Cow Protection: ’மோடி மீண்டும் வென்றால் பசுவை கொலை செய்பவர்களை தலைகீழாக தொங்கவிடுவோம்’ பீகாரில் அமித்ஷா ஆவேசம்!
”Cow Protection: தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பசுவதைக்கு எதிரானது. அதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம். பசுவை கொல்பவர்கள் மோடியின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் தலைகீழாக தொங்கவிடப்படுவார்கள் என அமித்ஷா பேச்சு”

பீகாரின் அமித்ஷா பரப்புரை
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பீகாரின் சீதாமர்ஹி மற்றும் மதுபானி மக்களவைத் தொகுதிகளில் அடுத்தடுத்து தேர்தல் பேரணிகளில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைமையிலான இந்திய கூட்டணிக்கு வாக்களித்தால் பிரதமரின் நாற்காலியை சுழற்சி முறையில் மாற்ற திட்டமிட்டுள்ளது என கூறினார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் - விளாசிய அமித்ஷா!
"370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டபோது, அது இரத்தக்களரிக்கு வழிவகுக்கும் என்று ராகுல் காந்தி கூறினார். ஐந்து ஆண்டுகள் கடந்தும் காஷ்மீரில் ஒரு கூழாங்கல் கூட வீசப்படவில்லை. ஆனால் காங்கிரஸ் கூட்டணி கட்சியான ஃபாரூக் அப்துல்லா பாகிஸ்தானிடம் அணுகுண்டுகள் இருப்பதால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெற முடியாது என்று கூறி பயமுறுத்த முயற்சிக்கிறார்" என அமித்ஷா கூறினார்.
நேபாள எல்லையில் உள்ள சீதாமர்ஹி மாவட்டம் சீதா தேவியின் பிறப்பிடமாக கருதப்படுகிறது.
"பாரதமும் அதன் 140 கோடி மக்களும் யாருக்கும் பயப்படவில்லை என்பதை சீதா தேவியின் பிறப்பிடத்தில் இருந்து அறிவிக்க விரும்புகிறேன். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்முடையது, அது அப்படியே இருக்கும். நாங்கள் அதை திரும்பப் பெறுவோம்" என்று அமித் ஷா கூறி உள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தனது மூன்றாவது பதவிக்காலத்தில் இந்தியா-நேபாள எல்லையில் முழு பாதுகாப்பை உறுதி செய்யும்.
இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்?
தனது பிரதமர் வேட்பாளரை அறிவிக்காததற்காக இந்தியா கூட்டணியைத் தாக்கிய ஷா, நாட்டிற்கு ஒரு வலுவான பிரதமர் தேவை, "ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒருவர்" அல்ல என்ற அமித்ஷா, இந்திய கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்ல முடியுமா? எக்காரணம் கொண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை... ஆனால் உங்கள் பிரதமர் வேட்பாளர் யார்? மம்தா பானர்ஜி பிரதமராக வருவாரா அல்லது மு.க.ஸ்டாலின் அல்லது லாலு பிரசாத் யாதவா? என அமித்ஷா கிண்டல் அடித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அத்தகைய பிரதமரால் ஒரு தொற்றுநோய் அல்லது பயங்கரவாத தாக்குதலில் இருந்து நாட்டைப் பாதுகாக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.
பீகாருக்கு தேவை காட்டாட்சி அரசு அல்ல
பீகாருக்கு வளர்ச்சி அரசாங்கம் தேவையே தவிர காட்டாட்சி நடத்தும் அரசாங்கம் அல்ல என கூறிய அமித்ஷா, மண்டல் கமிஷனின் பரிந்துரைகளை எதிர்த்தும், சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பினரின் நிலைமைகளை ஆராய அமைக்கப்பட்ட 1955 ஆம் ஆண்டின் காகாசாகேப் கலேல்கர் கமிஷனின் அறிக்கையை தாமதப்படுத்திய காங்கிரஸுடன் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கைகோர்த்துள்ளது என்று குற்றம்சாட்டினார்.
கர்பூரி தாக்கூருக்கு பாரத் ரத்னா
60 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் 60 கோடி ஓபிசி மக்களின் நலனைப் பற்றி சிந்திக்கவில்லை. பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகள் ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை. இது மோடி ஜி அவர்களால் மட்டுமே செய்யப்பட்டது" என்று அவர் கூறினார்.
"ரூ .12 லட்சம் கோடி ஊழலில்" இந்தியா பிளாக் தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ஷா, தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் இந்த அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறது என்று கூறினார்.
’சீதை பிறந்த இடத்தை சிறப்பு செய்வோம்’
ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி தலைவர்கள் அழைக்கப்பட்ட நிலையில், தங்கள் வாக்கு வங்கி அரசியல் காரணமாக அவர்கள் விழாவில் கலந்து கொள்ளவில்லை என்ற அமித்ஷா, சீதா தேவியின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீதாமர்ஹி மாவட்டத்தில் உள்ள 'புனௌரா தாம் மந்திர்' என்ற கோயிலை சர்வதேச யாத்திரை தளமாக மேம்படுத்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது என்று கூறினார்.
பசுவை வதைப்பவர்களை தொங்கவிடுவோம்
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பசுவதைக்கு எதிரானது. அதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம். பசுவதையில் ஈடுபட்டவர்கள் மோடியின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் தலைகீழாக தொங்கவிடப்படுவார்கள்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தடை செய்வதற்கான மத்திய அரசின் முடிவு சரியானது, ஏனெனில் பிஎஃப்ஐ நாட்டை இஸ்லாமிய நாடாக மாற்ற விரும்பியது என்று அவர் கூறினார்.
