MK Stalin vs EPS: ’புலிப்பாண்டி எலிப்பாண்டியாக மாறிவிட்டார்!’ நாதஸ் காமெடியை வைத்து கலாய்த்த ஸ்டாலின்!
”இத்தனையையும் செய்துவிட்டு, கரகாட்டகாரன் படத்தில் கவுண்டமணி காமெடி வருமே, “நாதஸ் திருந்திட்டான்…” என்று அதுபோன்று இப்போது பேசிக் கொண்டு, வாக்கு கேட்டுக் கொண்டு இருக்கிறார்!”
வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் அரக்கோணம் வேட்பாளர் ஜெகத்ரட்சகன் மற்றும் வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோரை ஆதரித்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், வீரத்தின் விளைநிலமான வேலூருக்கு வந்திருக்கிறேன்! முதல் விடுதலைப் போர் தொடங்கிய வேலூர் கோட்டைக்கு வந்திருக்கிறேன்! இப்போது ஜனநாயகம் காக்கும் இரண்டாம் விடுதலைப் போருக்கு வந்திருக்கிறேன். இந்தப் போரில் வெற்றிக்கு கட்டியம்கூறும், இந்த மாபெரும் கூட்டத்தில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் என் மாலை வணக்கம்!
வேலூர் - அரக்கோணம் தொகுதி வேட்பாளர்களுக்கு உங்கள் ஆதரவைக் கேட்டு வந்திருக்கிறேன். அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் அண்ணன் ஜெகத்ரட்சகன் அவர்கள், ‘திராவிட ஆழ்வார்!’ அரசியல் – கல்வி – இலக்கியம் - ஆன்மீகம் – தொழிற்துறை என்று பன்முக ஆற்றல் கொண்ட அண்ணன் ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து கடந்த தேர்தலைவிட மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு தம்பி கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். தி.மு.க.வின் ‘இடி – மின்னல் – மழை’ எனப் போற்றப்பட்டவர்களில் ‘மின்னல்’தான் அண்ணன் துரைமுருகன். திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், மூத்த அமைச்சரும் கடந்த 60 ஆண்டுகாலமாக, தலைவர் கலைஞருக்கும் – தொடர்ந்து எனக்கும் உற்றதுணையாக இருக்கும், அருமை அண்ணன் துரைமுருகன் அவர்களின் மகன் – தம்பி கதிர் ஆனந்த் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
கடந்த தேர்தலில் இவரின் வெற்றியைத் தடுக்க, தேர்தலைத் தள்ளி வைத்தார்கள். ஆனால் நீங்கள் அவர்களைத் தள்ளி வைத்து வெற்றியைத் தந்தீர்கள். இந்தத் தேர்தலில், தம்பி கதிர் ஆனந்த் அவர்களை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
நம்முடைய இரண்டு வேட்பாளர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கத் தயாராகிவிட்டீர்களா? நீங்கள் வாக்களிப்பதோடு மட்டுமல்ல, இந்த ஸ்டாலினின் தூதுவனாக, உங்கள் பகுதியில் இருக்கும் மக்களிடமும் உதயசூரியனுக்கு வாக்கு கேட்க வேண்டும். கேட்பீர்களா?
அதன்பிறகு என்ன, வெற்றி உறுதியாகிவிட்டது, வேட்பாளர்கள் அமருங்கள்! திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, நாங்கள் தேர்தல் வந்தால் மட்டும், வருகிறவர்கள் அல்ல! எப்போதும் மக்களுடன் மக்களாக இருப்பவர்கள்! எதிர்க்கட்சியாக இருந்தால், ‘ஒன்றிணைவோம் வா’ என்று உங்களுக்குத் துணையாக இருப்போம்… ஆளும்கட்சியாக வரும்போது திட்டங்களை நிறைவேற்றி ”நீங்கள் நலமா” என்று உங்களிடம் பேசுவோம். தலைவர் கலைஞர் எங்களை அப்படித்தான் வளர்த்திருக்கிறார்!
என்னைப் பொறுத்தவரை, உங்களில் ஒருவனாக - உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பவன்தான், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! ஒவ்வொரு நாளும், நான் என்ன என்ன பணிகளைச் செய்கிறேன் – என்ன திட்டங்களை மக்களுக்காகக் கொண்டு வருகிறேன் – எங்கெல்லாம் பயணிக்கிறேன் என்று உங்கள் அனைவருக்குமே நன்றாகத் தெரியும்! ஏன் என்றால், என்னுடைய பொதுவாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்!
