்  /  Elections  /  Dmk Govt Not Aware Of People's Needs - Pm Narendra Modi's Speech In Chennai

PM Modi On DMK: ’திமுக கொள்ளையடித்த பணத்தை மீட்போம்!’ சென்னையில் பிரதமர் மோடி உறுதி!

Kathiravan V HT Tamil
Mar 04, 2024 06:47 PM IST

“மாநிலத்தில் அதிகாரத்தில் உள்ள திமுக அரசு சென்னை வாசிகளின் தேவைகளையும், கனவுகளையும் கண்டுகொள்ளவே இல்லை. சென்னை வெள்ளத்தால் மக்களுக்கு கடும் துயரம் உண்டானது”

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

ட்ரெண்டிங் செய்திகள்

வணக்கம் சென்னை என்று கூறி தனது உரையை தொடங்கிய பிரதமர் தொடர்ந்து பேசுகையில், ஒவ்வொரு முறையும் சென்னை வரும் போது மக்களால் உத்வேகம் பெருகிறேன். உயிர்ப்பும், துடிப்பும் நிறம்பிய நகரத்திற்கு வருவது மிக அருமையாக உள்ளது. திறமை, வர்த்தகம், கலாச்சாரத்தைன் அடையாளமாக சென்னை உள்ளது. வளர்ச்சி அடைந்த இந்தியாவை கட்டமைக்கும் நமது முயற்சியில் சென்னை மக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். 

எனக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான உறவு, மிகப்பழமையானது, நீங்கள் என் மீது பொழியும் அன்பும் மிக மிக பழமையானது. ஆனால் சில ஆண்டுகளாக இங்குள்ள சிலருக்கு நான் சென்னை வரும்போது வயிற்று வலி ஏற்படுகிறது, வயிற்றில் புளியை கறைக்கிறது. பாஜகவுக்கு மக்கள் ஆதரவு தொடர்ந்து வலு அடைந்து வருவதுதான் அதற்கு காரணம். நெடுந்தொலைவுக்கு மக்கள் வெள்ளம் திரண்டு உள்ளது. 

வளர்ச்சி அடைந்த பாரதத்தை போல் வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டை ஆக்கவும் நான் உறுதி பூண்டுள்ளேன். இந்தியா உலகின் 3 ஆவது பொருளாதாரமாக மாற்ற சென்னையின் பங்கு மிகப்பெரியது. சென்னையின் வளர்ச்சிக்காக பாரத அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. 

சென்னையின் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கான நகர்புற கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. சென்னை மெட்ரோ, சென்னை விமான நிலைய திட்டம், மதுரவாயல்-துறைமுகம் பாலம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

தமிழ்நாடு மற்றும் சென்னையின் எதிர்காலத்திற்காக மத்திய அரசு பணியாற்றி வருகிறது. ஆனால் மாநிலத்தில் அதிகாரத்தில் உள்ள திமுக அரசு சென்னை வாசிகளின் தேவைகளையும், கனவுகளையும் கண்டுகொள்ளவே இல்லை.  சென்னை வெள்ளத்தால் மக்களுக்கு கடும் துயரம் உண்டானது. 

ஆனால் திமுக அரசு அவதிப்படும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு பதிலாக அவர்கள் துயரத்தை மேலும் மேலும் அதிகப்படுத்தும் வேலையை செய்துள்ளனர். திமுகவினர் வெள்ள மேலாண்மையை செய்யாமல் ஊடக மேலாண்மையை செய்கின்றனர். ஊடகங்களை சரிக்கட்டுகின்றனர். 

மக்கள் வீடுகளில் வெள்ளம் நிரம்பிய நிலையில் ஊடகங்களில் பாலும், தேனும் ஓடுகிறது என கூறுகின்றனர். மக்கள் துயரங்களை பற்றி திமுகவுக்கு கவலை இல்லை. 

மத்திய அரசு தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக கச்சைக்கட்டிக் கொண்டு பணியாற்றி வருகிறது. பல திட்டங்களுக்கான தொகையை நேரடியாக மத்திய அரசு அனுப்பிவிடுகிறது. இதுதான் திமுகவுக்கு மிகப்பெரிய வருத்தமாக உள்ளது. 

இந்த வளர்ச்சி திட்டங்களுக்கான லட்சக்கணக்கான கோடி ரூபாயை கொள்ளையடிக்க முடியவில்லை என்பதுதான் திமுகவினருக்கு இருக்கும் பெரும் சிக்கல். இந்த விஷயத்தில் ஒரு குடும்பம் முழுவதுமே பயங்கர எரிச்சலில் உள்ளது. 

பணம்தான் கிடைக்கவில்லை; குறைந்தபட்சம் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாம் என திமுகவினர் நினைத்தனர். ஆனால் ஐயோ பாவம் அதில் கூட அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. 

வளர்ச்சிக்காக அனுப்பப்படும் பணத்தை இந்த மோடி கொள்ளையடிக்கவிடமாட்டான். எந்த பணத்தை நீங்கள் கொள்ளையடித்துள்ளீர்களோ அந்த பணம் வசூல் செய்யப்பட்டு மீண்டும் தமிழ்நாட்டு மக்களுக்கு செலவு செய்யப்படும். இது மோடி அளிக்கும் கியாரண்டி.

WhatsApp channel