ஐபிஎல் 2025: சொந்த மண்ணில் கெத்து காட்டிய ஹைதராபாத் அணி.. ராஜஸ்தான் போராடித் தோல்வி
ஐபிஎல் 2025: முன்னாள் ஐபிஎல் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தங்களது இந்த சீசனின் முதல் ஆட்டத்தில் தோல்வியைச் சந்தித்தது.
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றியைப் பதிவு செய்தது. 287 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்ட முடியாமல் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்தது. 44 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி ஜெயித்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அதிரடியாக ஆடி 286 ரன்களை குவித்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து இந்த ஸ்கோரை எட்டியது ஹைதராபாத் அணி. 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ராஜஸ்தான் விளையாடியது. ஆனால், அந்த ஸ்கோரை எட்டிப்பிடிக்க ராஜஸ்தானால் முடியவில்லை. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச இரண்டாவது ஸ்கோர் 286 ரன்கள் ஆகும். முதலிடத்திலும் ஹைதராபாத் அணியே உள்ளது. கடந்த ஆண்டு ஆர்சிபி அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி 287 ரன்கள் எடுத்தது.
ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஆகியோர் களமிறங்கினர். ஆனால், யஷஸ்வி 1 ரன்னில் நடையைக் கட்டினார். சஞ்சு மட்டும் நின்று விளையாடி 66 ரன்கள் எடுத்தார்.
