Sri Lanka Innings: ODI-இல் 2வது சதம் பதிவு செய்த அசலங்கா.. வங்கதேசத்திற்கு 280 ரன்கள் இலக்கு
World Cup 2023: 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் விளையாடவுள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 38வது போட்டி வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையே டெல்லியில் நடைபெறுகிறது. பகலிரவு ஆட்டமாக அருண் ஜெட்லி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்கியது.
டாஸ் வென்ற வங்கதேசம், இலங்கையை பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் இலங்கை அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்களை எடுத்தது. 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் விளையாடவுள்ளது.
தொடக்க ஆட்டக்காரராக பதும் நிசங்கா களம் புகுந்தார். அவர் 41 ரன்கள் விளாசினார். எனினும் அரை சதம் பதிவு செய்வதற்குள் துரதிருஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.
குசால் பெரேரா 4 ரன்களிலும், கேப்டன் குசால் மெண்டிஸ் 19 ரன்களிலும் நடையைக் கட்டினர்.
பின்னர் வந்த சதீரா சமரவிக்ரமா 41 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்த உதவினார்.
மறுபக்கம் சரித் அசலங்கா நிதானமாக விளையாடி பின்னர் விஸ்வரூபம் எடுத்தார். அவர் அதிரடியாக ஆடி சதம் பதிவு செய்தார். 105 பந்துகளில் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் விளாசி 108 ரன்கள் எடுத்திருந்தபோது தன்ஸிம் பந்துவீச்சில் லிட்டன் தாஸிடம் கேட்ச் ஆனார்.
தனஞ்செய டி சில்வா 34 ரன்களிலும், மஹீஷ் தீக்ஷனா 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 10 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார் தன்ஸிம்.
கேப்டன் ஷாஹிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
முன்னதாக, உலகக் கோப்பை 2023 தொடருக்கு முன்னரே முக்கிய வீரர்களின் காயம் இலங்கை அணிக்கு பெரும் தலைவலியாகவே இருந்தது. இந்த சூழ்நிலையில் உலகக் கோப்பை போட்டிகளில் தெளிவாகவே அது தெரிந்ததது. பேட்டிங்கில் ஜொலித்தால் பவுலிங்கில் சொதப்பல், பவுலிங்கில் கலக்கினால் பேட்டிங்கில் சொதப்பல் என்றே உலகக் கோப்பை தொடர் முழுவதும் விளையாடி வந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்