World Cup 2023: மழை வந்தது கூடவே அதிர்ஷ்டமும் வந்தது! பாதியிலேயே வெற்றி வாகை சூடிய பாகிஸ்தான் - Chokers ஆன நியூசிலாந்து
World Cup 2023, NZ vs PAK Result: பவுலிங்கில் முற்றிலும் சொதப்பிய பாகிஸ்தான் பேட்டிங்கில் விஸ்வரூப ஆட்டத்தை வெளிப்படுத்தியது. போட்டியின் குறுக்கே வந்த மழை குறுக்கீடு பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்து ஆட்டத்தின் பாதியேலேயே வெற்ற வாகை சூட காரணமாக அமைந்தது.
உலகக் கோப்பை தொடரின் 35வது போட்டி நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே பெங்களுருவிலுள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. பகல் நேர போட்டியாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பவுலிங்கை தேர்வு செய்தார்.
நியூசிலாந்து அணியில் முழுமையாக பிட்னஸ் அடைந்த கேன் வில்லியம்சன் நான்கு போட்டிகளுக்கு பிறகு இன்று மீண்டும் களமிறங்கினார். அதேபோல் மார்க் சாப்மேனும் காயத்திலிருந்து குணமடைந்து அணிக்கு திரும்பினார். இஷ் சோதி உலகக் கோப்பை 2023 தொடரில் முதல் போட்டியில் இன்று விளையாடினார்.
இதையடுத்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முடிவு தவறு என்பதை நிருபிக்கும் விதமாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் எடுத்தது. இந்த தொடரில் இரண்டாவது 400+ ஸ்கோராக இது அமைந்தது.
நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா 108, வில்லியம்சன் 95 ரன்கள் அடித்தனர். பாகிஸ்தான் பவுலர்களில் முகமது வாசிம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து 402 ரன்கள் என்ற இமாலய இலக்கை சேஸ் செய்த பாகிஸ்தான் அணி தொடக்கம் முதலே அதிரடியாக ரன்குவிப்பில் ஈடுபட தொடங்கியது. ஆட்டத்தின் 21.3 ஓவரில் அணியின் ஒரு விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதன் பின்னர் ஒரு மணி நேரம் கழித்து ஆட்டம் மீண்டும் தொடங்கியது.
அப்போது வெற்றி இலக்கு 41 ஓவரில் 342 ரன்கள் என மாற்றப்பட்டது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பாகிஸ்தான் 25.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் மீண்டும் பாதிக்கப்பட்டது.
ஆனால் போட்டி மறுபடியும் தொடங்கமுடியாத சூழலில் டிஎல்எஸ் முறைப்படி பாகிஸ்தான் 21 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
போட்டி தொடங்கும் முன் பவுலிங் தேர்வு செய்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முடிவு விமர்சிக்கப்பட்ட நிலையில், மழை வந்த அதிர்ஷ்டத்தால் பாகிஸ்தான் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ஃபகர் ஸமான் அதிரடியாக பேட் செய்து 63 பந்துகளில் சதமடித்தார். 81 பந்துகளில் 126 ரன்கள் எடுத்து கடைசி வரை அவர் ஆட்டமிழக்காமல் இருந்தார். பாபர் அசாமும் இவருடன் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்ட நிலையில் அரைசதமடித்து 66 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்