ஆனால், இப்போது தேர்தல் வந்துவிட்டதால், தமிழ்நாட்டிற்குச் சில ‘பார்ட்-டைம்’ அரசியல்வாதிகள் வருகிறார்கள்! யாரைச் சொல்கிறேன் என்று உங்களுக்கே தெரியும். யார்? பிரதமர் மோடி. பொய்களையும், அவதூறுகளையும் துணைக்கு அழைத்துக் கொண்டு தேர்தல் சீசனிற்கு மட்டும் வருவார்! வெள்ளம் வந்தால் வர மாட்டார்! நிதி கேட்டால் கொடுக்க மாட்டார்! சிறப்புத் திட்டம் கேட்டால் செய்ய மாட்டார்! இப்படி, மக்களை ஏமாற்றி – தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்து தராமல் - துரோகம் செய்து - பார்ட்-டைம் அரசியல்வாதிகளை நீங்கள் புறக்கணிக்க வேண்டும்! தேர்தல் முடிந்ததும் தமிழ்நாட்டுப் பக்கமே வரமாட்டார்கள்.
உங்களிடம் நான் கேட்கும் வாக்கு ஜெகத்ரட்சகனுக்கும், கதிர் ஆனந்துக்கும் மட்டுமல்ல! இந்த நாட்டில் சர்வாதிகாரம் தலைதூக்கக் கூடாது – ஜனநாயகம் கேள்விக்குறியாக மாறிவிடக் கூடாது – சமூகநீதி காற்றில் பறக்கக் கூடாது – மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் அறவே கூடாது என்பதற்காகத்தான் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.
இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொருவரின் வாக்கும் – தமிழ்நாட்டை மேலும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும்! தமிழ்நாட்டை வெறுக்கும் பிரதமர் மோடிக்கு பதிலாக – இந்தியா கூட்டணியின் சார்பில் பிரதமர் ஆகப்போகிறவர், நிச்சயமாக இந்திய ஜனநாயகத்தின்மேல் உண்மையான மதிப்பும் – இந்திய மக்கள்மேல் உண்மையான பாசமும் – அரசியல் சட்டத்தை மதிக்கும் பண்பும் – ஏன், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, பெரும் துணையாக இருப்பவராக இருப்பார்.
நம்முடைய திராவிட அரசைப் பொறுத்தவரை, ”எல்லோருக்கு எல்லாம்” – “அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலான – சீரான வளர்ச்சி” என்ற அடிப்படையில்தான் செயல்பட்டு வருகிறது.
நாம் செய்துள்ள சாதனைகள், பத்தாண்டு கால அ.தி.மு.க. அவல ஆட்சியின் இருளை அகற்றி, தமிழ்நாட்டிற்கு விடியலை ஏற்படுத்தியிருக்கிறது… அதுமட்டுமல்ல, இன்றைக்குக் காலையில் நான் பெருமைகொள்ளும் ஒரு செய்தியை ”சோசியல் மீடியா” என்ற சமூக வலைத்தளங்களில் பார்த்தேன். நம்முடையத் திட்டங்கள் இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே முன்னோடியாக இருக்கிறது. இன்றைக்கு கனடா நாட்டில், காலை உணவுத் திட்டம் கொண்டு வந்துள்ளார்கள்.
இந்தத் திட்டம் எப்படி உருப்பெற்றது? பெருந்தலைவர் காமராசர் அவர்கள் மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்ததற்குக் காரணமாக ஒரு சம்பவம் சொல்வார்கள். பெருந்தலைவர் அவர்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது, விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைச் சந்தித்தாராம். “இன்றைக்குப் பள்ளிக்குப் போகவில்லையா?” என்று கேட்டிருக்கிறார். “குடும்பத்தில், உணவுக்கே வழியில்லாததால் - எங்கள் அப்பா-அம்மா பள்ளிக்கு அனுப்பவில்லை” என்று அந்த சிறுவர்கள் சொல்லவும், பள்ளியில் மதிய உணவு அளித்தால் அதற்காகவாவது குழந்தைகளைப் படிக்க அனுப்புவார்கள் என்று சிந்தித்த பெருந்தலைவர் மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கினார்.
எனக்கும் அதுமாதிரி ஒரு நிகழ்வு நடந்தது! நான் முதலமைச்சர் ஆனவுடன், சென்னையில் ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு காலையில் சென்றிருந்தேன். ஒரு குழந்தையைப் பார்த்து, “என்னம்மா சாப்ட்டீங்களா” என்று யதார்த்தமாக கேட்டேன். அதற்கு அந்தக் குழந்தை ”வீட்டில் அப்பா–அம்மா வேலைக்குச் செல்கிறார்கள்… காலையில் டிபன் செய்ய மாட்டார்கள்… அதனால் சாப்பிடவில்லை” என்று சொன்னதும், எனக்கு மனதே சரியில்லை! கோட்டைக்குச் சென்றவுடன், அதிகாரிகளை அழைத்தேன். “பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் கொண்டு வர வேண்டும், திட்டத்தைத் தயார் செய்யுங்கள்” என்று சொன்னேன்.
