Ranji Trophy : ரஞ்சி டிராபியில் சூர்யகுமார் மற்றும் சிவம் துபே.. மும்பை அணிக்காக காலிறுதியில் களம்!
சூரியகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே ரஞ்சி ட்ராபி காலிறுதிப் போட்டியில் விளையாட உள்ளனர். இதுவரை டி20 தொடரில் விளையாடி வந்த அவர்கள், உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு திரும்புகிறார்கள்.
இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஆல்ரவுண்டர் சிவம் துபே இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வந்தனர். இந்நிலையில், விரைவில் அவர்கள் ரஞ்சி ட்ராபி போட்டியில் விளையாட உள்ளனர். ஹரியானாவுக்கு எதிராக பிப்ரவரி 8 ஆம் தேதி தொடங்கும் ரஞ்சி ட்ராபி காலிறுதிப் போட்டிக்காக, 18 பேர் கொண்ட மும்பை அணியில் சூர்யாகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
யாரெல்லாம் கால் இறுதியில்?
சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே இருவரும் சமீபத்தில் முடிவடைந்த ஐந்து போட்டிகள் கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தனர். இருவரும் ரஞ்சி ட்ராபியின் நடப்பு சீசனில் 42 முறை சாம்பியனான மும்பை அணி சார்பாக ஒரு போட்டியில் விளையாடி உள்ளனர். ரஞ்சி டிராபியில் மேகாலயாவை இன்னிங்ஸ் மற்றும் 456 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, மும்பை அணி காலிறுதிக்கு முன்னேறியது. அதேபோல், ஜம்மு காஷ்மீர் அணி எலிட் குரூப் A இல் இருந்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய மற்றொரு அணியாகும்.
மும்பை காலுறுதிக்கு முன்னேறியது எப்படி?
கடந்த ஆண்டு அக்டோபரில் சூரியகுமார் மும்பை அணி சார்பாக மகாராஷ்டிராவுக்கு எதிராக ரஞ்சி ட்ராபி போட்டியில் விளையாடினார். சிவம் துபே ஜம்மு காஷ்மீருக்கு எதிரான போட்டியில் விளையாடினார். அந்தப் போட்டியில் இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். மும்பை அந்தப் போட்டியில் தோல்வியடைந்தது. இதனால் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதில் சந்தேகம் எழுந்தது. ஆனால், மேகாலயாவுக்கு எதிரான மும்பை அணியின் வெற்றி, அந்த அணியை காலிறுதிக்கு அழைத்துச் சென்றது.
மும்பை அணி ஹரியானாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியை ரோஹ்தக்கில் உள்ள லாலி சவுத்ரி பன்சிலால் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடும். ஹரியானா அணி குரூப் C இல் முதலிடத்தில் உள்ளது. மும்பை அணி ஹர்ஷ் தன்னா என்ற புதிய வீரரை அணியில் சேர்த்துள்ளது. ஹர்ஷ் இதுவரை நான்கு லிஸ்ட் A போட்டிகளில் விளையாடி உள்ளார்.
மும்பை அணி:
அஜிங்கியா ரஹானே (கேப்டன்), ஆயுஷ் மஹாத்ரே, அங்கிருஷ் ரகுவன்ஷி, அமோக் பட்கல், சூரியகுமார் யாதவ், சித்தேஷ் லாடு, சிவம் துபே, ஆகாஷ் ஆனந்த் (விக்கெட் கீப்பர்), ஹார்டிக் தாமோர் (விக்கெட் கீப்பர்), சூர்யாஷ் செட்ஜே, சார்துல் தாக்கூர், ஷாம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியன், மோஹித் அவஸ்தி, சில்வெஸ்டர் டிசூசா, ராய்ஸ்டன் டயஸ், அத்வர்வ் அன்கோலேகர் மற்றும் ஹர்ஷ் தன்னா
