World Cup 2023 Final: கப்பு முக்கியம் பிகிலு! 20 வருட Revenge - ஆஸ்திரேலியாவுக்கு திருப்பி கொடுக்குமா இந்தியா?
20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பைனலில் மோதி கொள்ள இருக்கும் நிலையில், ஏற்கனேவே பெற்ற தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுப்பதற்கான நேரமாக அமைந்துள்ளது.
உலகக் கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. சுமார் 1.30 லட்சம் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற இருக்கும் இந்த போட்டியை பல்வேறு பிரபலங்களும் நேரில் காணவுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியா துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ், அசாம், மேகாலயா உள்பட் எட்டு மாநிலங்களில் முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, அனுராக் தாக்கூர், தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வருகை தரவுள்ளார்கள்.
பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பல்வேறு திருப்பங்களுடன் நடைபெற்றிருக்கும் உலகக் கோப்பை 2023 தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா, ஆஸ்திரேலியா என இரு அணிகளும் பலப்பரிட்சை செய்யவுள்ளன. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சமபலம் பொருந்தியதாக இவ்விரு அணிகளும் உள்ளன.
இந்த உலகக் கோப்பை தொடரில் தங்களது முதல் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்டன. இதன் பின்னர் தற்போது தொடரின் கடைசி போட்டியில் மீண்டும் சந்திக்கின்றன. இந்தியா அணியை பொறுத்தவரை விளையாடிய 10 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசைக்கமுடியாத அணியாக இருந்து வருகிறது. ஆஸ்திரேலியா அணி முதல் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தோல்வி, இரண்டாவது போட்டியில் தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக தோல்வி என இரண்டு தொடர் தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியிலில் கடைசி இடத்துக்கு சென்று அடுத்து தொடரச்சியாக 8 வெற்றிகளை பெற்று பைனலுக்கு முன்னேறியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இதற்கு முன் 2003 உலகக் கோப்பை பைனலில் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. சரியாக 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த இரு அணிகளும் உலகக் கோப்பை பைனலில் சந்திக்கின்றன. அந்த வகையில் இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுப்பதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது.
கடந்த 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் தோல்வி அடைந்ததற்கு, இந்த முறை அரையிறுதியில் நியூசிலாந்து அணியை பழிதீர்த்தது இந்தியா. எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் பழைய பகையை தீர்த்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் 2015 உலகக் கோப்பை தொடரிலும் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. அத்துடன் 1987 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது. இவை எல்லாவற்றுக்கும் சேர்த்து நாக்அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பெற்றிருக்கும் தோல்வி பயனத்துக்கு இந்தியா இன்றுடன் முடிவு கட்டும் என எதிர்பார்க்கலாம்.
இந்தியா முதல் உலகக் கோப்பை வென்று 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மூன்றாவது உலகக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது. இந்தி உலகக் கோப்பை தொடர் இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஆஸ்திரேலியாவில் வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டார்க் போன்றோருக்கு கடைசி தொடராக இருக்க வாய்ப்பு உள்ளதால் இவர்களின் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது.
ஹர்திக் பாண்ட்யா காயத்துக்கு பின்னர் இந்தியா விளையாடிய 5வது போட்டியில் சேர்க்கப்பட்ட முகமது ஷமி சிறப்பாக பந்து வீசி 6 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இன்று அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால் உலகக் கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் லிஸ்டில் வாசிம் அக்ரம், லசித் மலிங்கா ஆகியோரை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்துக்கு முன்னேறுவார்.
பிட்ச் நிலவரம்
இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் பயன்படுத்தப்பட்ட அதே பிட்ச்சில் இன்றைய போட்டி நடைபெறுகிறது. கருமணல் ஆடுகளமாக இது ஸ்லோவாக செயல்பட்டாலும் கவனமாக பேட் செய்தால் ரன்குவிப்பில் ஈடுபடலாம் என கூறப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் பனிபொலிவு இருக்க வாய்ப்பு இருந்தால் அதை தடுக்கும் பொருட்டு ரசாயணங்கள் தெளிக்கப்படும் என தெரிகிறது.
வானிலை நிலவரத்தை பொறுத்தவரை வானம் வறண்டு காணப்படும் எனவும், 30 டிகிரி செல்சியஸ் வரை வெயில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை 13 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 5, ஆஸ்திரேலியா 8 முறை வெற்றி பெற்றுள்ளன. சொந்த மண்ணில் இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு அமைந்திருக்கும் நிலையில் அதை வெற்றிகரமாக செய்து முடிக்கும் என நம்பலாம்.
டாபிக்ஸ்