Varun Aaron: 20 ஆண்டு கால சுவாசம்.. பந்து வீச்சுதான் எனது காதல்.. இந்தியாவின் அதிவேகப்பந்து வீச்சாளர் ஓய்வு அறிவிப்பு
Varun Aaron Retires: காயம் காரணமாக அணிக்கு வருவதும், போவதுமாக இருந்தவர் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன். சமீபத்தில் நடந்த முடிந்த விஜய் ஹசாரே தொடருடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் 2011 முதல் 2015 காலகட்டத்தில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடிவர் வருண் ஆரோன். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இவர் அந்த காலகட்டத்தில் இந்தியாவின் அதிவேக பந்துவீச்சாளராக வர்ணிக்ப்பட்டார்.
20 ஆண்டு காலம் சுவாசித்துள்ளேன்
இதையடுத்து 35 வயதாகும் வருண் ஆரோன், அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். ஓய்வு குறித்து அவர் தனது இன்ஸ்டா பதிவில், " கடந்த 20 வருடங்களாக, நான் வேகமாக பந்து வீசுவதில்தான் வாழ்ந்து, சுவாசித்து, செழித்து வளர்ந்திருக்கிறேன். இன்று, மிகுந்த நன்றியுடன், அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து எனது ஓய்வு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்.
பந்து வீச்சுதான் எனது காதல்
எனது கிரிக்கெட் வாழ்க்கையை அச்சுறுத்தும் பல காயங்களிலிருந்து மீள்வதற்கு எனது உடல் மற்றும் மன வரம்புகளை பல வருடங்களாக நான் தள்ள வேண்டியிருந்தது. இவற்றிலிருந்து மீண்டு, மீண்டும் அணிக்குத் திரும்ப வேண்டியிருந்தது. இது தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள பிசியோக்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் இடைவிடாத அர்ப்பணிப்பால் மட்டுமே சாத்தியமானது.
எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த விளையாட்டுடன் ஆழமாக இணைந்திருக்கும் அதே வேளையில், வாழ்க்கையில் சிறிய மகிழ்ச்சிகளை அனுபவிக்க நான் இப்போது எதிர்நோக்கி இருக்கிறேன். வேகப்பந்து வீச்சு எனது முதல் காதல், நான் மைதானத்தை விட்டு வெளியேறினாலும், அது எப்போதும் நான் யார் என்பதில் குறிப்பதில் ஒரு பகுதியாக இருக்கும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே தொடர் 2025இல் ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடிய இவர், தொடர் முடிந்த கையொடு ஓய்வை அறிவித்துள்ளார். இனி இந்திய அணியில் தனக்கு இடம் கிடைப்பது கடினம் என்பதை உணர்ந்து கொண்ட அவர் ஓய்வை அறிவித்துள்ளார்.
வருண் ஆரோன் கிரிக்கெட் பயணம்
2011இல் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுகமான ஆரோன், அதே ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் முதல் முறையாக களமிறங்கினார். இவர் அறிமுகமான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் ஆகிய இரண்டுமே வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
கடைசியாக 2014இல் இலங்கைக்கு எதிராக ஒரு நாள் போட்டியிலும், 2015இல் தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக பெங்களுருவில் நடந்த டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்றார்.மொத்தமாக 9 டெஸ்ட் மற்றும் 9 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் இவர், 29 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் வருண் ஆரோன்
காயம் காரணமாக அணிக்குள் வருவதும் போவதுமாக இருந்ததோடு, இளம் பந்து வீச்சாளர்களின் வருகையால் ஓரங்கட்டப்பட்டார் வருண் ஆரோன். இருப்பினும் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வந்தார்.
உள்ளூர் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தி ஆடி வந்த வருண் ஆரோன், ஜார்க்கண்ட் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடி இருக்கிறார். டெல்லி மற்றும் பரோடா ஆகிய அணிகளுக்காகவும் விளையாடி இருக்கிறார்.
66 முதல் தர கிரிக்கெட்டில் விளையாடி 173 விக்கெட்டுகளையும், 88 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 141 விக்கெட்டுகளையும் வீழ்த்த்தியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகள்
ஐபிஎல் போட்டிகளிலும் ஜொலித்துள்ள வருண் ஆரோன் மொத்தம் 52 போட்டிகளில் விளையாடி 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2010இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்த ஆரோன் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. 2011 முதல் 2013 வரை டெல்ல டேர்டெவில்ஸ் அணியில் இடம்பிடித்தார். முதல் முறையாக 2011இல் ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கினார்.
2014 முதல் 2016 வரை ஆர்சிபி, 2017-18 கிங்ஸ் லெவன் பஞ்சாப், 2019 - 20 ராஜஸ்தான் ராயல்ஸ், 2022 குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்