World Cup 2023 Final: ஹெட் - லபுஸ்சேன் தரமான ஆட்டம்! Silence ஆன மைதானம் - ஆறாவது முறையாக ஆஸ்திரேலியா உலக சாம்பியன்
பவுலிங், பீல்டிங், பேட்டிங் என மூன்றிலும் இந்தியாவுக்கு எதிராக முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா ஆறாவது முறையாக உலகக் கோப்பையை தட்டி தூக்கியுள்ளது.
உலகக் கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்றது. சுமார் 1.30 லட்சம் பார்வையாளர்கள் இந்த போட்டியை நேரில் கண்டுகளித்தனர்.
இதில் டாஸ் வென்ற அணி ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 240 ரன்கள் அடித்து ஆல்அவுட்டாகியது. ஆஸ்திரேலியா பவுலர்களின் துல்லிய பவுலிங்கை சமாளிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறிய நிலையில், நிதானமாக பேட் செய்த கேஎல் ராகுல் 66, விராட் கோலி 54 ரன்கள் எடுத்தனர். இவர்களுக்கு அடுத்தபடியாக ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி அதிரடி காட்டிய ரோஹித் ஷர்மா 47 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியா பவுலர்களில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட் கம்மின்ஸ், ஹசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேக்ஸ்வெல், ஆடம் ஜாம்பா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து 241 ரன்கள் சேஸ் செய்தால் உலகக் கோப்பையை வெல்லலாம் என்ற நிலையில் களமிறங்கிய ஆஸ்திரேலியா, 43 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 42 பந்துகள் மீதமிருக்க வெற்றி பெற்று, ஆறாவது முறையாக உலகக் கோப்பையை தூக்கினர்.
அத்துடன் உலகக் கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்ற இந்தியாவின் வெற்றி பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
ஆஸ்திரேலியாவை பவர்ப்ளே ஓவரில் ஆரம்பத்தில் திணறடித்தனர் இந்திய பவுலர்கள். இதன் விளைவாக வார்னர், மார்ஷ், ஸ்மித் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டானார்கள். ஆஸ்திரேலியா 47 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, களத்தில் இருந்த ஹெட் - லபுஸ்சேன் ஜோடி அணியை மீட்டனர்.
ஆரம்பத்தில் நெருக்கடி தந்த இந்திய பவுலர்களுக்கு எதிராக இவர்கள் இருவரும் ஆதிக்கம் செலுத்தினர். சிறப்பாக பேட் செய்த ஹெட் - லபுஸ்சேன் ஜோடி இணைந்து 192 ரன்கள் சேர்த்தனர். வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்று இருந்தபோது 137 ரன்கள் அடித்த ஹெட், சிராஜ் பந்தில் அவுட்டானார். லபுஸ்சேன் 58 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய பவுலர்கள் பும்ரா 2, ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். சதமடித்து ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வித்திட்ட ட்ராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்