World Cup 2023: மரண பயத்தை காட்டிய நியூசி., பேட்டர்கள்! பவுலிங்கில் தெறிக்கவிட்ட ஷமி - நான்காவது முறையாக பைனலில் இந்தியா
IND vs NZ: மரண பயத்தை காட்டும் விதமாக நியூசிலாந்தின் டேரில் மிட்செல், வில்லியம்சன், கிளென் பிளிப்ஸ் ஆகியோர் பேட் செய்தனர். ஆனாலும் முகமது ஷமி சிறப்பாக பந்து வீசி இந்த 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், 70 ரன்களில் வெற்றி பெற்ற இந்திய அணி நான்காவது முறையாக உலகக் கோப்பை இறுதிக்கு சென்றுள்ளது.
உலகக் கோப்பை 2023 தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் இந்தியா - நியூசிலாந்து இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்தியா, நியூசிலாந்து என இரு அணிகளிலும் மாற்றம் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் களமிறங்கிய அதே அணியுடன் விளையாடுகிறது.
இதையடுத்து முதலில் பேட் செய்த இந்தியா, நியூசிலாந்து பவுலர்களுக்கு எதிராக முழுமையாக ஆதிக்கம் செலுத்தி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் எடுத்தது. இந்திய அணி பேட்டர்களில் விராட் கோலி, ஷரேயாஸ் ஐயர் ஆகியோர் சதமடித்துள்ளனர்.
கோலி ஒரு நாள் போட்டியில் தனது 50வது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 113 பந்துகளில் 117 ரன்கள் அடித்தார். தொடக்கம் முதலே அதிரடியாக பேட் செய்த ஷ்ரேயாஸ் ஐயர் 67 பந்துகளில் சதமடித்து 105 ரன்களில் அவுட்டானார். ஓபனிங் பேட்ஸ்மேன் சுப்மன் கில் 80 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்தார்.
இதைத்தொடர்ந்து 398 ரன்கள் என்ற மிகப்பெரிய சேஸிங்கை விரட்டிய நியூசிலாந்து 48.5 ஓவரில் 327 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியுள்ளது. இதனால் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் நான்காவது முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. தொடர்ச்சியாக விளையாடிய 10 போட்டிகளையும் வென்று இந்தியா வெற்றிகரமாக அணியாக வலம் வருகிறது
இந்திய பவுலர்களில் சிறப்பாக பந்து வீசி, நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்து திருப்புமுனை ஏற்படுத்திய முகமது ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரை தொடர்ந்து பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
உலகக் கோப்பை 2023 தொடரில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக ஜொலித்துள்ளார். அத்துடன் முதல் முறையாக 7 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற பெருமையும், சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்திய வீரர் என்ற சாதனையும் புரிந்துள்ளார்.
இந்த உலகக் கோப்பை தொடரில் மட்டும் மூன்று முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் முகமது ஷமி. தனது அற்புத பவுலிங்கால் இந்தியாவுக்கு வெற்றியை தேடி தந்த ஷமி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
நியூசிலாந்து அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களான கான்வே 13, ரச்சின் ரவீந்திரா 13 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமி பந்தில் அவுட்டானார்கள். 39 ரன்களில் நியூசிலாந்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதுபோது கேன் வில்லியம்சன் - டேரில் மிட்செல் இணைந்து மீட்டனர். இருவரும் இணைந்து 181 ரன்கள் சேர்த்தனர்.
வில்லியம்சன் 69 ரன்களில் அவுட்டாக, சிறப்பாக பேட் செய்த மிட்செல் சதமடித்து தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்தார். இவருடன் பிளிப்ஸ் இணைந்து அதிரடி காட்டினார்.
அடித்து ஆடிக்கொண்டிருந்த பிளிப்ஸ் விக்கெட்டை பும்ரா தூக்கினார். இதன் பின்னர் மீண்டும் திருப்புமுனை ஏற்படுத்திய ஷமி மிட்செல் 134 ரன்கள் எடுத்த நிலையில் அவரை அவுட்டாக்கினார். அவ்வளவுதான், அவர் அவுட்டான பிறகு இந்தியாவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது.
இறுதியில் 49வது ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவுக்கு வெற்றியை தேடி தந்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்