தமிழ் செய்திகள்  /  Elections  /  Dmk Leader Mk Stalin Election Campaign At Tiruvarur

CM MK Stalin: 'அதிமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு Xerox Copy' - திருவாரூரில் முதல்வர் ஸ்டாலின் ஆவேச பேச்சு

Karthikeyan S HT Tamil
Mar 23, 2024 09:20 PM IST

CM MK Stalin Campaign: தஞ்சை மற்றும் நாகை தொகுதியில் போட்டியிட உள்ள வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ட்ரெண்டிங் செய்திகள்

”நானும் டெல்டாகாரன்” என்ற பெருமையோடு, சொந்த மண்ணுக்கு வந்திருக்கிறேன். இந்திய நாடாளுமன்றத்திற்கு, ஏப்ரல் 19-ஆம் தேதி முதல்கட்டமாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தஞ்சை தொகுதி வாக்காளர்கள் – நம்முடைய வெற்றி வேட்பாளர் முரசொலிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். முரசொலியைப் படித்து வளர்ந்தவன் நான். இன்றைக்கு முரசொலி என்ற பெயர் வைத்திருக்கும், வேட்பாளருக்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.

ஒன்றியச் செயலாளராகப் பணியாற்றும் தம்பி முரசொலி, நாடாளுமன்றத்திற்கு செல்வது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது.அதே மகிழ்ச்சியோடுதான், பகத்சிங் போன்ற விடுதலை வீரர்கள் நிறைந்த கம்யூனிஸ்ட் தோழர்களை ஒருங்கிணைக்கும் தோழமையின் இலக்கணம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான வை.செல்வராஜ் அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று நாகை தொகுதி வாக்காளர்களைக் கேட்க வந்திருக்கிறேன்.

நடைபெற இருக்கும் தேர்தல் மிகமிக முக்கியமான தேர்தல். ஏதோ பா.ஜ.க., ஆட்சியை வீழ்த்துவதற்கான தேர்தலாக மட்டும் யாரும் இதை நினைத்துவிடக் கூடாது. இந்தியாவில் இனி ஜனநாயகம் இருக்க வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு செய்வதற்கான தேர்தல் இது.

இந்தியாவின் மாநிலங்களை - மக்களாட்சியை, மதச்சார்பின்மையை, பன்முகத்தன்மையை, ஒடுக்கப்பட்ட மக்களை, ஏழை-எளிய மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றால், பா.ஜ.க., இன்னொரு முறை ஆட்சிக்கு வரக் கூடாது. பா.ஜ.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியா என்ற கூட்டாட்சி அமைப்பே இருக்காது.

நாட்டில் ஜனநாயக அமைப்பு முறையே இருக்காது. நாடாளுமன்ற நடைமுறையே இருக்காது. இவ்வளவு ஏன், மாநிலங்களே இருக்காது. முதலில் நாம் எல்லாரும் இதை உணர வேண்டும். கண்ணுக்கு முன்னால் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சிதைக்கப்பட்டதைப் பார்த்தோம்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்தார்கள். அங்கு இருக்கின்ற மக்களின் விருப்பத்திற்கு மாறாக யூனியன் பிரதேசமாக மாற்றினார்கள். அரசியல் கட்சித் தலைவர்களையே, வீட்டுச் சிறையில் அடைத்தார்கள். முன்னாள் முதலமைச்சர்களும் இதற்குத் தப்பவில்லை. அங்கு சட்டமன்றம் கிடையாது. காஷ்மீருக்கு ஐந்து ஆண்டுகளாக தேர்தல் கிடையாது. இப்போதுகூட, ஜம்மு-காஷ்மீருக்குத் தேர்தல் அறிவிக்கவில்லை. இதுதான் பா.ஜ.க. பாணி, சர்வாதிகாரம்!

இந்த நிலைமை நாளை தமிழ்நாட்டிற்கும் ஏற்படலாம். ஏன், பா.ஜ.க., மீண்டும் வெற்றி பெற்றால் இதே நிலைதான் அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்படும். இது ஏதோ எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு மட்டுமல்ல. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கே இந்த ஆபத்து வரத்தான் செய்யும். 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாசிச பா.ஜ.க., இந்தியாவை எல்லா வகையிலும், மிகமோசமான வகையில் பாழ்படுத்திவிட்டது. அதுமட்டுமல்ல, இந்தியாவில் இருந்த எல்லாக் கட்டமைப்புகளையும் சிதைத்துவிட்டார்கள்.

