IND vs NZ அரையிறுதி போட்டி மழையால் நடக்காவிட்டால் ரிசர்வ் நாள் இருக்கிறதா?
2023 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்ளும் நிலையில், இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அப்செட் செய்ய மழை வருமா?
2019 ODI உலகக் கோப்பை எடிஷனில், முதல் இடத்தில் இருந்த இந்தியா , நியூசிலாந்தை அரையிறுதியில் எதிர்கொண்டபோது, மான்செஸ்டரில் மழை அச்சுறுத்தல் இருந்தது. வருண பகவான், ரசிகர்கள் மற்றும் வீரர்களுக்கு கருணை காட்டியது போல் தோன்றியபோது, நியூசிலாந்து இன்னிங்ஸில் இடைவிடாத மழை 3.5 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் போட்டியை நிறுத்தியது.
ஐசிசியின் ஆட்ட நிலைமைகளின்படி ஆட்டம் ரிசர்வ் நாளுக்கு மாற்றப்படுவதற்கு முன்பே ஓவர்கள் குறைக்கத் தொடங்கின. மறுநாள் ஆட்டம் தொடங்கிய பிறகு இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்த இந்தியா, 2023 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும் நிலையில், மழை அச்சுறுத்தல் குறித்த கேள்வி இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மீண்டும் துளைத்து எடுக்கிறது.
புதன்கிழமை மும்பை வானிலை முன்னறிவிப்பு என்ன?
கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி, குறிப்பாக வான்கடேவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோதலைக் காண வருவோருக்கு, புதன்கிழமை வானிலை சீராக இருக்கும். அக்யூவெதரின் கூற்றுப்படி, இது "மங்கும் சூரிய ஒளியுடன் மிகவும் சூடாக இருக்கும்." உண்மையில் மழைப்பொழிவின் நிகழ்தகவு 1 சதவீதம் மற்றும் இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்புகள் இல்லை" என்றே கூறப்படுகிறது.
முன்னறிவிப்பு என்ன சொன்னாலும், மழையின் அபாயத்தை நிராகரிக்க முடியாது. எனவே, மும்பையில் 2023 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டத்தை மழை பாதித்தால், கட்-ஆஃப் நேரத்தை அடையும் வரை ஆரம்பத்தில் ஓவர்கள் குறைக்கப்படும். இருப்பினும், இடைவிடாத மழை மும்பையில் நிற்கவில்லை என்றால், போட்டி அதிகாரிகள் ஆட்டத்தை வியாழன் அன்று இருக்கும் ரிசர்வ் நாளுக்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஐசிசி லீக்-நிலைப் போட்டிகளுக்கு ரிசர்வ்-டே கொள்கையை கொண்டிருக்கவில்லை, ஆனால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி முழுவதும் இது ஒரு ஆப்ஷனாக இருக்கும். ஆட்டம் ரிசர்வ் நாளுக்கு மாற்றப்பட்டால், அது முதல் ஆட்ட நாளில் நிறுத்தப்பட்ட அதே ஓவரில் இருந்து தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் டேவும் நடத்த முடியவில்லை என்றால் என்ன ஆகும்?
ரிசர்வ் நாளிலும் நடத்த முடியாவிட்டால், வெற்றியாளரைத் தீர்மானிக்க டக்வொர்த் லூயிஸ் முறை பயன்படுத்தப்படும், இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி குறைந்தபட்சம் சில ஓவர்கள் விளையாடியிருந்தால் இது பொருந்தும். முறை பொருந்தாத பட்சத்தில், புள்ளிகள் பட்டியலில் அதிக இடம் பெற்ற அணி இறுதிப் போட்டிக்கு செல்லும். எனவே, இந்த விஷயத்தில், ஒன்பது லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த இந்தியா, நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்தை விட மூன்றாவது உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
டாபிக்ஸ்