World Cup 2023: நெதர்லாந்தை விரட்டியடித்த ஸ்பின் கூட்டணி! ஒரு வழியாக 5 போட்டிக்கு பிறகு வெற்றிக்கு திரும்பிய இங்கிலாந்து
பேட்டிங்கில் ஸ்டோக்ஸ், டேவிட் மலான், கிறிஸ் வோக்ஸ் மிரட்டியது போல் பவுலிங்கில் அடில் ரஷித், மொயின் அலி கூட்டணி நெதர்லாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தது. ஐந்து தொடர் தோல்விகளுக்கு பிறகு வெற்றி பாதைக்கு திரும்பியிருக்கும் இங்கிலாந்து சாம்பியன்ஸ் டிராபி வாய்ப்பை இழக்காமல் தன் வசம் வைத்துள்ளது.
உலகக் கோப்பை 2023 தொடரின் 40வது போட்டி இங்கிலாந்து - நெதர்லாந்து இடையே புனேவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஷ் பட்லர் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணியில் லயாம் லிவிங்ஸ்டன், மார்க் உட் ஆகியோருக்கு பதிலாக ஹாரி ப்ரூக், கஸ் ஆட்கின்சன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். நெதர்லாந்து அணியில் சாகிப் சுல்பிகருக்கு பதிலாக தேஜா நிடமானுரு சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சதமடித்து 108 ரன்கள் எடுத்தார். அதிரடியாக பேட்டிங் செய்த ஓபனிங் பேட்ஸ்மேன் டேவிட் மாலன் 87, கிறிஸ் வோக்ஸ் 51 ரன்கள் எடுத்தனர்.
நெதர்லாந்து பவுலர்களில் பாஸ் டி லீட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆர்யன் தத், லோக் வான் பீக் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நுழையப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் விதமாக அமைந்த இந்த போட்டியில் இங்கிலாந்து பேட்டிங்கில் தனது பழைய பார்முக்கு திரும்பி அதிரடி காட்டியுள்ளது. நெதர்லாந்து 340 ரன்கள் என மிகப் பெரிய இலக்கை எட்டினால் மட்டுமே சாம்பியன்ஸ் டிராபி வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற நிலையில் களமிறங்கியது. இதைத்தொடர்ந்து 37.2 ஓவரில் நெதர்லாந்து அணி 179 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியுள்ளது.
இதனால் இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு வழியாக ஐந்து தொடர் தோல்விகளுக்கு பிறகு இங்கிலாந்து வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.
நெதர்லாந்து அணியில் தேஜா நிடமானுரு மட்டும் கொஞ்சம் அதிரடியாக ரன்குவிப்பில் ஈடுபட்டு 41 ரன்கள் எடுத்து கடைசி வரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 38, ஓபனிங் பேட்ஸ்மேன் வெஸ்லி பாரேசி 37, சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 33 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் பெரிதாக பேட்டிங்கில் ஜொலிக்காத நிலையில் நெதர்லாந்து தோல்வியை தழுவியது.
இங்கிலாந்து பவுலர்களில் ஸ்பின்னர்கள் மொயின் அலி, அடில் ரஷித் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். டேவிட் வில்லி 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
சதமடித்து இங்கிலாந்து அணி மிகப் பெரிய ஸ்கோர் எடுக்க உதவிய பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இங்கிலாந்து அணி தனது கடைசி போட்டியில் பாகிஸ்தான் அணியை வரும் சனிக்கிழமை எதிர்கொள்கிறது.
அதேபோல் நெதர்லாந்து அணி கடைசி போட்டியில் இந்தியாவை வரும் ஞாயிற்றுகிழமை மோதவுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்