CVoter, Axis My India, Today's Chanakya Exit poll கருத்து கணிப்புகள் துல்லியமானதா? 2019, 2014 ஆண்டுகளில் நடந்தது என்ன?
Exit polls 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் என்பது, வாக்குப்பதிவு நாள் அன்று வாக்குச்சாவடியில் வாக்கு அளித்துவிட்டு வெளியேறும் வாக்காளர்கள் கூறியதன் அடிப்படையில் கணிக்கப்படுகின்றது. Axis My India, Today's Chanakya, IPSOS, CVoter, CSDS உள்ளிட்ட கருத்து கணிப்பு ஏஜென்சிகள் இதை நடத்துகின்றன.
கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த நாடாளுமன்றத் தேர்தல் இன்று மாலை 6 மணி உடன் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் இன்று மாலை வெளியாக உள்ளன.
தேர்தல் ஆணையம் விதித்த தடைக் காலத்திற்குப் பிறகு 2024 ஆம் ஆண்டுக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வரத் தொடங்கும்.
நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமின்றி, ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களில் ஆட்சி அமைக்க போவது யார் என்பது குறித்தும் கருத்து கணிப்புகள் வெளியாக உள்ளன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் என்பது, வாக்குப்பதிவு நாள் அன்று வாக்குச்சாவடியில் வாக்கு அளித்துவிட்டு வெளியேறும் வாக்காளர்கள் கூறியதன் அடிப்படையில் கணிக்கப்படுகின்றது. Axis My India, Today's Chanakya, IPSOS, CVoter, CSDS உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த கருத்து கணிப்புக்களை நடத்துகின்றன.
2019 ஆம் ஆண்டு கருத்துக் கணிப்புகள் துல்லியமாக இருந்ததா?
கருத்துக்கணிப்பு கணிப்புகளை ஒருபோதும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது, ஏனெனில் தவறுகளுக்கு எப்போதும் இடம் உண்டு. சமீப காலங்களில் கருத்துக் கணிப்புகள் தவறாகப் போன நிகழ்வுகளும் குறைவில்லை. இருப்பினும், 2019 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில், எடுக்கப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் மக்களின் மன நிலையை ஓரளவுக்கு பிரதிபலிப்பதாகவே அமைந்தது.
ஆனால் தேர்தலின் முடிவுகள் அடிப்படையில் தேசிய ஜனநாயக கூட்டணி 352 இடங்களிலும், பாஜக மட்டும் 303 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் வெறும் 93 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. காங்கிரஸ் கட்சி 52 இடங்களை பெற்று இருந்தது.
Exit Poll agency | NDA | UPA |
India Today-Axis | 339-365 | 77-108 |
News 24-Today's Chanakya | 350 | 95 |
News18-IPSOS | 336 | 82 |
Times Now VMR | 306 | 132 |
India TV-CNX | 300 | 120 |
Sudarshan News | 305 | 124 |
Actual Result | 353 | 93 |
2014 கருத்து கணிப்புகள் துல்லியமாக இருந்ததா?
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இருப்பினும் அப்போது வெளியான பல தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் இதை முறையாக கணிக்க தவறின. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஏற்படுத்தப்போகும் பெரும் வித்தியாசத்தை மட்டும் அவர்கள் தவறவிட்டனர். சராசரியாக எட்டு கருத்துக் கணிப்புகள் பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 283 இடங்களும் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 105 இடங்களும் கிடைக்கும் என்று கணித்தது. ஆனால் தேர்தலின் முடிவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 336 இடங்களும், பாஜகவுக்கு 282 இடங்களும் கிடைத்தன. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வெறும் 60 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 44 இடங்களும் கிடைத்தன.
Exit Poll agency | NDA | UPA |
India Today-Cicero | 272 | 115 |
News 24-Chanakya | 340 | 101 |
CNN IBN-CSDS | 280 | 97 |
Times Now ORG | 249 | 148 |
ABP News-Nielsen | 274 | 97 |
NDTV-Hansa Research | 279 | 103 |
Actual Result | 336 | 60 |
2024ல் என்ன வித்தியாசம்?
கடந்த 2 தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு இடையே போட்டிகள் இருந்து வந்தன.
ஆனால் காங்கிரஸ் தலைமை வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு பதிலாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ என்ற புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400 இடங்கள், பாஜகவுக்கு 370 இடங்கள் என்ற பிரச்சாரத்தை பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் முன் வைத்து தேர்தலை சந்தித்தனர்.
இந்த நிலையில் இன்று மாலை 6 மணி உடன் நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளுக்காக அரசியல் கட்சிகள் ஆவலுடன் காத்து இருக்கின்றன. அதே வேளையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தொடர்பான தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்து உள்ளது.
கருத்து கணிப்பு முடிவுகள் நேரலை: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் யூடியூப் சேனலில் நேரலையாக தெரிந்து கொள்ளலாம்.