Rahul Gandhi ’70 கோடி மக்களின் சொத்து 21 பணக்காரர்களிடம் உள்ளது!’ தமிழ்நாட்டை அதிர வைத்த ராகுல்!
”பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் போன்ற ஜாம்பவான்களை இந்த உலகத்திற்கு தமிழ்நாடு தந்து உள்ளது”

திருநெல்வேலி தொகுதிக்கு உட்பட்ட பாளையங்கோட்டையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டுக்கு ஒவ்வொரு முறை வருவதையும் காதலோடு செய்கிறேன். நான் தமிழ்நாட்டு மக்களை விரும்பவில்லை, அவர்களை காதலிக்கிறேன். தமிழ்நாட்டில் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு ஆகியவை மிகப்பெரிய ஆசிரியர்கள். என்னால் உங்கள் மொழியை பேச முடியவில்லை, ஆனால் உங்கள் வரலாற்றை நான் படித்துள்ளேன். தமிழர்களின் கலாச்சாரம், கலை, பண்பாடு, உலத் தொடர்பு ஆகியவை என்னை ஈர்த்தது.
பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் போன்ற ஜாம்பவான்களை இந்த உலகத்திற்கு தமிழ்நாடு தந்து உள்ளது. சமூகநீதி பாதையில் நாடு எப்படி நடக்க வேண்டும் என்பதை இந்த மக்கள்தான் நாட்டுக்கே தெரிவித்து உள்ளீர்கள். பாரத் ஜோடா யாத்திரையை தமிழ்நாட்டில் இருந்துதான் நான் தொடங்கினேன். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்தேன்.
என் மீதும், எனது குடும்பத்தின் மீதும் தமிழக மக்கள் பேரன்பை வைத்துள்ளனர். இது ஒரு குடும்ப உறவு போன்றதே தவிர அரசியல் ரீதியிலான உறவு அல்ல.
டெல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் போராடிய போது அவர்களின் வலி, எனது வலியாக இருந்தது. இன்றைக்கு சிந்தாந்த போர் நடந்து வருகிறது. ஒரு பக்கம் பெரியார், சமூகநீதி, சமத்துவத்திற்கும் மறுபக்கம், ஆர்.எஸ்.எஸ். நரேந்திரமோடி மற்றும் அவரது அரசுக்கும் இடையிலான போர் நடந்து வருகிறது.
ஒரு நாடு, ஒரு தலைவர், ஒரு மொழி என நரேந்திர மோடி கூறுகிறார். இந்தியாவில் உள்ள மற்ற மொழிகளை விட தமிழ் மொழி எந்த விதத்திலும் குறைந்தது அல்ல. இந்த நாட்டில் பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரங்கள் உள்ளன.
தமிழ் என்பது வெறும் மொழி அல்ல; தமிழ் என்பது தங்களை எப்படி புரிந்து கொள்கிறார்கள் என் தமிழ் மொழி மீது தொடக்கப்படும் எந்த தாக்குதலையும், தமிழர்கள் மீதான தாக்குதலாகவே நான் பார்க்கிறேன். என்னை பொறுத்தவரை உங்கள் மொழியும், கலாச்சாரமும், பண்பாடும் எனக்கு மிக மிக முக்கியம்.
நாட்டில் வேலை வாய்ப்பின்மை 83 சதவீதமாக உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தை விட தற்போது உள்ள இந்தியா சமச்சீர் அற்ற இந்தியாவாக உள்ளது. 70 கோடி மக்களிடம் உள்ள செல்வத்தை 21 இந்தியர்கள் தங்கள் கைகளில் வைத்து உள்ளனர். ஆனால் ஒவ்வொரு நாளும் 30 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் இந்த நாட்டின் பிரதமர் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யாமல், 16 லட்சம் கோடி கடனை பணக்காரர்களுக்கு தள்ளுபடி செய்துள்ளார்.
தமிழ்நாட்டை சேராத சில தொழில் துறையினருக்கு எல்லா காண்ட்ரெக்ட்களும், ஒப்பந்தங்களும் தரப்படுகிறது. பிரதமருக்கு நெருக்கமாக உள்ள திரு.அதானிக்கு, துறைமுகங்கள், பாதுகாப்புதுறை, விமான நிலையங்கள், சோலார் ஆற்றல், நிலக்கரி ஆற்றல் உள்ளிட்டவை ஒப்படைக்கப்படுகிறது.
ஆனால் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டிக்கு பிறகு ஒட்டுமொத்த சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் சீரழிந்துவிட்டது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை ஆகியவை அரசியல் ஆயுதங்களாக மாறி உள்ளது,
தேர்தல் ஆணையர்களை பிரதமர் தேர்வு செய்கிறார். தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சி வங்கி கணக்கு முடக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் நாட்டின் இயற்கை வளங்கள் சில பணக்காரர்களுக்கு செல்கின்றன.
தமிழ்நாட்டின் வெள்ள நிவாரணத்திற்கு பணம் தர மத்திய அரசு மறுக்கிறது. தமிழ் மீனவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என ராகுல் காந்தி பேசினார்.