அதிகாரிகள் என்னிடம் மிகவும் பணிவாக, ”சார், நம்முடைய நிதிநிலை மோசமாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இது நம்முடைய தேர்தல் அறிக்கையில்கூட சொல்லவில்லை” என்று கூறினார்கள். உடனே நான் சொன்னேன், “வாக்குறுதி கொடுக்கவில்லை என்றால் என்ன? நம்முடைய எதிர்காலத் தலைமுறை குழந்தைகள்தான். அவர்கள் காலையில் நன்றாக சாப்பிட்டு, நல்ல உடல்நலத்துடன் இருந்தால்தான் அவர்கள் படிப்பது மனதில் பதியும். இதை நாம் கண்டிப்பாக செய்ய வேண்டும். நிதிநிலை சரி செய்யவும் திட்டம் போடுவோம். நீங்கள் ஃபைல் தயார் செய்யுங்கள்” என்று உத்தரவு போட்டேன். அப்படி கொண்டு வந்த கோப்பில் கையெழுத்து போட்ட கைதான் இந்த ஸ்டாலின் கை.
வரலாறும் - மக்களான நீங்களும் இந்த ஸ்டாலினுக்குக் கொடுத்த வாய்ப்பால், இன்றைக்கு, தமிழ்நாடு முழுவதும் 16 இலட்சம் குழந்தைகள் வயிறாரச் சாப்பிடும் காலை உணவுத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுகிறது.
அதேமாதிரி, நம்முடைய முத்தான திட்டங்களால், பலரின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது! என்னுடைய அலுவலகத்துக்கு சிறிது நாட்களுக்கு முன்பு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில், ”தன்னுடைய கணவர் மறைந்து ஏழு ஆண்டுகள் ஆகிறது என்றும், தன்னுடைய மகன், மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் தனிக்குடித்தனம் சென்றுவிட்டதாகவும் சொல்லிவிட்டு, என்னுடைய செலவுக்கான பணத்திற்கு, என் பையனை எதிர்பார்க்கும் நிலைமையில் இருந்தேன். இப்போது நீங்கள் ஆயிரம் ரூபாய் தருவதால், என்னுடைய செலவை நானே பார்த்துக்கொள்வதுடன், என் பேரப் பிள்ளைகளுக்கு என் பணத்திலிருந்து, எதாவது வாங்கித் தருகிறேன்... இது போதும் அய்யா எனக்கு” என்று நெகிழ்ச்சியோடு எழுதியிருந்தார்கள்... அந்த அம்மாவின் சுயமரியாதையில்தான், கலைஞர் மகளிர் உரிமைத் தொகையின் வெற்றி இருக்கிறது!
இப்படி, தமிழ்நாடு முழுவதும் இருக்கும் 1 கோடியே 15 இலட்சம் மகளிர் இந்தத் திட்டத்தின் மூலமாக, வாங்கும் ஆயிரம் ரூபாயை, “எங்கள் அண்ணன் ஸ்டாலின் தரும் தாய்வீட்டுச் சீர்” என்று உரிமையோடும், மகிழ்ச்சியோடும் சொல்கிறார்கள்!
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்றே, பேருந்தில் மகளிர் இலவசமாகப் பயணம் செய்ய, விடியல் பயணம் திட்டம்,
கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும், புதுமைப்பெண் திட்டம்,
மாணவர்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப் போகும், தமிழ்ப்புதல்வன் திட்டம்,
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும், நான் முதல்வன் திட்டம் என்று நாள்தோறும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி, மக்களுக்கான அரசாக தி.மு.க. ஆட்சி செயல்பட்டு வருகிறது! நம்முடைய சாதனைகள் போன்றே, இந்தியா கூட்டணி ஆட்சி ஒன்றியத்தில் அமைந்ததும் சாதனைகளாக மாறப்போகும் வாக்குறுதிகளைத் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறோம். அதில் சிலவற்றை மட்டும் சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன்…
பத்தாண்டுகளாக சாமானிய மக்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று சிறிதும் நினைத்துப் பார்க்காமல், மக்கள் விரோத பா.ஜ.க. அரசால் தொடர்ந்து உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும்!
சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும்!
தொழிலாளர் விரோதச் சட்டங்கள், மறுசீரமைப்பு செய்யப்படும்!
ஜி.எஸ்.டி. சட்டத்தில் சீர்திருத்தம் செய்யப்படும்!
விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளிலும் - வங்கிகளிலும் வாங்கியிருக்கும் கடனும் – வட்டியும் தள்ளுபடி செய்யப்படும்!
உழவர்களின் வேளாண் விளைபொருட்களுக்கு மொத்த உற்பத்தி செலவுடன் ஐம்பது விழுக்காடு என்பதை வலியுறுத்திக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும்!
தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச் சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் 100-இல் இருந்து, 150 நாட்களாகவும், ஊதியம் 400 ரூபாயாகவும் உயர்த்தப்படும்!
மாணவர்களின் கல்விக்கடன் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்!
வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்!
மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தோர் மற்றும் மாணவர்களுக்கு இரயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்!