தி.மு.க.வைப் பொறுத்தவரைக்கும், “சொல்வதைத்தான் செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம்!” இதுதான் வரலாறு! சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை செய்துகாட்டியிருப்பவன்தான், இந்த ”முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்”

நேற்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்! ஆட்சிப் பொறுப்பு கையில் வைத்திருந்தபோது, மக்களுக்கு ஒன்றுமே செய்யாத பழனிசாமி - ஒன்றிய அரசில் பா.ஜ.க.-வுடன் சேர்ந்து, தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் செய்யாமல், துரோகங்களை மட்டுமே செய்த பழனிசாமி – அவர் பங்கிற்கு ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அது தேர்தல் அறிக்கை அல்ல; பழனிசாமியின் பம்மாத்து அறிக்கை. அவரிடம் அதிகாரம் இருந்தபோது, ஒன்றிய அரசிடம் இருந்து உருப்படியாக எதையாவது பெற்றுத் தந்தாரா? பா.ஜ.க.-வின் பாதம் தாங்கியாக, உதவாக்கரையாக இருந்த பழனிசாமி, இப்போது என்ன சொல்கிறார் தெரியுமா?

’‘ஆளுநரை நியமிக்கும்போது, முதலமைச்சரின் ஆலோசனை பெற்று நியமனம் செய்ய வேண்டும்” என்று தி.மு.க. சொன்னதையே ஜெராக்ஸ் எடுத்திருக்கிறார். நான் கேட்கிறேன், பழனிசாமி அவர்களே… தி.மு.க. அரசுக்குக் குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்கிறாரே ஆளுநர்… அவரைக் கண்டித்து ஒருநாளாவது ஒரு அறிக்கையாவது விட்டிருக்கிறீர்களா? இல்லையே!

அ.தி.மு.க. ஆட்சியில், ஆளுநர் ஆய்வுக்குச் செல்கிறேன் என்று புறப்பட்டபோது, அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தியது தி.மு.க. தொல்லை தருவதையே தன்னுடைய அன்றாடப் பணியாக வைத்திருக்கும் ஆளுநருக்கு எதிராக இப்போதும் உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்று போராடுகிறது தி.மு.க.

கை கட்டி - வாய் மூடி - முதுகு வளைந்து - பாதம் தாங்கும் பழனிசாமி அவர்களே… உங்களுக்கு வீரவசனங்கள் தேவைதானா? மோடி அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை; அந்தச் சட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. ஓட்டு போட்டதால்தான் அந்தச் சட்டமே இன்றைக்கு அமலுக்கு வந்திருக்கிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் வரக் காரணமாக இருந்துவிட்டு, ‘இலங்கை தமிழர்களுக்கான இரட்டைக் குடியுரிமை கொண்டு வருவோம்’ - என்று சொல்வதற்குப் பெயர் என்ன? பித்தலாட்டம்தானே!

அடுத்து ஒன்று சொல்கிறார்… ”மதுரையில் நிறுவப்பட இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர துரித நடவடிக்கை எடுக்கப்படுமாம்!” - பழனிசாமி சொல்கிறார். ஆகா என்ன நாடகம் இது ஆகா என்ன நாடகம் இது!

பழனிசாமி அவர்களே… 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் எய்ம்ஸ் திறப்பு விழாவில் மோடி பட்டன் அழுத்தியபோது பக்கத்தில் உட்கார்ந்து கை தட்டினீர்களே… அதற்குப் பிறகு எய்ம்ஸ் அமைக்காமல் ஏன் இழுத்தடிக்கிறீர்கள் என்று ஒரு முறையாவது ஒன்றிய அரசின் கதவைத் தட்டியிருப்பீர்களா?

இவ்வளவு ஆண்டுகளாக இது எதையுமே செய்யாமல் இப்போது வந்து நீங்கள் போடும் இந்த பகல் வேஷம் பா.ஜ.க.-வுக்கான பசப்பு நாடகம்தான் என்று மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்." இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்