இந்திய ஸ்பின்னர்கள் சுழலில் சுருண்ட தென் ஆப்பரிக்கா பேட்ஸ்மேன்கள்! பவுலிங்கில் வெறித்தனம் காட்டிய வருண் - பிஷ்னோய்
பவுலிங்கில் வெறித்தனம் காட்டிய வருண் - பிஷ்னோய் கூட்டணி. இந்திய ஸ்பின்னர்கள் சுழலில் தாக்குபிடிக்க முடியாமல் சுருண்ட தென் ஆப்பரிக்கா பேட்ஸ்மேன்கள் தவறான ஷாட்களால் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் சென்றிருக்கும் இந்தியா நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி விளையாடுகிறது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற்றது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி இந்த தொடரில் களமிறங்கியது.
பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கலக்கிய இந்தியா, இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்தியா ரன்குவிப்பு
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பரிக்கா அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது.அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 107, திலக் வர்மா 33, சூர்யா குமார் யாதவ் 21 ரன்கள் எடுத்தனர்.
தென்ஆப்பரிக்கா பவுலர்களில் ஜெரால் கோட்ஸி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், பேட்ரிக் க்ரூகர், பீட்டர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
தென் ஆப்பரிக்கா சேஸிங்
இதையடுத்து 203 ரன்கள் என்ற மிக பெரிய இலக்கை சேஸ் செய்த தென் ஆப்பரிக்கா 17.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்கள் எடுத்தது. இதனால் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசன் 25, ஜெரால்டு கோட்ஸி 23, ரியான் ரிக்கல்டன் 21 ரன்கள். மற்றவர்கள் பெரிதாக பங்களிப்பு தரவில்லை.
பவர்ப்ளே முடிவதற்குள் டாப் மூன்று விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்பரிக்கா. இருப்பினும் ரன் குவிக்கும் முயற்சியில் தவறான ஷாட்களால் தென் ஆப்பரிக்கா பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
சுழலில் மிரட்டிய இந்திய ஸ்பின்னர்கள்
இந்திய பவுலர்களில் ஸ்பின்னர்களான வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய் ஆகியோர் சுழலில் மிரட்டியதோடு, தென் ஆப்பரிக்கா பேட்ஸ்மேன்கள் திணறடித்தனர். சிறப்பாக பவுலிங் செய்த இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். வேகப்பந்து வீச்சாளர்களில் ஆவேஷ் கான் 2. அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி நவம்பர் 10ஆம் தேதி கெபெர்ஹாவில் வைத்து நடைபெறுகிறது.
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பரிக்காவில் நடைபெற்ற டி20 போட்டிகளில் 7வது வெற்றியை பெற்றுள்ளது.
முதல் இந்தியராக சஞ்சு சாம்சன் சாதனை
இந்திய இன்னிங்ஸில் தொடக்கம் முதலே தென் ஆப்பரிக்கா பவுலர்களின் பந்து வீச்சை நாலாபுறம் பவுண்டரி, சிக்ஸர்கள் என பறக்கவிட்டு அதிரடி காட்டி வந்த சஞ்சு சாம்சன். அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு 27 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
அதன் பிறகும் அதிரடியை தொடர்ந்த சாம்சன் 47வது பந்தில் சதமடித்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனை புரிந்தார். அத்துடன் உலக அளவில் இந்த சாதனையை நிகழ்த்திய நான்காவது பேட்ஸ்மேன் என்ற பெருமை பெற்றார்.
50 பந்தில் 107 ரன்கள் அடித்த சாம்சன் சிக்ஸ் முயற்சியில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தனது இன்னிங்ஸில் 7 பவுண்டரி, 10 சிக்ஸர்களை அடித்து துவம்சம் செய்தார்.