ஜோலார்பேட்டை இரயில் நிலையம் முதல் கிருஷ்ணகிரி, ஓசூர் இரயில் நிலையம் வரை புதிய இரயில் பாதைத் திட்டம்!
தமிழ்நாட்டில் உள்ளதுபோல் அகில இந்திய அளவிலும் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்!
பரதராமி பகுதியில் மாம்பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும்!
வேலூர் விமான நிலையம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்!
ஆற்காடு பகுதியில் அரசு கலைக் கல்லூரி அல்லது தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படும்!
விளாப்பாக்கம் பேரூரில் கூட்டுறவு வங்கி அமைக்கப்படும்!
சேந்தமங்கலத்தில் இரயில் நிலையம் அமைக்கப்படும்!
நெமிலி ஊராட்சியில் கூட்டுக் குடிநீர்த் திட்டம்!
நகரி முதல் திண்டிவனம் வரை இரயில் பாதை அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்படும்!
இது எல்லாவற்றிற்கும் மேல், முக்கியமாக, சாதிவாரிக் கணக்கெடுப்பும், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்கள் குறித்த கணக்கெடுப்பும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே நேரத்தில் ஒன்றிய அரசால் எடுக்கப்படும். இப்படி பல்வேறு வாக்குறுதிகள் இருக்கிறது.
சிறுபான்மை மக்களின் உண்மையான காவலனாக எப்போதும் தி.மு.க.தான் இருக்கிறது! இஸ்லாமிய மக்களுக்கும் தி.மு.க.வுக்குமான உறவு என்பது இன்றைக்கு - நேற்று ஏற்பட்டது இல்லை. பேரறிஞர் அண்ணாவிடம் முத்தமிழறிஞர் கலைஞரை இணைத்தது, திருவாரூரில் நடந்த மிலாடி நபி விழாதான். தலைவர் கலைஞருக்கு உற்ற பள்ளித்தோழர் – அசன் அப்துல்காதர்! முரசொலியை முதலில் அச்சிட்டுக் கொடுத்தவர் – கருணை ஜமால்! கனல் தெறிக்கும் கலைஞர் வசனங்கள் திரைத்துறையை ஆள - அடித்தளம் இட்டவர் கவிஞர் கா.மு.ஷெரீப். இன்றைக்கும் கழக உடன்பிறப்புகளின் உணர்ச்சி கீதமாக இருக்கும் “கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே” என்ற பாடலைத் தந்தவர், நாம் பெரிது மதிக்கும் நாகூர் ஹனிபா அவர்கள்! முதன்முதலாக 1967-இல் தி.மு.க. ஆட்சி அமைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணியில், பேரறிஞர் அண்ணாவிற்குப் பக்கபலமாக இருந்து தி.மு.க. வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்தத் துணை நின்றவர், கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள்! அந்த உறவின் அடையாளமாகத்தான், சிறுபான்மையின மக்களின் முன்னேற்றத்திற்காக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் திட்டங்கள் அறிவித்து, செயல்படுத்துகிறோம்.
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சிறுபான்மை மக்களுக்கு 3.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு!
சிறுபான்மையினர் நல ஆணையம்!
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்!
உருது அகாடமி!
தமிழ்நாடு வக்பு வாரிய நிர்வாகச் செலவுக்காகத் தமிழ்நாடு அரசின் சார்பில் நிதி!
ஹஜ் மானியம் அதிகரிப்பு!
நபிகள் நாயகம் பிறந்தநாள் அரசு விடுமுறையாக அறிவிப்பு!
சிறுபான்மையினர் நல இயக்ககம்!
சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் என்று, இப்படி கலைஞர் வகுத்துத் தந்த பாதையில், நம்முடைய திராவிட மாடல் அரசு, சிறுபான்மை சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்தை நடத்தினோம். அதில், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அறிவிப்புகளை அப்போதே வெளியிட்டேன்.
பள்ளி வாசல்கள் மற்றும் தர்க்காக்கள் மேம்பாட்டுக்கான மானியத் தொகை 10 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
வக்பு சொத்துக்களை சர்வே செய்வதற்காக 2 கோடி ரூபாய் அரசு நிதி!
கல்லறைத் தோட்டம் மற்றும் கபரிஸ்தான்களுக்குப் புதிதாக சுற்றுச் சுவர் மற்றும் பாதை அமைக்க நிதி!
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம், 9 ஆயிரத்து 217 சிறுபான்மையின பயனாளிகளுக்கு, 62 கோடி ரூபாய் கடன்!
அதில் முக்கியமாகச் சொல்ல வேண்டும் என்றால், மெட்ரிக் கல்விக்குமுந்தைய கல்வி உதவித் தொகையை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. அதை வழங்க வேண்டும் என்று 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நான் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினேன். வழக்கம்போல் தமிழ்நாட்டில் இருந்து வந்த கடிதம் என்று அவர் கவனிக்கவில்லை போல! நிறுத்தப்பட்டிருந்த அந்தக் கல்வி உதவித் தொகையை இனி தமிழ்நாடு அரசே வழங்கும் என்று அந்த கூட்டத்திலேயே நான் அறிவித்தேன். இனி அந்த உதவித்தொகை, தமிழ்நாடு அரசு உதவியோடு வக்பு வாரியங்கள் மூலம் முஸ்லீம் மாணவர்களுக்கு வழங்கப்படும்!
சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு, வாழ்நாள் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பது உங்களது நீண்ட நாள் கோரிக்கை! மாநில அரசால், கல்வி நிறுவனங்களுக்கு இது வழங்கப்படும். இப்படி எண்ணற்ற சாதனைகளைச் சிறுபான்மையின மக்களுக்கு செய்து கொடுத்த - செய்து கொடுக்கும் - செய்யப் போகும் - அரசுதான் நம்முடைய திராவிட மாடல் அரசு.
அ.தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, சிறுபான்மையின மக்களின் முதுகில் குத்தினார் பழனிசாமி! இப்போது பா.ஜ.க.வுடன் கள்ளக்கூட்டணி வைத்துக் கொண்டு, புதியதாக சிறுபான்மையினர்மேல் அக்கறை வந்தது போன்று நடிக்க ஆரம்பித்திருக்கிறார்!
இப்போது சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துகிறோம் என்று மோடியும் – அமித்ஷாவும் சொல்லியிருக்கிறார்கள். இந்தச் சட்டம் 2019-இல் மாநிலங்களவையில், அ.தி.மு.க.வும் - பா.ம.க.வும் ஆதரித்து ஓட்டு போட்டதால்தான், இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வந்திருக்கிறது! எவ்வளவு பெரிய துரோகத்தைச் சிறுபான்மையின மக்களுக்கு செய்துவிட்டு, இப்போது அந்தச் சட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்று சொல்வது, பசப்பு நாடகம் இல்லையா? இதில் கடந்த 5 ஆண்டில் நம்முடைய எம்.பி.க்கள் என்ன செய்தார்கள் என்று கேட்கிறார்கள்? ஒன்றிய அரசு மக்கள் விரோதச் சட்டங்கள் கொண்டு வந்தபோது, நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எவ்வளவு போராட்டம் நடத்தினோம்!
உதாரணத்திற்கு, இந்த சி.ஏ.ஏ. சட்டம் வந்தபோது, தி.மு.க.வும் தோழமைக் கட்சிகளும்தான் உறுதியாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து, எதிர்த்து வாக்களித்தது. பழனிசாமி என்ன செய்தார்? நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்தது மட்டுமல்ல, ”அதில் எந்த முஸ்லிம் பாதிக்கப்படுகிறார்” என்று, அட்டர்னி ஜெனரல் மாதிரி ’லா பாய்ண்ட்’ எல்லாம் பேசினார்! இந்தச் சட்டத்தை எதிர்த்து அமைதியாகப் போராடிய மக்கள்மேல், பெண்கள் - குழந்தைகள் என்றுகூட பார்க்காமல் லத்தி சார்ஜ் செய்தார். இந்தச் சட்டத்தை எதிர்த்துச் சென்னையில் போராடிய என் மேலும் – மரியாதைக்குரிய ப.சிதம்பரம் - சகோதரர் திருமாவளவன் – தோழர் பாலகிருஷ்ணன் – மரியாதைக்குரிய ஜவாஹிருல்லா - தம்பி உதயநிதி உள்ளிட்ட எட்டாயிரம் பேர் மேல் ஒரே நேரத்தில் F.I.R. போட்டு மோடிக்கும் – அமித்ஷாவுக்கும் தன்னுடைய விஸ்வாசத்தை வெளிக்காட்டினார் பழனிசாமி!
ஆனால், இதற்கெல்லாம் பயப்படாமல், சி.ஏ.ஏ.க்கு எதிராகக் கையெழுத்து இயக்கத்தை மக்கள் இயக்கமாக நடத்தி, இரண்டு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பினோம். அதுமட்டுமா, நான் ஏற்கனவே சொன்னேனே… “சி.ஏ.ஏ. ரத்து செய்வதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்த உடனே…” ஒட்டுமொத்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன், அவையை விட்டே ஓடிவிட்டார் பழனிசாமி! இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் என்ற தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்திருக்கிறோம்.
இதேபோன்று ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குறுதி கொடுத்து, பொடா சட்டத்தை ரத்து செய்தோம்! ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு, சி.ஏ.ஏ.-வும் ரத்து செய்யப்படும்!
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு மட்டுமல்ல, பதவி சுகத்தை அனுபவிக்க, நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்களை நீட் தேர்வை எழுத வைத்தார் பழனிசாமி! மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்தார். ”எந்த விவசாயி பாதிக்கப்படுகிறார், நான் விவாதம் நடத்தத் தயாராக இருக்கிறேன்” என்று உழவர்களின் துயரத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டே, பச்சைத் துண்டு போட்டு பச்சை துரோகம் செய்தார் பழனிசாமி.
