டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்களை கடந்த விராட் கோலி.. நியூசிலாந்துக்கு எதிராக அரை சதம் அடித்து அசத்தல்
டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்களை கடந்த நான்காவது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். 2வது இன்னிங்ஸில் அவர் அரை சதம் பதிவு செய்து அசத்தினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்களை கடந்த விராட் கோலி.. நியூசிலாந்துக்கு எதிராக அரை சதம் அடித்து அசத்தல் (AFP)
டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்களை எட்டிய நான்காவது இந்திய பேட்ஸ்மேன் ஆனார் விராட் கோலி. டெஸ்ட் போட்டிகளில் 9000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் பேட்டிங் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோருடன் கோலி இணைந்தார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸின் போது கோலி இந்த மைல்கல்லை எட்டினார், அங்கு அவர் ஆதிக்கம் செலுத்தும் அரைசதத்தையும் அடித்தார். ஆனால், 70 ரன்கள் எடுத்தபோது 3ம் நாளின் கடைசி பந்தில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
ரச்சின் ரவீந்திராவின் அற்புதமான சதத்தால் நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸில் அதிரடி காண்பித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.