Congress manifesto: ’காங்கிரஸின் தேர்தல் அறிக்கை பாகிஸ்தானுக்கானது!’ விளாசும் பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா!
”காங்கிரஸின் தேர்தல் அறிக்கை இந்தியாவை விட அண்டை நாடான பாகிஸ்தானில் நடக்கும் தேர்தலுக்கு மிகவும் பொருத்தமானது என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம்சாட்டி உள்ளார்”
'காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இந்தியாவிற்கு அல்ல, பாகிஸ்தான் தேர்தலுக்கு மிகவும் பொருத்தமானது' என, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம்சாட்டி உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் 2024
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது. மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!
நாடாளுமன்றத் தேர்தல் 2024-க்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி அன்று அக்கட்சித் தலைமை வெளியிட்டது.
- நீட், CUET தேர்வுகள் கட்டாயம் இல்லை. மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்களில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற முறையில் மாணவர் சேர்க்கையை கடைபிடிக்கலாம்.
- 2009ம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, 12ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும். இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும். ST, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும். ST, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.
- மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஏழை குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
- புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
- விவசாய இடுபொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லை.
- மார்ச் 2024 வரை பெறப்பட்ட அனைத்து கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும்.
- பாஜக இயற்றிய ஜிஎஸ்டி சட்டம் ரத்து செய்யப்படும் புதிய ஜிஎஸ்டி 2.0 ஏற்றப்படும்.
- மாநில அரசுகளுடன் ஆலோசித்து தேசிய கல்விக் கொள்கை திருத்தி அமைக்கப்படும்.
- மாநில அரசுகளுக்கான நிதி பகிர்வை வழங்க புதிய கொள்கை வகுக்கபடும்.
- அண்டை நாடுகளால் மீனவர்கள் சுட்டுக் கொள்வதை தடுக்க புதிய வழிமுறைகள் வகுக்கப்படும்.
போன்ற வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது.
பாஜக குற்றச்சாட்டு
அசாம் மாநிலத்தில் உள்ள ஜோர்ஹாட் தொகுதியில் மக்களவைத் தேர்தல் பேரணியில் கலந்து கொண்ட அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “இந்தியாவில், முத்தலாக் மறுமலர்ச்சியையோ, குழந்தை திருமணத்தையோ அல்லது பலதார மணத்தையோ ஆதரிப்பதையோ யாரும் விரும்பவில்லை. சமூகத்தை பிளவுபடுத்தி ஆட்சிக்கு வர காங்கிரஸ் விரும்புகிறது” என குற்றம்சாட்டி உள்ளார்.
அசாமில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் என கூறிய அவர், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 14 லோக்சபா தொகுதிகளையும் கைப்பற்றும் என கூறினார்.
ஹிமந்தா சர்மாவின் கருத்துகளுக்குப் பதிலளித்த காங்கிரஸ், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பற்ற மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நெறிமுறைகளைப் புரிந்து கொள்ள மாட்டார் என தெரிவித்துள்ளது.
அஸ்ஸாம் காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் பெதப்ரதா போரா இது குறித்து கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையானது அனைத்துப் பிரிவினரின் நலன்களையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஹிமந்த பிஸ்வா சர்மா காங்கிரஸில் பல வருடங்கள் இருந்தும், கட்சியின் முக்கிய கொள்கையை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை என கூறி உள்ளார்.