தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Kalanidhi Veeraswamy: திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை!

Kalanidhi Veeraswamy: திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை!

Karthikeyan S HT Tamil
Apr 12, 2024 11:03 AM IST

Election Flying Squad: தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

ட்ரெண்டிங் செய்திகள்

அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு செலுத்த கோரி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரம் செய்துவருகிறார். அதேபோல், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்கள் மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் அனல் பறக்கும் வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் வாக்குக்காக பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு ஆகியவை தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை பெரம்பூர் மேம்பாலம் அருகே வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி காரில் சென்றுகொண்டிருந்தபோது அந்த பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவரின் காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் பணமோ, பொருளோ ஏதுவும் காரில் இல்லை. முழுமையான சோதனை முடிந்த பின்னர் கலாநிதி வீராசாமி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக, சென்னையில் இருந்து நெல்லைக்கு ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டலில் பணிபுரியும் ஊழியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல், உறவினர் வீடுகளில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கைப்பற்றப்பட்ட ரூ.3.98 கோடி பணம் தாம்பரம் சார்நிலை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 

மேலும், பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வருமான வரித்துறை விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் 2024:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில், வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்தது. இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 874 பேர் ஆண்கள், 76 பேர் பெண்கள். தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்