டபிள்யூபிஎல் 2025: மிரட்டிய மந்தனா!அடித்து துவைத்த ஆர்சிபி.. மும்பை நேரடியாக பைனலுக்கு தகுதி பெற சவால் இலக்கு
டபிள்யூபிஎல் 2025: முக்கியத்துவம் மிக்க இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற மிக பெரிய இலக்கை சேஸ் செய்ய வேண்டும்.

டபிள்யூபிஎல் 2025 தொடரின் 20வது லீக் போட்டி மும்பை இந்தியன்ஸ் மகளிர் - ஆர்சிபி மகளிர் அணிகளுக்கு இடையே பார்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சீசனின் கடைசி லீக் போட்டியாக இது அமைந்துள்ளது.
தற்போதைய நிலையில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆர்சிபி மகளிர் அணி 7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த போட்டி ஆர்சிபி மகளிர் அணிக்கு ஆறுதல் வெற்றி போட்டியாக உள்ளது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியை பொறுத்தவரை இந்த போட்டியில் வெற்றி பெற்றால் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
மும்பை இந்தியன்ஸ் மகளிர் தனது முந்தைய போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆர்சிபி அணி யுபி வாரியர்ஸ்க்கு எதிராக 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
மும்பை இந்தியன்ஸ் பவுலிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 53, ரிச்சா கோஷ் 36, எல்லீஸ் பெர்ரி 34 ரன்கள் அடித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் பவுலர்களில் ஹேய்லீ மேத்யூஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மந்தனா அரைசதம்
இந்த சீசனில் ஒரேயொரு அரைசதம் மட்டும் அடித்த மந்தனா பேட்டிங்கில் பெரிதாக சோபிக்காமல் இருந்து வந்தார். இவரது பார்ம் ஆர்சிபி அணிக்கு மிக பெரும் தலைவலியாக இருந்தது. நடப்பு சாம்பியனான ஆர்சிபி இந்த சீசனில் தொடரை விட்டு வெளியேறி இருக்கும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் சிறப்பாக பேட் செய்தார் மந்தனா. அணிக்கு நல்ல தொடக்கத்தை தந்த அவர் 35 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். தனது இன்னிங்ஸில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என அதிரடி காட்டிய மந்தனா 37 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.
மந்தனாவுடன் ஓபனராக களமிறங்கிய மேகனா விரைவாக 13 பந்துகளில் 26 ரன்கள் அடித்துவிட்டு அவுட்டானார்.
எல்லீஸ் பெர்ரி பினிஷ்
ஆர்சிபி அணியில் இந்த சீசனில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி பேட்டிங்கில் ஜொலித்து வருபவராக எல்லீஸ் பெர்ரி இருந்து வருகிறார்.
நான்காவது பேட்டராக களமிறங்கிய ரிச்சா கோஷ் - எல்லீஸ் பெர்ரி பார்டனர்ஷிப் அமைத்து 53 ரன்கள் சேர்த்தனர். இதில் கோஷ் 22 பந்துகளில் 36 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
தொடர்ந்து சிறப்பாக பேட் செய்த எல்லீஸ் பெர்ரி கடைசி வரை களத்தின் இருந்து அதிரடி இன்னிங்ஸை வெளிப்படுத்தியுடன் அணிக்கு நல்ல பினிஷ் கொடுத்தார். 38 பந்துகளில் 49 ரன்கள் அடித்த எல்லீஸ் பெர்ரி தனது இன்னிங்ஸில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தார்.
மும்பை பவுலர்கள் சொதப்பல்
முக்கியத்துவம் மிக்க இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் பவுலர்கள் கட்டுக்கோப்புடன் பவுலிங் செய்வதற்கு பதிலாக, ரன்களை வாரி வழங்கினார். ஸ்டிரைக் பவுலரான இஸ்மாயில் 4 ஓவர்களில் 41 ரன்கள் அள்ளி கொடுத்தார். அமெலியா கெர் 3 ஓவர்களில் 47 ரன்கள் வாரி வழங்கியதோடு ஒரு விக்கெட் வீழ்த்தினார். ஹோய்லீ மேத்யூர் 4 ஓவரில் 37 ரன்களை விட்டுத்தந்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
அமன்ஜோட் கெளர் மட்டும் விக்கெட் வீழ்த்திவில்லை என்றாலும் கொஞ்சம் கட்டுக்கோப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார். மும்பை இந்தியன்ஸ் மகளிர் இறுதிப்போட்டியில் நேரடியாக நுழைய 200 ரன்கள் என்கிற மிக பெரிய சேஸ் செய்ய வேண்டும்.

டாபிக்ஸ்