Loksabha Election 2024: ’நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியா?’ அண்ணாமலை பளிச் பதில்!
“மோடி அவர்களின் கால் நகத்தில் உள்ள தூசிக்கு உதயநிதி ஸ்டாலின் சமம் கிடையாது”
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிட உள்ளதாக வெளியான தகவலை அண்ணாமலை மறுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து வெளியான தகவல் பற்றி எனக்கு தெரியவில்லை. கட்சியை பொறுத்தவரை இன்று வரை ஒரு பொறுப்பை கொடுத்துள்ளார்கள் அதை செய்து கொண்டிருக்கிறேன். நாளை இதை செய் என்றால் செய்வேன். இன்றைக்கு எனக்கு கொடுத்துள்ள பொறுப்பு தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கும் செல்வதுதான். நான் எந்த ஒரு தொகுதிக்கும் அதிக நேரம் கொடுக்கவில்லை.
ஒரு வேளை கட்சி இதை செய் என்றால் அதை செய்யவும் தயார் என்பதால் எனக்கு தெரியாத விஷயம் பற்றி பேச விரும்பவில்லை. அதை பற்றி யாரும் எனக்கு சொல்லவில்லை; அப்படி சொன்னால் நிச்சயமாக பத்திரிக்கை நண்பர்களிடம் தெரிவிப்பேன்.
நமது கட்சியை பொறுத்தவரை விருப்பம் உள்ளதா?; இல்லையா என்பது பற்றி இல்லை. இந்த கட்சியை பொறுத்தவரை மக்கள் சேவைதான். கட்சி இதை செய் என்றால் செய்யப்போகிறேன். இதில் என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் கிடையாது.
கட்சியே நில்லு என்று சொன்னால் கட்சியே தொகுதியையும் முடிவு செய்யும். என்னை பொறுத்தவரை தனிப்பட்ட விருப்பம் என்பது இல்லை. நான் 39 தொகுதிகளிலும் சமமாகத்தான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
கட்சி போட்டியிடு என்றால் போட்டியிடுவேன், தேர்தல் பணி செய்ய சொன்னால் தேர்தல் பணி செய்வேன், நான் கட்சியிடம் எதையும் கேட்கவில்லை. என்னை அடுத்த 60 நாட்களுக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பாரத பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்வார்.
வரும் மார்ச் 4ஆம் தேதி கல்பாக்கம் மற்றும் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
கேள்வி:- ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகிய தலைவர்கள் பற்றி பிரதமர் மோடி பேசியது பேசு பொருள் ஆகி உள்ளதே?
ராஜாஜி, காமராஜர் பற்றி பேசி உள்ளார். மோடி ஐயா தலைவர்கள் எல்லோரை பற்றியும் பேசி உள்ளார்.
கேள்வி:- தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துவிட்டது என்றால் மத்திய அமைச்சர் ஒருவரை நிறுத்த முடியுமா என அதிமுகவின் கே.பி.முனுசாமி பேசி உள்ளாரே?
நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், எல்.முருகன் ஆகியோர் தமிழ் பூர்வீகத்தை கொண்டவர்களாக இருந்து மத்திய அமைச்சர்களாக உள்ளனர். ஆனால் 39 தொகுதிகளிலும் யாரை அறிவிக்கிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
பாஜக வளர்ந்து விட்டது என்று காட்ட நாங்கள் ஏன் மத்திய அமைச்சரை நிறுத்த வேண்டும்; நாங்கள் கிளைத் தலைவரை நிறுத்தி வெற்றி பெற வைக்க முடியாதா?; பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்துவிட்டது என்பது உண்மை.
கேள்வி:- மோடி தாத்தா வந்தாலும் திமுகவை அழிக்க முடியாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளாரே?
உதயநிதி ஸ்டாலினின் அப்பா, தாத்தா பெயரை எடுத்தால் அவரால் 2 ஓட்டு வாங்க முடியுமா?; அப்பா சம்பாதித்த பணத்தில் படத்தில் நடித்த ஒரு தோல்வி அடைந்த நடிகர். தாத்தா பெயரையும், அப்பா பெயரையும் பயன்படுத்தி எம்.எல்.ஏவாகவும், அமைச்சராகவும் ஆனவர். மோடி அவர்களின் கால் நகத்தில் உள்ள தூசிக்கு உதயநிதி ஸ்டாலின் சமம் கிடையாது.