இந்த லட்சணத்தில் “நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறோம்… எப்படி மோடியை எதிர்க்க முடியும்… ஆளுங்கட்சியாக இருந்தால் எதிர்ப்பேன்” என்ற வியாக்கியானம் பேசுகிறார். மக்கள் விரோதச் சட்டங்கள் எல்லாம் கொண்டு வந்தபோது – ’அந்த புலிப்பாண்டி – எலிப்பாண்டியாக மாறி’ பா.ஜ.க. காலில் விழுந்து கிடக்கிறார். இத்தனையையும் செய்துவிட்டு, கரகாட்டகாரன் படத்தில் கவுண்டமணி காமெடி வருமே, “நாதஸ் திருந்திட்டான்…” என்று அதுபோன்று இப்போது பேசிக் கொண்டு, வாக்கு கேட்டுக் கொண்டு இருக்கிறார்! சொரணையும், சுயமரியாதையும் இல்லாத பழனிசாமி போன்று இல்லாமல், எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எந்த நிலைமையிலும் மக்கள் விரோத பா.ஜ.க. அரசை தி.மு.க. எதிர்க்கும். தமிழ்நாட்டு உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும். அ.தி.மு.க அடிமைக் கூட்டம் போன்று, பா.ஜ.க.வை எதிர்க்க வக்கில்லாமல், அதற்கு எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்று சாக்கு போக்கு சொல்லிக் கொண்டிருக்க மாட்டோம்!
எதிர்க்கட்சியாக இருந்தபோதுதான் தமிழ்நாட்டு உரிமைக்காகப் போராடினோம். இப்போது ஆளுங்கட்சியாக இருக்கும்போதும், ஆளுநரின் அத்துமீறல், தமிழ்நாட்டிற்கான நிதி என்று எல்லா பிரச்சினையிலும் உச்சநீதிமன்றம் வரை சென்று, பா.ஜ.க. அரசுக்கு எதிராக வாதாடி நம்முடைய உரிமைகளை நிலைநாட்டுகிறோம்!
இன்றைக்குப் பிரதமராக இருக்கும் மாண்புமிகு மோடி - மாநிலங்களை இல்லாமல் ஆக்க நினைக்கிறார். குஜராத் முதலமைச்சராக இருந்தவருக்கு - இப்போது மற்ற முதலமைச்சர்களைப் பார்த்தாலே கசக்கிறது! மாநில உரிமைகளைப் பறிக்கிறார் – மாநிலங்களுக்கு வரும் நிதியைத் தடுக்கிறார் – தமிழ்நாட்டுக்கு ஒரு சிறப்புத் திட்டம்கூட தர மறுக்கிறார் – மாநில மொழிகளைப் புறக்கணிக்கிறார். எதைச் சரியாகப் பண்ணுகிறார் தெரியுமா? போகும் ஊருக்குத் தகுந்த உடை மட்டும் அணிகிறார் – அந்த ஊரையும் – ஊர் மக்களையும் - அவர்கள் மொழியையும் – பண்பாட்டையும் மதிக்கிறாரா? சமஸ்கிருதத்திற்கு நிதியை அள்ளிக் கொடுத்துவிட்டு, அன்னைத் தமிழுக்குக் கிள்ளிக் கூட தர மறுக்கிறார்.
கூட்டாட்சி என்று சொல்வார்… ஆனால், காட்டாட்சி நடத்த அத்தனை வேலையும் பார்ப்பார்! அதனால்தான், அவரால் மக்களிடம் தன்னுடைய ஆட்சி சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க முடியவில்லை… உடனே என்ன செய்கிறார். பழைய சம்பவங்களைப் பற்றி பொய்யான கதைகளைச் சொல்லி, அதுமூலமாக மக்களை குழப்பி, ஏமாற்றி, தேர்தல் ஆதாயம் அடைய முடியுமா? என்று முயற்சி செய்கிறார்!
அதுதான் கச்சத்தீவு பிரச்சினை! இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்ததைப் பற்றி இப்போது பா.ஜ.க. பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், இது அவர்களுக்கு எதிராகவே திரும்பிவிட்டது. தேன்கூட்டில் கையை வைத்தது போல, இப்போது பா.ஜ.க. மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள்.
2014-இல் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. உச்சநீதிமன்றத்தில் என்ன கூறியது? “கச்சத்தீவு மீண்டும் வேண்டும் என்றால் இலங்கை அரசுடன் போரில்தான் ஈடுபட வேண்டும்” என்று உச்சநீதிமன்றத்தில் கூறியது. இந்தப் பத்தாண்டு காலத்தில் பிரதமர் மோடி, எத்தனை முறை இலங்கைக்குப் பயணம் செய்தார். அப்போதெல்லாம் ஒருமுறையாவது கச்சத்தீவை மீண்டும் கேட்டிருக்கிறார்? இலங்கை அதிபரைச் சந்தித்தபோதெல்லாம் கச்சத்தீவு இந்தியாவிற்குதான் சொந்தம் என்று சொல்லியிருக்கிறாரா? அப்போதெல்லாம் கச்சத்தீவு மோடியின் ஞாபகத்திற்கு வரவில்லை. நேரு காலத்தில் நடந்தது - இந்திரா காலத்தில் நடந்தது எல்லாம் ஞாபகம் இருக்கும் மோடிக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சி ஞாபகம் இருக்கிறதா?
