முதல் முறையாக 5 விக்கெட்டுகள்..திருப்பம் தந்த வருண் சக்கரவர்த்தி - பினிஷ் செய்த ஸ்டப்ஸ்
டி20 போட்டிகளில் முதல் முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய வருண் சக்கரவர்த்தி திருப்பம் தந்தார். ஆனால் ஸ்டப்ஸ் தனது அதிரடியால் அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் சென்றிருக்கும் இந்தியா நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி விளையாடுகிறது. முதல் டி20 போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி கெபெர்ஹாவில் நடைபெற்றது. முதல் போட்டியில் களமிறங்கிய அதே அணியுடன் இந்தியா இந்த போட்டியிலும் விளையாடியது
பேட்டிங்கில் தடுமாறிய இந்தியா
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பரிக்கா கேப்டன் ஐடன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 39, அக்ஷர் படேல் 27, திலக் வர்மா 20 ரன்கள் எடுத்தனர்.
தென் ஆப்பரிக்கா பவுலிங்கில் மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, ஆண்டிலே சிமெலேன், ஐடன் மார்க்ரம், பீட்டர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். ஸ்பின்னரான கேசவ் மகாராஜ் மட்டும் விக்கெட் வீழ்த்தவில்லை.
தென் ஆப்பரிக்கா சேஸிங்
இதைத்தொடர்ந்து சேஸிங்கில் களமிறங்கிய தென் ஆப்பரிக்கா 19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. இதனால் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று 1-1 என சமநிலையில் உள்ளது.
தென் ஆப்பரிக்கா பேட்ஸ்மேன்களில் அதிகபட்சமாக ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 47, ரீசான் ஹெண்டரிக்ஸ் 24, ஜெரால்டு கோட்ஸி 19 ரன்கள் எடுத்தனர்.
இந்திய பவுலர்களில் சிறப்பாக பந்து வீசிய வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
திருப்புமுனை தந்த வருண் சக்கரவர்த்தி
மிகவும் குறைவான இலக்கு, பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்த ஆடுகளம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் கவனமாக பேட் செய்து ரன்களை குவித்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.
இதில் தென் ஆப்பரிக்கா பேட்ஸ்மேன்களை திணறடித்தார் இந்திய ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தி. தனது கடைசி ஓவரில் முக்கிய பேட்ஸ்மேன்களான கிளாசன், மில்லர் ஆகியோர் அடுத்தடுத்து தூக்கி திருப்புமுனை ஏற்படுத்தினார். இந்த நேரத்தில் தென் ஆப்பரிக்காவுக்கு தேவைப்படும் ரன்ரேட் அதிகரித்தது. வருண் சக்கரவர்த்தி 4 ஓவரில் 19 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது டி20 போட்டிகளில் அவர் வீழ்த்தும் முதல் 5 விக்கெட்டுகள் ஆகும்.
பினிஷ் செய்த ஸ்டப்ஸ்
ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ஸ்டப்ஸ் பொறுப்புடன் பேட் செய்து வந்தார். கடைசி 5 ஓவரில் 41 ரன்கள் தேவை என்று இருந்தபோது மெல்ல அதிரடிக்கு மாறினார். அவருடன் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன் ஜெரால்டு கோட்ஸி கம்பெனி கொடுக்க இருவரும் இணைந்து ஆட்டத்தை 19வது ஓவர் முடிவிலேயே பினிஷ் செய்தனர். 12 பந்துகளில் 13 ரன்கள் தேவை என்று இருந்தபோது அர்ஷ்தீப் வீசிய அந்த ஓவரில் நான்கு பவுண்டரிகளை அடித்து தென் ஆப்பரிக்கா அணி வெற்றியை எட்டியது.
இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நவம்பர் 13ஆம் தேதி சென்சுரியனில் நடைபெற இருக்கிறது.