Sarathkumar's Political Journey: உ.பி முதல் சங்கி வரை! நாட்டாமை சரத் குமாரின் அரசியல் பயணம்!
”Actor Sarathkumar's political journey: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜக உடன் இணைத்து தனது அரசியல் பயணத்தை மீண்டும் ரீ ஸ்டார்ட் செய்துள்ளார் சரத்குமார்! நாட்டாமையின் இந்த வண்டி ஓடுமா அல்லது ஓடாமல் நிற்குமா என்பதை காலம்தான் பதில் சொல்லும்”
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜக உடன் இணைப்பதாக அறிவித்துள்ளதன் மூலம் மோடியின் குடும்பத்தில் நடிகர் சரத்குமார் இணைந்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், சஞ்சலத்தில் இருந்த நான் ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்போதும் எத்தனை சீட், யாருடன் கூட்டணி என கேட்பார்கள். இந்த கேள்வி என் மனதை பாதித்தது. மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற கொள்கை அடிப்பட்டு விடுகிறதே என்ற வருத்தம் எனக்கு இருந்தது.
மோடி ஜி அவர்களுக்கு அர்பணித்து சேர்ந்து செயல்பட்டால் என்ன என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இது தொடர்பாக என் மனைவி உடன் பேசினேன். அதற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறினார். கட்சி நிர்வாகிகளிடம் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது குறித்து பேசிய போது, அதற்கு அவர்கள் ஆதரவும் தெரிவித்தனர் என சரத்குமார் கூறினார்.
விஜயகாந்தின் புலன் விசாரணை திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகின் கவனம் பெற்ற நடிகர் சரத்குமார் விரைவில் கதாநாயகனாக அவதாரம் எடுத்தார்.
1994ஆம் ஆண்டில் வெளியான நாட்டாமை திரைப்படம் சரத்குமாரை பட்டித்தொட்டி எங்கும் பிரபலம் ஆக்கியது. அப்போது அன்றைய முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு நாட்டாமை திரைப்பட கேசட்டை சரத்குமார் கொடுத்த நிலையில், அத்திரைப்படம் ஜேஜே தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் சரத்குமார் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி கூறினார்.
இந்த சம்பவம் நடிகர் சரத்குமாருக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்திய நிகழ்வானது. பின்னர் 1996ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திமுக-தமாகா கூட்டணிக்கு ஆதரவு அளித்திருந்தார். அதே போல் நடிகர் சரத் குமாரும் திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை அளித்ததுடன் திமுகவில் தன்னை உறுப்பினராகவும் இணைத்துக் கொண்டார்.
1998ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் திமுக வேட்பாளராக களம் இறங்கிய சரத்குமார், அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.கடம்பூர் ஜனார்தனனிடம் தோல்வி அடைந்தார்.
வெற்றி பெருவார் என திமுக தலைவர் கருணாநிதியாலேயே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சரத்குமாரின் தேர்தல் தோல்வி திமுகவினருக்கே பெரும் அதிர்ச்சியை தருவதாக அமைந்தது.
இருப்பினும் அவரை கைவிடாத திமுக 2001ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்து நாடாளுமன்றம் அனுப்பியது. நாளடைவில் திமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அப்பதவியில் இருந்து விலகிய சரத்குமார் தனது மனைவி ராதிகா உடன் அதிமுகவில் இணைந்தார்.
ஆனால் 2006ஆம் ஆண்டில் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக ராதிகா சரத்குமார் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், சரத்குமாரும் அக்கட்சியில் இருந்து விலகினார்.
இதனை அடுத்து 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி அன்று தனது தலைமையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் இயக்கத்தை சரத் குமார் தொடங்கினார். ”நாற்பது ஆண்டுகளக ஆட்சியில் இருந்தும் மாநிலத்தை மேம்படுத்த எதுவும் செய்யாத திராவிடக் கட்சிகளால் நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம்” என சரத்குமார் வேதனையுடன் கூறி இருந்தார்.
2011 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அதிமுக உடன் சரத்குமார் கூட்டணி அமைத்தார். அவரது கட்சிக்கு 2 இடங்களை ஜெயலலிதா ஒதுக்கினார்.
அத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட சரத்குமார் தென்காசி தொகுதியிலும், அவரது கட்சியை சேர்ந்த எர்ணாவூர் நாராயணன் நாங்குநேரி தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.
ஆனால் சரத்குமாருக்கு இருந்த அரசியல் செல்வாக்கு நாளடைவில் குறையத் தொடங்கியது. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் இடம் தோல்வியை தழுவினார். அடுத்து நடைபெற்ற 2016 தேர்தல் கூட்டணியில் சரத்குமாருக்கு அதிமுக முக்கியத்துவம் தரவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. அவரது கட்சியில் எம்.எல்.ஏவாக இருந்த எர்ணாவூர் நாராயணன் விலகி தனி கட்சியை தொடங்கினார்.
கூட்டணியில் தங்களை கறிவேப்பில்லையாக பயன்படுத்தப்பட்டதாக வெளிப்படையாக சரத்குமார் கூறினார். இந்த நிலையில் அடுத்த சில தினங்களில் சரத்குமாருக்கு தேர்தலில் போட்டியிட அதிமுக சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு தென்காசி தொகுதியை ஒதுக்கீடு செய்வதற்கு பதிலாக திமுக பலமாக இருந்த திருச்செந்தூர் தொகுதியை ஒதுக்கியது. அத்தேர்தலில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் சரத்குமார் தோல்வி அடைந்தார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் சரத்குமார் இருந்தாலும் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. 2021 தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி உடன் இணைந்து 37 இடங்களில் போட்டியிட்ட சரத்குமாரின் கட்சி எல்லா இடங்களிலும் டெப்பாசிட் இழந்தது.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சரத்குமார் ”Cஎனது மாமியார் என்னை எப்போது முதலமைச்சராகப் பார்க்கப்போகிறேன் எனக்கேட்கிறார்” என பேசியது பெரும் பேசுபொருள் ஆகி இருந்தது.
இந்த நிலையில் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜக உடன் இணைத்து தனது அரசியல் பயணத்தை மீண்டும் ரீ ஸ்டார்ட் செய்துள்ளார் சரத்குமார்! நாட்டாமையின் இந்த வண்டி ஓடுமா அல்லது ஓடாமல் நிற்குமா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9