ADMK: ’கரூர்காரர்களுக்கு கோவை க்ளைமெட் தெரியாது!’ அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Admk: ’கரூர்காரர்களுக்கு கோவை க்ளைமெட் தெரியாது!’ அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பேட்டி!

ADMK: ’கரூர்காரர்களுக்கு கோவை க்ளைமெட் தெரியாது!’ அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பேட்டி!

Kathiravan V HT Tamil
Mar 25, 2024 06:06 PM IST

“10 ஆண்டுகளாக பிரதமராக இருந்த மோடி கோவைக்கு எதுவும் செய்யவில்லை. நீங்க கூப்பிட்டால் ஓடோடு வந்துவிடுவேன், கரூர்காரர்களுக்கு கோவை க்ளைமெட் தெரியாது”

கோவை நாடாளுமன்ற வேட்பாளர்கள் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் அண்ணாமலை
கோவை நாடாளுமன்ற வேட்பாளர்கள் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் அண்ணாமலை

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

உற்றுநோக்கப்படும் கோவை தொகுதி!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதி மிகவும் உற்றுநோக்கப்படும் தொகுதியாக மாறி உள்ளது. தேர்தலில் நிற்கப்போவதில்லை என அறிவித்திருந்த பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கோவை மக்களவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதை முன்கூட்டியே கணித்து இருந்த திமுக, கம்யூனிஸ்ட் வசம் இருந்த கோவை தொகுதியை தன் வசப்படுத்தி கோவைக்கு பதிலாக திண்டுக்கல் தொகுதியை ஒதுக்கியது.

அதிமுக சார்பில் முன்னாள் மேயராக இருந்த முனைவர் கணபதி ராஜ்குமாரை திமுக வேட்பாளராக களம் இறக்கி உள்ளது. மேலும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக டி.ஆர்.பி.ராஜாவை நியமித்துள்ளது.

அதிமுக வேட்பாளராக முன்னாள் சிங்கை எம்.எல்.ஏ கோவிந்தராஜன் மகனான சிங்கை ராமச்சந்திரனை எடப்பாடி பழனிசாமி களம் இறக்கி உள்ளார். அகமதாபாத் ஐஐஎம்மில் மேலாண்மை பட்டம் பெற்ற சிங்கை ராமச்சந்திரன், அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகியாக உள்ளார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி வேட்பாளராக சீமானால் நிறுத்தப்பட்டுள்ளார்.

சிங்கை ராமச்சந்திரன் பேட்டி

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், அதிமுக சார்பில் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளோம்.  கோவை தொகுதி குளுகுளுன்னு உள்ளது என வெளியூரில் இருந்து வந்தவர்கள் சொல்வார்கள், இந்த தண்ணீர், பேச்சு, பண்பாடு நிறைந்த ஊர் அமைவது ரொம்ப கஷ்டம்.  இந்த ஊரை கடந்த ஆட்சியில் அண்ணன் எஸ்.பி.வேலுமணி அவர்கள் 50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் செய்தார். தமிழ்நாட்டிலேயே மிக நீண்ட பாலமாக அவிநாசி ரோடு பாலம் உள்ளது. 

வளர்ச்சி என்றால் அதுதான், எங்கள் அண்ணனுக்கும், எடப்பாடியாருக்கும் தொலைநோக்கு பார்வை இருந்தது. பெங்களூருவில் தண்ணீர் பஞ்சம் உள்ளது. அந்த மாதிரி நிலை கோவைக்கு வராமல் இருக்க அதிமுக பல திட்டங்களை கொடுத்தது. 

இதனால்தான் கோவை மக்கள் 11 தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றி பெற வைத்தனர். ஆனால் தற்போது கோவை வளர்ச்சி பெறாமல் உள்ளது. திமுக கூட்டணியில் கோவையில் வென்றவர் வீட்டை விட்டு வெளியேவே வரவில்லை. 

நாங்கள் ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும் என்றுதான் நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம். கோவையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சிந்திக்கிறோம். 

கல்வி மற்றும் தொழிற்சாலைகள் ஹப்பாக கோவை உள்ளது. ஜிஎஸ்டியை பாஜக அரசு கொண்டு வந்தது, மின்சார கட்ட உயர்வை திமுக கொண்டு வந்தது. இதனால் தொழில் செய்பவர்கள் அதிகம் கஷ்டப்படுகிறார்கள். 

கோவைக்கு என்ன வேண்டும் என்ற விஷன் எங்களுக்கு உள்ளது. ஆனால் மற்றவர்களை போல் நாங்கள் மோடி உடன் நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லவில்லை, செங்கலை எடுத்து காட்டவில்லை. 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்த மோடி கோவைக்கு எதுவும் செய்யவில்லை. 

நீங்க கூப்பிட்டால் ஓடோடு வந்துவிடுவேன், கரூர்காரர்களுக்கு கோவை க்ளைமெட் தெரியாது. இந்த ஊர் பையன் நான், இங்குள்ள ஆலமரத்தில் ஊஞ்சல் ஆடி வந்தவன். குறைந்தது 2 லட்சம் வாக்குவித்தியாசத்தில் கோவை தொகுதியில் வெற்றி பெறுவேன் என கூறினார். 

Whats_app_banner
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.