WPL 2025 Final: பைனல் பயம்.. பேட்டிங்கில் தடுமாறிய டெல்லி.. இரண்டாவது முறையாக சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் மகளிர்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Wpl 2025 Final: பைனல் பயம்.. பேட்டிங்கில் தடுமாறிய டெல்லி.. இரண்டாவது முறையாக சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் மகளிர்

WPL 2025 Final: பைனல் பயம்.. பேட்டிங்கில் தடுமாறிய டெல்லி.. இரண்டாவது முறையாக சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் மகளிர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Mar 15, 2025 11:56 PM IST

WPL 2025 Final: லீக் போட்டிகளில் பேட்டிங்கில் அதிரடி காட்டிய அணியாக இருந்து வந்த டெல்லி கேபிடல்ஸ், கோப்பையை வெல்லும் பைனலில் தடுமாற்றம் கண்டது. மும்பை இந்தியன்ஸ் மகளிர் பவுலர்களும் தொடக்கத்தில் இருந்தே நெருக்கடி கொடுத்தனர். டெல்லியை வீழ்த்திய மும்பை இரண்டாவது முறையாக சாம்பியன் ஆகியுள்ளது.

பைனல் பயம்.. பேட்டிங்கில் தடுமாறிய டெல்லி.. இரண்டாவது முறையாக சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் மகளிர்
பைனல் பயம்.. பேட்டிங்கில் தடுமாறிய டெல்லி.. இரண்டாவது முறையாக சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் மகளிர்

டெல்லி கேபிடல்ஸ் சேஸிங்

முன்னதாக, டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் மெக் லேனிங் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன் பின்னர் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் ஹர்மன்ப்ரீத் 66, பிரண்ட் 30 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் குவித்தது.

சவாலான இந்த இலக்கை விரட்டிய டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் டபிள்யூபிஎல் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் ஆகியுள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் அணியில் பேட்டிங்கில் பலம் வாய்ந்த அணியாக இருந்தபோதிலும், கோப்பை வெல்லக்கூடிய இறுதிப்போட்டியில் பேட்டிங்கில் சொதப்பியது. பார்மில் இருந்து வந்த மெக் லேனிங் 13, ஷெபாலி வர்மா 4, ஜானாஸன் 13 என விரைவாக அவுட்டாகி வெளியேறினர்.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் 30, மாரிஸான் காப் 40 என அணியை மீட்ட போதிலும் மற்றவர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில் தோல்வியுற்றது.

நிகி பிரசாத் போராட்டம்

ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது களமிறங்கிய நிகி பிரசாத், அப்போது களத்தில் இருந்த காப் உடன் இணைந்து 40 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்தார். நிகி பிரசாத் கடைசி வரை ஒற்றை ஆளாக போராடி 25 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பிரண்ட் அற்புதமாக பந்து வீச அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுக்கப்பட்டது.

மும்பை பவுலர்கள் அபாரம்

டெல்லி பேட்ஸ்மேன்களுக்கு தொடக்கத்தில் இருந்தே நெருக்கடி தரும் விதமாக மும்பை பவுலர்கள் பவுலிங் செய்தனர். இந்த சீசன் முழுக்கவே பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்ட பிரண்ட், இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அமெலியா கெர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹேய்லே மேத்யூஸ், ஷப்நிம் இஸ்மாயில், சாய்கா இஷாக் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். மும்பை பவுலர்களில் பந்து வீசிய அனைவரும் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இரண்டாவது முறையாக சாம்பியன்

கடந்த 2023இல் டபிள்யூபில் தொடர் தொடங்கப்பட்டது. அப்போது முதல் தொடரின் சாம்பியன் ஆனது மும்பை இந்தியன்ஸ். இதன் பின்னர் தற்போது இரண்டாவது முறையாக பைனலுக்கு நுழைந்து, மீண்டும் சாம்பியன் ஆகியுள்ளது.

டபிள்யூபிஎல் தொடரில் அனைத்து சீசன்களிலும் இறுதிபோட்டிக்கு நுழைந்திருக்கும் அணியாக டெல்லி கேபிடல்ஸ் இருந்து வருகிறது. இதில் இரண்டு முறை ரன்னர் அப் ஆகியுள்ளது. அந்த வகையில் ஹாட்ரிக் முறையாக இறுதிப்போட்டிக்கு வந்திருந்த டெல்லி கேபிடல்ஸ் மகளிர் இந்த முறை விட்டத்தை பிடிக்கும் முயற்சியில் கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹாட்ரிக் முறையாக கோப்பையை இழந்துள்ளது.

டபிள்யூபிஎல் முதல் சீசனில் இறுதிப்போட்டிக்கு நுழைந்து முதல் சாம்பியன் என்ற பட்டத்தை வென்ற அணியாக இருந்த மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி, தற்போது இரண்டாவது முறை கோப்பை வென்ற முதல் அணியாகவும் மாறியுள்ளது.

இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி எலிமினேட்டர் சுற்று போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது.