ஐபிஎல் 2025: அதிரடி தொடக்கம்.. Class பேட்டிங்.. சிஎஸ்கே அணியின் புதிய நம்பிக்கை! யார் இந்த ஷேக் ரஷீத்?
ஐபிஎல் 2025: இரண்டு சீசன்களாக பெஞ்சில் அமரவைக்கப்பட்ட இளம் பேட்ஸ்மேனான ஷேக் ரஷீத், சிஎஸ்கே அணிக்காக முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்கி நல்ல தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளார். அதிரடியாக இன்னிங்ஸை தொடங்கிய அவர் விரைவாக 27 ரன்கள் குவித்து அணிக்கு நல்ல தொடக்கத்தை தந்தார்.

ஐபிஎல் 2025 தொடரில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) இதுவரை விளையாடி 7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்விகளை தழுவி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்த சீசனில் முதல் போட்டியில் வெற்றி அதன் பிறகு 5 தோல்வி பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது சிஎஸ்கே அணி.
இந்த போட்டியில் சிஎஸ்கே ஓபனராக 20 வயதாகும் இளம் வீரர் ஷேக் ரஷீது அறிமுக வீரராக சிஎஸ்கே அணியில் களமிறங்கினார். மற்றொரு ஓபனரான ரச்சின் ரவீந்திராவுடன் இணைந்து சிஎஸ்கே அணிக்கு நல்ல தொடக்கத்தை தந்த ரஷீத், 4.5 ஓவரில் 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஷீத் 5 பவுண்டரிகளுடன் 19 பந்துகளில் 27 ரன்கள் அடித்து அவுட்டானார்.
லக்னோ பவுலர்களான ஷர்துல் தாக்கூர், ஆவேஷ் கான், திக்வேஷ் சிங் ரதி ஆகியோரின் ஓவர்களில் பவுண்டரிகளை விளாசினார் ரஷீத். இவரது கிளாஸ் பேட்டிங் சிஎஸ்கே அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்திருந்தது. ருதுராஜ் காயத்தால் விலகிய நிலையில், டேவான் கான்வேக்கு மாற்றாக ஓபனிங் பேட்ஸ்மேனாக இறக்கப்பட்ட ரஷீத் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். தனது தேர்வை நியாயபடுத்தியுள்ள ரிஷீத் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
யார் இந்த ஷேக் ரஷீத்?
ஆந்திரா மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஷேக் ரஷீத், உள்ளூர் கிரிக்கெட்டில் தங்கள் மாநில அணிக்காக விளையாடுகிறார். 2022ஆம் ஆண்டு யு19 உலகக் கோப்பை வென்ற இளம் இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்துள்ளார் ரஷீத். 2023 சீசன் முதல் சிஎஸ்கே அணியில் இடம்பிடித்து வந்தாலும், இரண்டு சீசன்கள் அவருக்கு விளையாடும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் போது, அவர் நான்கு போட்டிகளில் 201 ரன்கள் எடுத்தார். மேலும் இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த மூன்றாவது இந்திய வீரராகவும் இருந்தார். 19 போட்டிகளில் 46.04 சராசரியுடன் 1204 முதல் தர ரன்களையும் பதிவு செய்துள்ளார். இதற்கிடையில், அவர் 17 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார் ரஷீத். இதில் 29.33 சராசரி மற்றும் 127.07 ஸ்ட்ரைக் ரேட்டில் 352 ரன்கள் எடுத்துள்ளார்.
ரஷீத்துக்கு கிடைத்த வாய்ப்பு
இந்த தொடரில் முதல் போட்டியில் எதிரி அணியான மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக வெற்றியுடன் தொடங்கிய சிஎஸ்கே, அதன்பிறகு மற்றொரு எதிரி அணியான ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என அடுத்தடுத்து தொடர்ச்சியாக 5 தோல்விகளை தழுவியது.
சிஎஸ்கே அணியின் மோசமான செயல்பாடுக்கு தெறிக்கவிடும் விதமாக அதிரடி இன்னிங்ஸை வெளிப்படுத்தும் பேட்ஸ்மேன்கள் இல்லாததே காரணம் என விமர்சிக்கப்பட்டது. அத்துடன் ஷேக் ரஷீத், வன்ஷ் பேடி, ஆன்ட்ரே சித்தார்த் போன்ற திறமையான இளம் வீரர்கள் அணியில் இருந்து அவர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் பெஞ்சில் அமர்வைக்கப்படுவது எனவும் கருத்துகள் பகிரப்பட்டன.
இப்படியான சூழ்நிலையில் முக்கிய வீரரான ரவிச்சிந்திரன் அஸ்வின், டேவான் கான்வே ஆகியோர் பெஞ்சில் அமரவைக்கப்பட்ட நிலையில் ஷேக் ரஷீத், ஜேமி ஓவர்டான் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. தனக்கு கிடைத்த வாய்ப்பு நன்கு பயன்படுத்தி கவனத்தை பெற்றிருக்கும் ரிஷீத், இனி வரும் போட்டிகளிலும் தொடர்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
