Actor Mansoor Ali Khan: தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகர் மன்சூர் அலிகான் அனுமதி..என்னாச்சு?
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Actor Mansoor Ali Khan: தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகர் மன்சூர் அலிகான் அனுமதி..என்னாச்சு?

Actor Mansoor Ali Khan: தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகர் மன்சூர் அலிகான் அனுமதி..என்னாச்சு?

Karthikeyan S HT Tamil
Apr 17, 2024 08:43 PM IST

lok sabha election 2024: தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது நடிகர் மன்சூர் அலிகானுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

நடிகர் மன்சூர் அலிகான்.
நடிகர் மன்சூர் அலிகான்.

இந்திய ஜனநாயக புலிகள் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் தொடங்கி இருந்தார். நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். தொடர்ந்து கட்சியை நடத்தி வந்தாலும், அதற்கு தேர்தல் ஆணையம் இன்னும் ஒப்புதல் அளிக்காததால் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

வேலூர் தொகுதி முழுவதும் பலாப்பழம் சின்னத்துக்கு வாக்கு அளிக்க கோரி பிரசாரம் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், இன்று குடியாத்தம் பகுதியில் அவர் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும்போது திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதற்கட்ட சிகிச்சை முடிவடைந்த நிலையில், சென்னைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துவரப்பட்டு கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் மன்சூர் அலிகான் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னதாக, இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. நாடாளுமன்ற தேர்தல் குறித்து இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

செயற்குழு முடிவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயகப் புலிகள் சார்பில் கூட்டணி குறித்தான முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கப்பட்டுவதாக செயற்குழு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தலைவருக்கு இருந்த அதிகாரங்கள் அனைத்தும் பொதுச்செயலாளர் கண்ணதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் இனி மன்சூர் அலிகான் உறுப்பினராக மட்டுமே இருக்க முடியும் எனவும் கூறப்பட்டிருந்தது. தன்னிச்சையாக செயல்பட்டதாலும், நிர்வாகிகள் இடையே எந்தவித ஆலோசனையையும் மேற்கொள்ளாததாலும் செயற்குழுவைக் கூட்டி இவ்வாறு செய்ததாக பொதுச்செயலாளர் கண்ணதாசன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெற இருக்கும் நிலையில், வேலூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கி பிரசாரம் மேற்கொண்டு வந்த நடிகர் மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மக்களவைத் தேர்தல் 2024:

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் நாளை மறுதினம் (ஏப்ரல் 19) ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது. மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில், வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்தது. இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 874 பேர் ஆண்கள், 76 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.