EPS Vs MK Stalin: ’கண்ணை மூடிக்கொண்டால் இருட்டாதான் தெரியும் ஸ்டாலின்!’ கலாய்க்கும் ஈபிஎஸ்!
“அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நான் முதலமைசராக இருந்தபோது 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்தேன். இதனால் அரசு பள்ளிகளில் படித்த 2160 பேர் மருத்துவர் ஆகி உள்ளனர்”
திருவண்ணாமலை வேட்பாளர் கலியபெருமாளை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் கலியபெருமாளை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
உங்கள் கோரிக்கையை ஏற்று வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து திருப்பத்தூர் மாவட்டத்தை அதிமுக அரசுதான் உருவாக்கியது. இதுமட்டுமின்றி இந்த திருப்பத்தூரில் எளிமையான முறையில் நிர்வாகம் நடைபெற வேண்டும் என்பதற்காக எண்ணற்ற திட்டங்களை அதிமுக அரசு கொண்டு வந்தது.
திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை; ஆனால் 98 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பச்சை பொய் சொல்கிறார்.
பழைய ஓய்வூதிய திட்டம் தருவதாக கூறி அரசு ஊழியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நாமத்தை போட்டுவிட்டார்.
நான் முதலமைச்சராக இருந்தபோது 5 லட்சம் முதியோருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை கொடுத்தோம், ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதனை ரத்து செய்துவிட்டார்கள். தனியார் மருத்துவமனைகளில் 2 லட்சம் வரை சிகிச்சை பெற வேண்டிய திட்டதை 5 லட்சம் வரை உயர்த்தினோம்.
அதிமுக ஆட்சியில் கிராமபுறங்களில் விலையில்லா கறவை மாடுகள், ஆடு, கோழிகள் ஆகியவற்றை கொடுத்தோம். இந்த ஆட்சி வந்த பிறகு இந்த திட்டங்களை திமுக அரசு ரத்து செய்துவிட்டது.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நான் முதலமைசராக இருந்தபோது 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்தேன். இதனால் அரசு பள்ளிகளில் படித்த 2160 பேர் மருத்துவர் ஆகி உள்ளனர்.
அதிமுக ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு நிறைய திட்டங்களை நாங்கள் அறிவித்து செயல்படுத்தினோம். ரம்ஜான் காலத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க விலையில்லா அரிசியை தந்தோம். நாகூர் தர்கா சந்தன கூடு திருவிழாவுக்கு தேவையான சந்தனத்தை விலை இல்லாமல் கொடுத்தோம். ஹச் மானியத்தை ஆண்டுக்கு 6 கோடி ரூபாய் கொடுத்தோம்.
அதிமுக கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தத்தான் திமுக ஆட்சி வந்துள்ளது. இந்த ஆட்சியில் ஏமாற்றம்தான் மிச்சம். இந்த திருப்பத்தூர் மாவட்டத்தை உருவாக்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எஸ்பி அலுவலகத்தை கட்டிக்கொடுத்தோம். ஆனால் ஸ்டாலின் வந்து திறந்து வைத்துவிட்டார்.
ஆனால் அவர் அதிமுக ஆட்சி இருண்ட ஆட்சி என சொல்கிறார்; கண்ணை மூடிக்கொண்டு இருந்தால் இருட்டாகத்தான் தெரியும் ஸ்டாலின் அவர்களே!, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் 1240 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை கொடுத்தது அதிமுக அரசுதான்.
நூறு நாள் வேலை திட்டத்தை நூற்றி ஐம்பது நாளாக உயர்த்துகிறேன் என்ற திமுக இதுவரை உயர்த்தவில்லை. ரேஷன் கடைகளில் 2 கிலோ சர்க்கரை தருவதாக சொன்ன வாக்குறுதி இதுவரை நிறைவேற்றவில்லை. கல்விக்கடனை ரத்து செய்வதாக சொன்ன திமுக அதனை செய்யாமல் ஏமாற்றிவிட்டது.
ஆனால் அதிமுக ஆட்சியில் ஏழைகளுக்கு தரப்பட்ட திட்டங்களை திமுக அரசு தடுத்து நிறுத்திவிட்டது. அப்துல் கலாம் அவர்களுக்கு அதிமுக உறுப்பினர்கள் வாக்களித்துதான் அவரை குடியரசுத் தலைவர் ஆக்கினோம். ஆனால் திமுக அவருக்கு வாக்களிக்கவில்லை. அதிமுகவை பொறுத்தவரை சாதி, மதத்திற்கு இடம்தராமல் அனைவரையும் சமமாக பார்க்கும் கட்சியாக உள்ளது.