மாண்புமிகு மோடி அவர்களே… கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் 26-ஆம் நாள் சென்னைக்கு வந்து, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டீர்கள். அந்த நிகழ்ச்சியில், ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையைத் தர வேண்டும். நீட் விலக்கு அளிக்க வேண்டும் என்று சில கோரிக்கைகளை வைத்தேன்… அந்தக் கோரிக்கைகளில் முதல் கோரிக்கையாக நான் வைத்ததே, “கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்... மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்” என்றுதான் கோரிக்கை வைத்தேன். ஞாபகம் இருக்கிறதா? அந்தக் கோரிக்கை மனுவையாவது இதுவரை படித்துப் பார்த்தீர்களா… எத்தனை கதைகள்… எத்தனை நாடகங்கள்…
முதலில், RTI விண்ணப்பம் செய்த 4 வேலை நாட்களில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் பற்றி எப்படி தகவல் கொடுத்தார்கள்?
இரண்டாவது, இப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் திரு. ஜெய்சங்கர் அவர்கள், “2015-இல் வெளியுறவுத் துறைச் செயலாளராக இருந்தபோது கொடுத்த தகவலில், கச்சத்தீவு இந்தியாவின் பகுதியாக எப்போதும் இருந்ததில்லை” என்று, பா.ஜ.க. அரசு தகவல் கொடுத்திருக்கிறது. இப்போது தேர்தல் வருகிறது என்று தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி தகவலை மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள். இந்த அந்தர் பல்டி ஏன்?
மூன்றாவது, கடந்த பல ஆண்டுகளாக கச்சத்தீவு பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோதெல்லாம், அதற்கு உரிய பதிலைச் சொல்லவில்லை. எத்தனையோ பேர் R.T.I. விண்ணப்பம் செய்தபோதும் தெளிவான தகவல்களைக் கொடுக்கவில்லை.
உச்சநீதிமன்ற விசாரணையில் இருக்கிறது என்று பதில் சொல்லாமல் இருந்த பா.ஜ.க. அரசு – இப்போது R.T.I. மூலம் எப்படி தவறான தகவலைக் கொடுத்தார்கள்? பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒரு தனிநபருக்கு எப்படி, வெளியுறவுத் துறை நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களைக் கொடுத்திருக்கிறார்கள்?
நான்காவது, கச்சத்தீவிற்காக இப்போது திடீர் கண்ணீர் வடிக்கும் பிரதமர் மோடி, கடந்த பத்தாண்டுகளில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மீனவர்கள் கைது, துப்பாக்கிச்சூடு என்று நடந்ததே? ஒரு கண்டிப்பாவது இலங்கைக்குச் செய்தாரா? ஏன் செய்யவில்லை?
இப்போது, சீனா பற்றியாவது வாய்திறந்தாரா? அருணாசலப் பிரதேசத்தின் பல பகுதிகளுக்குச் சீனா சொந்தம் கொண்டாடுகிறதே? 30-க்கும் மேற்பட்ட நம்முடைய இடங்களுக்குச் சீனமொழியில் பெயர்களை வெளியிட்டிருக்கிறதே? அதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்? இலங்கையைக் கண்டிக்கவும் துணிச்சல் இல்லை, சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை. இந்த லட்சணத்தில் நீங்கள் கச்சத்தீவைப் பற்றிப் பேசலாமா?
பிரதமர் மோடி அவர்களே… நீங்கள் போடும் நாடகம் எல்லாம் இன்னும் சிறிது நாட்களுக்குத்தான் என்பதை எச்சரிக்கையாகச் சொல்ல விரும்புகிறேன். கடந்த 5 ஆண்டுகளில், E.D. – I.T. – C.B.I. என்ற ஒன்றிய அரசின் அமைப்புகளை பா.ஜ.க.வின் கைப்பாவையாக மாற்றி, அவர்களை ரெய்டுக்கு அனுப்புவது, பிறகு பா.ஜ.க.வுக்கு நிதியாகத் தேர்தல் பத்திரங்களை வாங்குவது என்று, 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கிறார்கள். வரலாற்றிலேயே இப்படி ஒரு வசூல் நடந்ததில்லை!
இந்த ஊழல் வெளிவந்ததால், பிரதமர் மோடியின் முகத்தில் தோல்வி பயம் அப்பட்டமாகத் தெரிகிறது. தேர்தல் நெருங்க நெருங்க, தோல்வி பயத்தில் செய்யக் கூடாததை எல்லாம் செய்கிறார்.
