Suryakumar Yadav: ‘டாஸ் போடுவதற்கு முன் சக வீரர்களிடம் இதைதான் கூறினேன்’-சூர்யகுமார் யாதவ்
Ind vs Aus: நேற்றிரவு திருவனந்தபுரத்தில் 2வது டி20 ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், கேப்டன் பதவியும் அணியும் எனக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தவில்லை, மாறாக சக வீரர்கள் பொறுப்பை நன்றாக ஏற்றுக்கொண்டு செயல்பட்டார்கள் என்றார்.
ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்தது.
இதைத் தொடர்ந்து நேற்றிரவு திருவனந்தபுரத்தில் 2வது டி20 ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்தது இந்திய அணி.
யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் அரை சதங்களை விளாசினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்களை எடுத்தது இந்தியா.
இதையடுத்து, 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா சேஸிங் செய்தது. ஆனால், அந்த அணியால் 191 ரன்களுக்கு மேல் எடுக்க முடியவில்லை. 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களில் சரணடைந்தது ஆஸி.
இந்திய பவுலர்கள் பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்ணோய் ஆகியோர் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
போட்டி முடிவடைந்த பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:
சக வீரர்கள் எனக்கு அதிக அழுத்தம் கொடுக்கவில்லை, அவர்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்பட்டார்கள். டாஸ் போடுவதற்கு முன்பு நான் அவர்களிடம், முதலில் பேட்டிங் செய்ய தயாராகுங்கள் என்று தான் கூறினேன். மூன்று ஓவர்களுக்குப் பிறகு நிறைய பனி பெய்தது. கடைசி கட்டத்தில் ரிங்கு சிங் சிறப்பாக விளையாடினார்" என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.
தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
முன்னதாக, ஆஸி. தரப்பில் நாதன் எல்லிஸ் (3/45), மார்கஸ் ஸ்டோனிஸ் (1/27) ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
25 பந்துகளில் 53 ரன்கள் அடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்