Murali Karthik: இந்திய கிரிக்கெட்டின் கேமியோ நாயகன்..தரமான பவுலிங் ஆல்ரவுண்டர் முரளி கார்த்திக் பிறந்தநாள்-team india former bowling allrounder murali karthik birthday today - HT Tamil ,மட்டைப்பந்து செய்திகள்
தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Murali Karthik: இந்திய கிரிக்கெட்டின் கேமியோ நாயகன்..தரமான பவுலிங் ஆல்ரவுண்டர் முரளி கார்த்திக் பிறந்தநாள்

Murali Karthik: இந்திய கிரிக்கெட்டின் கேமியோ நாயகன்..தரமான பவுலிங் ஆல்ரவுண்டர் முரளி கார்த்திக் பிறந்தநாள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 11, 2024 11:00 AM IST

HBD Murali Karthik: இந்திய கிரிக்கெட்டின் கேமியோ நாயகனாக சில மேட்ச் வின்னிங் ஆட்டத்தை விளையாடிய தரமான பவுலிங் ஆல்ரவுண்டர் முரளி கார்த்திக். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இவரது ஆல்ரவுண்ட் ஆட்டத்தை என்றும் ரசிகர்களால் மறக்க முடியாது.

Murali Karthik: இந்திய கிரிக்கெட்டின் கேமியோ நாயகன்..தரமான பவுலிங் ஆல்ரவுண்டர் முரளி கார்த்திக் பிறந்தநாள்
Murali Karthik: இந்திய கிரிக்கெட்டின் கேமியோ நாயகன்..தரமான பவுலிங் ஆல்ரவுண்டர் முரளி கார்த்திக் பிறந்தநாள்

இடது கை ஆர்த்தோடாக்ஸ் பவுலிங், இடது கை பேட்டிங் என இருந்து வரும் முரளி கார்த்திக் 61 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கிரிக்கெட் பயணம்

ஆரம்பத்தில் முரளி கார்த்திக் மித வேக பந்து வீச்சாளராகத்தான் இருந்துள்ளாராம். பின்னர் இந்தியாவின் கிளாசிக் ஸ்பின்னர்களாக திகழ்ந்த பிஷன் சிங் பேடி, மனிந்தர் சிங், வெங்கடபதி ராஜு போல் இடது கை ஸ்பின்னராக மாறி அதற்கேற்ப தன்னை தக்கவமைத்து கொண்டார்.

யு16 கிரிக்கெட்டில் டெல்லிக்காக விளையாடிய இவர் பவுலிங், பேட்டிங்கில் அணியின் வெற்றிக்கான பங்களிப்பை கொடுத்து தனது திறமையை வெளிக்காட்டினார். அப்படியே யு19 உள்ளூர் கிரிக்கெட்டிலும் தனது பார்மை தொடர்ந்தார். இந்தியா ரயில்வேஸ் அணிக்காக விளையாடி அவர் ஒரே சீசனின் 7 போட்டிகளில் 38 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் தொடர்ச்சியாக மூன்று முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இதன் மூலம் யு19 இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். இதில் தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான தொடரில் வெற்றிக்கான பங்களிப்பை அளித்தார்.

இந்திய அணி என்ட்ரி

2000ஆவது ஆண்டில் கங்குலி கேப்டன்சியில் தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான உள்ளூர் கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் அறிமுகமானார் கார்த்திக். ஹர்பஜன் சிங் காயம் காரணமாக விளையாட முடியாத நிலையில் இவர் அணியில் சேர்க்கப்பட்டார். சராசரியான பந்து வீச்சு மூலம் அணியின் மூன்றாவது ஸ்பின்னராக சில போட்டிகளில் சேர்க்கப்பட்டார். இவர் தனது கடைசி டெஸ்ட் போட்டியிலும் தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக 2004இல் விளையாடினார்.

டெஸ்ட் போட்டிகளில் அளித்த பங்களிப்பு காரணமாக 2002இல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். இருப்பினும் 2003 உலகக் கோப்பை அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. 2004 பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது சேர்க்கப்பட்டார். இவர் விளையாடிய 3 ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது.

மறக்க முடியாத இன்னிங்ஸ்

2007இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரின் கடைசி போட்டியில் பவுலிங் மற்றும் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை தந்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக திகழ்ந்தார்.

தோனி கேப்டன்சி செய்த முதல் தொடரில் இந்திய ஏற்கனவே தொடரை இழந்து இருந்தாலும், கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றியை எதிர்நோக்கி இருந்தது. மும்பை வான்கடேவில் நடந்த இந்த போட்டியில் பவுலிங்கில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை திணறடித்த கார்த்திக் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் 194 ரன்கள் என குறைவான ஸ்கோரை சேஸ் செய்தபோது இந்தியா பேட்டிங் தடுமாறிய நிலையில் ஜாகிர் கானுடன் இணைந்து 52 ரன்கள் பார்ட்னஷிப் அமைத்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார். பவுலிங், பேட்டிங் என ஆல்ரவுண்டராக இந்த போட்டியில் ஜொலித்த முரளி கார்த்திக் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

இதேபோல் 2004இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உள்ளூர் தொடரில் இந்தியா தொடரை இழந்த நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் ஹர்பஜன், கும்ப்ளே, கார்த்திக் மூன்று ஸ்பின்னர்களுடன் இந்தியா களமிறங்கியது.

இந்த தொடரில் ஒரு வெற்றி கூட பெறாத இந்தியா ஆறுதல் வெற்றியை பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், நான்காவது இன்னிங்ஸில் 107 ரன்கள் என்ற எளிய இலக்கை சேஸ் செய்ய விடாமல் இந்திய ஸ்பின் கூட்டணி ஆஸ்திரேலியாவை பொட்டலம் கட்டியது. இந்த போட்டியில் அற்புதமான பவுலிங் செய்து ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை திணறடித்த முரளி கார்த்திக் 3 முக்கிய விக்கெட்டுகளை தூக்கினார்.

ஐபிஎல் கிரிக்கெட்

2007க்கு பிறகு பார்ம் இழந்த இவருக்கு அதன் பின்னர் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஐபிஎல் தொடர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு, புணே வாரியர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு விளையாடியுள்ளார்.

31 வயதில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இதை செய்த வயதான இந்திய வீரர் என்ற சாதனை புரிந்தார். அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் வர்ணனையாளராகவும், தொகுப்பாளராகவும் கிரிக்கெட்டில் பங்களிப்பை அளித்து வருகிறார். இந்திய கிரிக்கெட்டில் கேமியோ நாயகனாக சில மேட்ச் வின்னிங் ஆட்டத்தை விளையாடிய வீரராக திகழும் முரளி கார்த்திக்குக்கு இன்று பிறந்தநாள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.