காங்கிரஸ் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். சமவாய்ப்புடன் தேர்தல் நடந்தால் பா.ஜ.க. ஆட்சிக்கு சாவுமணி அடிப்பது உறுதி என்று தெரிந்ததால்தான் எல்லா பக்கத்தில் இருந்தும் இப்படி அநியாயம் மேல் அநியாயங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சி இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்த நிலையில், நேற்று உச்சநீதிமன்றத்தில் வருமான வரித்துறை ஆணையர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் முடியும் வரை நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கிறோம் என்று சொல்லிப் பின்வாங்கியிருக்கிறார்கள். பா.ஜ.க.மேல் மக்கள் கோபம் நாளுக்கு நாள் அதிகமாகிறது என்று அவர்களுக்கு புரிந்துவிட்டது. அதனால்தான், அந்தர் பல்டி அடிக்கிறார்கள்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோரைக் கைது செய்ததும் எவ்வளவு பெரிய தவறு என்று பா.ஜ.க. விரைவில் உணரத்தான் போகிறது.
சர்வாதிகாரத்தை நோக்கிப் பயணம் மேற்கொள்ளும் பா.ஜ.க.விடம் நீதி - நேர்மை – நியாயம் என்ற எதையுமே எதிர்பார்க்கவில்லை… அதனால்தான், சட்டத்தின்மேல் நம்பிக்கை வைத்து நீதிமன்றங்களை நாடுகிறோம்… மாநிலங்களை எப்படியெல்லாம் சிறுமைப்படுத்தலாம் என்பதில்தான் பா.ஜ.க.வின் மொத்தச் சிந்தனையும் இருக்கிறது… ஒன்று, மாநிலங்களுக்கான நிதி தராமல் முடக்குவது... இல்லை என்றால், ஆளுநர்களை வைத்து, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் முடக்குவது… இந்த அநீதிகளை எதிர்த்து, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் எல்லோரும் நீதிமன்றத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம். நாமும் போயாகிவிட்டது. செய்தி 2 நாளில் வரும். பாருங்கள்.
நேற்றுகூட… கேரள மாநில அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சென்று வாதாடினார்கள். கர்நாடக அரசு நீதிமன்றம் சென்று வறட்சி நிவாரணம் தரச் சொல்லுமாறு வாதாடுகிறார்கள். நாமும் வெள்ள நிவாரணம் கேட்டுக் கேட்டுப் பார்த்தோம். தரவில்லை. நாளை காலை உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப் போகிறோம். பணம் தராதது மட்டுமல்ல, நமது மாநில அரசு தன்னுடைய நிதியில் இருந்து கொடுத்த பணத்தையும், பிச்சை என்று நக்கலடித்தார் பா.ஜ.க. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள்.
மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் கடமை மாநில அரசுகளுக்குத்தான் இருக்கிறது. மக்களோடு மக்களாக - மக்களுக்கு நெருக்கமாக இருப்பது மாநில அரசுகள்தான். மாநிலங்கள் நீதி பெறவும் உச்சநீதிமன்ற கதவுகளைத்தான் தட்ட வேண்டும்; நிதி பெறவும் உச்சநீதிமன்ற கதவுகளைத்தான் தட்ட வேண்டும் என்றால், இதற்கு எதற்கு மோடி பிரதமர் பதவியில் உட்கார்ந்து இருக்கிறார் என்பதுதான் என்னுடைய கேள்வி.
இந்த நிலைமை மாற வேண்டும்! அதற்காகத்தான் மாநில உரிமைகளுக்கான முழக்கத்தையும், கூட்டாட்சிக்கான குரலையும் தொடர்ந்து எழுப்புகிறோம்! அதற்கு நீதிமன்றம் போன்றே மக்கள் மன்றமும் இந்தத் தேர்தலில் நியாயத் தீர்ப்பு எழுத வேண்டும்!
தமிழுக்கும் - தமிழினத்திற்கும் - தமிழ்நாட்டிற்கும் – விரோதமான கட்சி பா.ஜ.க. பா.ஜ.க.வுக்கு அளிக்கும் வாக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வைக்கும் வேட்டு என்பதை மறந்துவிடாதீர்கள். தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க. தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அ.தி.மு.க. இரண்டையும் ஒரு சேர வீழ்த்துங்கள்.
அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்கு திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் – ஜெகத்ரட்சகன் அவர்களுக்கும், வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு – கதிர் ஆனந்த் அவர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் அளிக்கும் வாக்கு இந்தியாவைக் காக்கட்டும். தமிழ்நாட்டைக் காக்கட்டும். நம் எதிர்காலத் தலைமுறையைக் காக்கட்டும். பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவைக் காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன். நாற்பதும் நமதே! நாடும் நமதே! நாற்பதும் நமதே! நாடும் நமதே! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.