தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  ’தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது’ மழை நிவாரணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

’தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது’ மழை நிவாரணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

Kathiravan V HT Tamil
Apr 27, 2024 09:40 PM IST

”பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்”

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி - கோப்புபடம்
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி - கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

கர்நாடகா மாநிலத்திற்கு வறட்சி நிவாரணமாக 3454 கோடி ரூபாயும், தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு நிவாரணமாக 275 கோடி ரூபாயும் ஒதுக்குவதாக மத்திய அரசு இன்று அறிவித்தது.

கர்நாடகாவில் முதற்கட்ட தேர்தல் முடிந்து இன்னும் ஒரு கட்ட தேர்தல் வர உள்ள நிலையில் மத்திய அரசின் இந்த செயல்பாட்டை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில் இட்டுக்க வலைத்தளப்பதிவில், “மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!” என கூறி உள்ளார்.

கடந்த காலங்களில் தமிழகத்திற்கு மத்திய அரசு நிவாரண நிதி வழங்கியதே இல்லை என்றும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் குற்றம்சாட்டி இருந்தார்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்தியில் எந்தக் கட்சிகள் ஆட்சியைப் பிடித்தாலும், தமிழகத்தின் நிலை மாறாது என்று கூறிய அவர், மத்தியில் ஆளும் பாஜக அரசையும், மாநிலத்தில் ஆளும் திமுகவையும் கடுமையாக விமர்சித்தார்.

2023 டிசம்பரில் மிச்சாங் புயலால் ஏற்பட்ட இழப்பைச் சமாளிக்க மாநிலத்திற்கு உதவ மத்திய அரசிடமிருந்து நிதி உதவி இல்லை என்று புகார் கூறி வரும் திமுக அரசு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கூட நிதியைப் பெற முடியவில்லை என்று அவர் கூறினார்.

அதிமுக ஆட்சியில் தானே, வர்தா போன்ற பல புயல்கள் தமிழகத்தை தாக்கி அழிவின் சுவடுகளை விட்டுச் சென்றன. ஆனால், அப்போது அரசு கேட்ட பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லை.

"குறைவாகக் கொடுக்கிறார்கள். மாநில அரசு கேட்கும் தொகையை அவர்கள் தர மாட்டார்கள்" என்று அதிமுக பொதுச் செயலாளர் மேலும் கூறினார்.

கர்நாடக மாநிலத்தில் வறட்சியைத் தணிக்க ரூ.18,172 கோடி கேட்ட நிலையில் ரூ.3,454 ஒதுக்கிய மத்திய பாஜக அரசை கண்டித்து கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் நாளை (ஏப்ரல் 28) ஆர்ப்பாட்டம் அறிவித்து உள்ளார்.

மத்திய அரசு அறிவித்துள்ள மிகச் சொற்ப நிவாரணத் தொகை விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளிக்கப் போதுமானதாக இருக்காது என அவர் செய்தியாளர்களிடம் இங்கு செய்தியாளர்களிடம் கூறினார்.

இது தொடர்பாக, விதான் சவுதாவில் உள்ள காந்தி சிலை அருகே போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். மேலும் வறட்சி நிவாரணம் கோரி சட்டப் போராட்டம் தொடரும். நாங்கள் பிச்சை கேட்கவில்லை, இது எங்கள் உரிமை" என்று அவர் குறிப்பிட்டார்.

WhatsApp channel