ஐபிஎல் 2025: அதிகமாக கேட்ச்கள் டிராப் செய்யப்பட்ட சீசன்.. மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகளின் புள்ளிவிவரங்கள்
ஐபிஎல் 2025 தொடரில் ஒவ்வொரு அணியை சேர்ந்த பேட்ஸ்மேன்களும் பிரமிக்க வைக்கும் விதமாக பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடித்து ரன்குவிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதை போன்ற மேலும் சில புள்ளிவிவரங்கள் இந்த சீசனில் முன்னுக்கு வந்துள்ளன. இவை இந்த லீக்கின் தரத்தை குறைக்கும் விதமாக அமைந்துள்ளன.

இந்த ஐபிஎல் சீசனில், ஏப்ரல் 22, 2025 வரை 40 போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன. மேலும் எந்த சீசனினும் இல்லாத அளவில் இந்த முறைதான் 40 போட்டிகள் வரை அதிக கேட்சுகள் தவறவிடப்பட்டுள்ளன. இந்த சீசனில் ஃபீல்டிங் நிலை என்பது அவ்வளவு சிறப்பாக இல்லை என்றே கூறும் அளவில் அணிகள் பீல்டிங்கல் தாராளமாக ரன்களை தவறவிட்டுள்ளனர். மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில் இந்த சீசனில் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் பீல்டில் சிறப்பாக உள்ளது.
அதிக கேட்ச்களை விட்ட பீல்டர்கள்
ஐபிஎல் 2025இன் முதல் 40 போட்டிகளில் மொத்தம் 111 கேட்சுகள் தவறவிடப்பட்டுள்ளன. 2020க்குப் பிறகு புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, சீசனின் முதல் 40 போட்டிகளில் அதிக கேட்ச்கள் இந்த முறை தான் தவறவிடப்பட்டுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் இடையே நடந்த சீசனின் 40வது போட்டியில் முதல் இன்னிங்ஸில் மூன்று கேட்சுகள் தவறவிடப்பட்டன. இந்த சீசனில் அதிக கேட்ச்களை தவறவிட்ட வீரர்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலர் கலீல் அகமது, டெல்லி கேபிடல்ஸ் ஆல்ரவுண்டர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் முறையே தலா 4 கேட்ச்களை தவறவிட்டுள்ளனர்.