World Cup 2023: தீராத நாக்அவுட் சோகம்! போராடி தோல்வியுற்ற தென் ஆப்பரிக்கா - ஹாட்ரிக் வெற்றியுடன் பைனலில் ஆஸ்திரேலியா
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  World Cup 2023: தீராத நாக்அவுட் சோகம்! போராடி தோல்வியுற்ற தென் ஆப்பரிக்கா - ஹாட்ரிக் வெற்றியுடன் பைனலில் ஆஸ்திரேலியா

World Cup 2023: தீராத நாக்அவுட் சோகம்! போராடி தோல்வியுற்ற தென் ஆப்பரிக்கா - ஹாட்ரிக் வெற்றியுடன் பைனலில் ஆஸ்திரேலியா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 16, 2023 11:40 PM IST

முக்கியத்துவம் வாய்ந்த அரையிறுதி போட்டியில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய தென் ஆப்பரிக்கா பவுலிங்கில் முடிந்தளவு ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுத்தது. ஆனாலும் அதை நன்கு சமாளித்து விளையாடி எட்டாவது முறையாக உலகக் கோப்பை பைனலில் நுழைந்துள்ளது.

தென் ஆப்பரிக்கா அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா உலகக் கோப்பை பைனலுக்கு எட்டாவது முறையாக தகுதி பெற்றுள்ளது
தென் ஆப்பரிக்கா அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா உலகக் கோப்பை பைனலுக்கு எட்டாவது முறையாக தகுதி பெற்றுள்ளது

இதையடுத்து முதலில் பேட் செய்த தென் ஆப்பரிக்கா அணி 49.4 ஓவரில் 212 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிதாக ரன்குவிப்பில் ஈடுபடாத நிலையில், உலகக் கோப்பை தொடர் முழுவதும் பேட்டிங்கில் பெரிதாக ஜொலிக்காமல் இருந்து வந்து டேவிட் மில்லர் சதமடித்து 101 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக ஹென்ரிச் கால்சன் 47 ரன்கள் எடுத்தார்.

இதைத்தொடர்ந்து சேஸிங்கில் களமிறங்கிய ஆஸ்திரேலியா 47. 2 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில், 16 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 8வது முறையாக உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

நாக்அவுட் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவி Chokers என்று அழைக்கப்படும் தென் ஆப்பரிக்கா, போராட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் தனது தோல்வி பயணத்தை தொடர்ந்துள்ளது.  தென் ஆப்பரிக்காவின் 31 ஆண்டு கால உலகக் கோப்பை இறுதிப்போட்டி கனவு இந்த முறையும் கனவாகவே உள்ளது.

உலகக் கோப்பை 2023  இறுதிப்போட்டியில் இந்தியா -  ஆஸ்திரேலியா அணிகள் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை மோதவுள்ளன.

முன்னதாக, ஆஸ்திரேலியா அணிக்கு ஓபனர்கள் டேவிட் வார்னர் - ட்ராவிஸ் ஹெட் அதிரடியான தொடக்கத்தை தந்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தனர். வார்னர் 18 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து மார்க்ரம் பந்தில் கிளீன் போல்டு ஆகி வெளியேறினார்.

மற்றொரு ஓபனிங் பேட்ஸ்மேன் ட்ராவிஸ் ஹெட் அதிரடியை தொடர்ந்து அரைசதமடித்த நிலையில், 48 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து மகாராஜ் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். அதேபோல் மிட்செல் மார்ஷ் டக்அவுட்டாகிய நிலையில் டாப் 3 பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறியது.

இதைத்தொடர்ந்து களத்தில் இருந்த ஸ்மித் - லபுஸ்சேன் ஜோடி நிதானத்தை கடைப்பிடித்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். லபுஸ்சேன் 18, அவருக்கு அடுத்தபடியாக வந்த மேக்ஸ்வெல் 1 ரன்களில் நடையை கட்ட ஆட்டம் மீண்டும் சூடு பிடித்தது.

பொறுமையாக பேட் செய்து ரன்கள் எடுத்து வந்த ஸ்மித்தும் 30 ரன்களில் அவுட்டானார். அவருடன் இணைந்து பேட் செய்த ஜோஷ் இங்கிலிஷ் 28 ரன்களில் வெளியேறினார்.

இதனால் 193 ரன்களில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து தென் ஆப்பரிக்கா பவுலர்கள் நெருக்கடி கொடுத்தபோதிலும் ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோர் நிதானித்து பேட் செய்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

தென் ஆப்பரிக்கா பவுலர்களில் ஸ்பின்னர்களான கேசவ் மகராஜ்,டாப்ரிஸ் ஷம்ஸி ஆகியோர் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இருவரும் இணைந்து 20 ஓவரில் 66 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர், ஷம்ஸி 2, மகராஜ் ஒரு விக்கெட்டை எடுத்தார். வேகப்பந்து வீச்சாளார் கோட்ஸி 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே அதிரடி காட்டி ஆஸ்திரேலியாவின் நெருக்கடியை வெகுவாக குறைக்க காரணமாக இருந்த ட்ராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

 

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.